கனவு நாயகன் கலாம்!

அன்பு நண்பர்களே...
ஜூலை 27, 2015...
நம் அனைவரின் நினைவுகளிலும் மறக்க முடியாத, மனதை வலியாக்கிய நாள். ‘கனவு காணுங்கள்’ என நம் இதழங்களில் நம்பிக்கை விதைத்த நாயகன் விடைபெற்ற நாள்.
நேரு மாமா எனப் பாசமாக அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, இந்தியக் குழந்தைகளின் இதயங்களில் இடம்பிடித்தவர் கலாம்.
உண்மையான அன்பு, உற்சாகமான வார்த்தைகள், துறுதுறுப்பான செய்கைகள், தூய்மையான நடவடிக்கைகள் மூலமே குழந்தைகளைக் கவர முடியும். எப்போதும், எதையாவது அறிந்துகொள்ள ஆவலாக இருக்கும் ஒரு குழந்தைக்கான மனதோடு இருந்தால்தான் அது சாத்தியம்.

அறிவியல் ஞானி, குடியரசுத் தலைவர் என உயரே உயரே சென்றபோதும், வருங்கால இந்தியாவை உருவாக்கப்போகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களோடு இருக்கும் நேரத்தை உருவாக்கிக் கொண்டார். நாட்டின் தலைநகரில் இருக்கும் இந்தியாவின் முதல் குடிமகன், ஒரு சிறிய ஊரில் முதல் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் கேள்விக்கு, புன்னகையோடு பதில் சொல்ல முடியும் என்பதை நிரூபித்தது ஆச்சர்யம்.
அந்தப் பண்புதான் இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் ‘ராமேஸ்வரம்’ எனும் ஊருக்கு லட்சக்கணக்கான மக்களை கண்ணீரோடு வரவைத்தது. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து விடைபெற்றிருக்கும் அந்த மாமனிதருக்கு மரியாதைசெய்யும் விதமாக இந்தப் புத்தகம்.
அவரது பள்ளிக் காலம் தொடங்கி, ஜனாதிபதியாக உயர்ந்தது வரை, அப்துல் கலாமின் வரலாறு படக் கதையாக உள்ளது. ஜனாதிபதியாக ஆற்றிய சிறப்பான பணிகள், தன்னம்பிக்கை அளிக்கும் அவரது பொன்மொழிகள் என என்றென்றும் பாதுகாக்கும் பொக்கிஷமாக, உங்களுக்கான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் இருக்கும்.
வாசித்து வளருங்கள். இந்த நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்களே!
- ஆசிரியர்




























































திருக்குறள், கீதை, பைபிள் என அனைத்து நூல்களையும் படித்து, அவற்றில் வரும் கருத்துக்களை தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் அப்துல் கலாம். முக்கியமான தருணங்களில் அந்தக் கருத்துக்களை அழகாக வெளிப்படுத்துவார். இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், ‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்கிற கீதையின் வரிகளைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில், திருக்குறளை டிஜிட்டலில் ஒளிரச் செய்தார். அங்கே இருக்கும் மொகல் தோட்டத்தைப் பொதுமக்கள் பார்வையிடத் திறந்துவிட்டார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற வருடத்தில், கிராமப்புறங்களுக்கு நகர்ப்புறத்தின் வசதிகளை உருவாக்கித் தரும் PURA (Provision of Urban Amenities to Rural Areas) என்ற திட்டத்தைத் தன்னுடைய கனவாக முன்வைத்தார். மத்திய அரசு அதனை ஏற்றதன் மூலம், பல்வேறு கிராமங்கள், நகர்ப்புற வசதியைப் பெற்றன.
தான் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 17 மாநில சட்டசபைகளில், வருங்கால இந்தியாவைச் சிறப்பாகக் கட்டமைப்பது குறித்து உரைகள் நிகழ்த்தினார். பல்வேறு மாநில அரசுகள் கலாமின் வழிகாட்டுதலில் தங்களின் செயல்திட்டங்களை வடிவமைத்துக்கொண்டன.
குடியரசுத் தலைவராக இருந்த காலம், அதற்குப் பிந்தைய 7 ஆண்டுகள் சேர்த்து இரண்டு கோடிக்கும் அதிகமான இளைஞர்களைச் சந்தித்து, நிகழ்ச்சிகளில் பேசி, தேச உருவாக்கத்துக்கு அவர்களை ஈர்த்தவர் அப்துல் கலாம்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது, மாணவர்கள் மற்றும் மக்களிடம் இருந்து வரும் கடிதங்களைப் படித்து, தேவையான உதவிகளைச் செய்வார். கேரளாவில், ஒரு சிறுமியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஊரில் மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்தார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சகோதரனுக்கு உதவச்சொல்லி கடிதம் போட்ட ஒரிசா சிறுமிக்கு உதவினார்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு வந்த பரிசுகளைத் தவிர்த்தார்.புத்தகங்களை மட்டும் விருப்பத்தோடு பெற்றுக்கொள்வார். பதவிக் காலம் முடிந்து வெளியேறியபோது, இரண்டு சூட்கேஸில் அவரது உடைமைகள் அடங்கிவிட்டன.
25 வயதுக்குக் குறைவானவர்களிடம் பேசுகிறபோது, ‘என் தாயை மகிழ்ச்சிப்படுத்துவேன். ஊழலை எதிர்த்துப் போராடுவேன். என் தந்தை அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடாமல் இருக்க முனைவேன். சுற்றுப்புறத்தைக் காப்பேன். மகிழ்வான, சுத்தமான குடும்பமே வளமான நாட்டுக்கு அடிப்படை’ என உறுதிமொழி எடுக்கவைப்பார்.
தமிழகத்துக்கான இலக்கு, தொலைநோக்கு ஆகியவற்றைப் பேசும், ‘புயலைத் தாண்டினால் தென்றல்’ நூலின் ஏழு அத்தியாயங்களை மட்டும் முடித்திருந்தார். மீதமுள்ள 10 அத்தியாயங்களை அவரின் ஆலோசகர், பொன்ராஜ் எழுத்தில் முடிக்கப்பட்டு வெளிவர உள்ளது.
- பூ.கொ.சரவணன்

மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில், ஜூலை 27 மாலை 6.30 மணிக்கு, ‘வாழக்கூடிய பூமி’ என்ற தலைப்பில் பேச்சை ஆரம்பித்தார் அப்துல் கலாம். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மயக்கமாகிச் சரிந்தார்.
‘டியர் ஃப்ரெண்ட்ஸ்...’ என்பதுதான் மாணவர்களைப் பார்த்து அவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள்.
இந்தியப் பிரதமர், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட, நான்கு லட்சம் பொதுமக்கள் ராமேஸ்வரத்தில் நேரடியாக வந்து, கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பூட்டான் அரசு, தனது தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டது. அங்கு, புத்த மதத்தில் பின்பற்றப்படும் வெண்ணெய் விளக்குகள் ஏற்றும் பழக்கம் உண்டு. அப்துல் கலாம் மறைவுக்காக, 1,000 வெண்ணெய் விளக்குகள் பூட்டானில் ஏற்றப்பட்டன.
பாகிஸ்தான், இலங்கை, கனடா, அமெரிக்கா உட்பட, பெரும்பாலான உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன், தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15, வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும் என, மஹாராஷ்டிரா மாநில அரசும், இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளன. அப்துல் கலாம் பெயரில் அறிவியல் மற்றும் மாணவர்களுக்காக சிறப்பாகச் செயல்படுபவருக்கு விருதும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சுப.தமிழினியன்