Election bannerElection banner
Published:Updated:

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

“எங்க ஸ்கூல்ல ஏ.சி வசதியோடு கம்ப்யூட்டர் கிளாஸூம் இருக்கு. இயற்கைக்  காற்றை வாங்கியவாறு செய்யும் விவசாய வகுப்பும் இருக்கு. கம்ப்யூட்டர் மவுஸைப் பிடிச்சு படமும் வரைவோம், வயலில் இறங்கி நாற்றும் நடுவோம்” என உற்சாகமாக வரவேற்றார்கள் அந்த மாணவர்கள்.

கனவு ஆசிரியர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இருக்கிறது கேம்பிரிட்ஜ் பப்ளிக் (இ) பள்ளி. திரும்பிய பக்கம் எல்லாம் பசுமை. விதவிதமான பூக்கள், தக்காளி, வெண்டைக்காய், அவரைக்காய் எனக் காய்த்துக்கிடக்க, சுறுசுறுப்பாக அவற்றைப் பறித்துக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.

“இவை எல்லாமே, பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விளைவிச்ச காய்கறிகள். எங்க ஒவ்வொருத்தரையும் விவசாயிகளாக மாற்றியவர், எங்க கரஸ்பான்டன்ட். அவர், எங்களோட கனவு ஆசிரியரும்கூட” என்றார்கள்.

சக்கர நாற்காலியில் புன்னகையோடு வந்த சம்பத் குமார். இரண்டு  வயதில், போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்டு நடக்கும் சக்தியை இழந்தவர், இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உற்சாக வழிகாட்டி.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், 760 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு விவசாயத்தையும்  கற்றுத்தரும் ஆசிரியராக வலம்வருகிறார் சம்பத் குமார்.

கனவு ஆசிரியர்!

‘‘என் மாணவர்கள் ஒவ்வொருவரும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பசுமையாக மாற்ற வேண்டும். அதற்கான கல்வியும் இங்கே கற்றுத்தரப்படுகிறது” என்றார் சம்பத் குமார்.

‘‘இங்கே, ஐந்தாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் எல்லா மாணவர்களுமே, விவசாய வேலைகளைச் செய்வோம். நாங்க விளைவிச்ச காய்கறிகளை விற்று, அதில் வரும் பணத்தை, வசதிக்குறைவான மாணவர்களின் கல்விச் செலவுக்குக் கொடுப்போம்.

இங்கே சொல்லித்தந்த விவசாயமுறையை என் வீட்டுத் தோட்டத்திலும் செயல்படுத்தி, வெங்காயம், தக்காளி, கீரை, புதினாச் செடிகளை உருவாக்கி இருக்கேன்”  என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் மாணவி ஸ்வர்ணலதா.

கனவு ஆசிரியர்!

‘‘எங்க பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டு 2013-ம் வருஷம், அப்துல் கலாம் அய்யா நேரில் வந்தார். எங்களோட  விவசாய முறையைப் பார்த்துப் பாராட்டினார். மறக்க முடியாத நாள் அது. எங்களோடு சகஜமாகச் சிரிச்சுப் பேசிக்கிட்டே, எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார். அவருடைய திடீர் மறைவு, எங்களை ரொம்பப் பாதிச்சது” என்ற மாணவர் ஹரீஷ்வர் குரலில் வருத்தம்.

‘‘அவரால் ஊக்கம் பெற்ற எத்தனையோ பேர், ‘இந்தியா 2020’ கனவை பல வழிகளில் செயல்படுத்திட்டு இருக்காங்க. நாங்க, இயற்கை விவசாயத்தின் மூலம் அதைச் செய்வோம்” என்றார் மாணவி பாரதி

‘‘இந்த வார்த்தைகள்தான் என் சிறிய முயற்சிக்கு கிடைத்திருக்கும் பரிசு. இந்தப் பரிசுக்காக, இன்னும்  இன்னும் என் சக்கர வண்டியைச் சுற்றிக்கொண்டே இருப்பேன்” என்கிற சம்பத் குமாரின் முகத்தில் பெருமிதம்.

- கு.திலீப்குமார்

படங்கள்: வி.சதீஸ்குமார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு