FA பக்கங்கள்
Published:Updated:

செம ஸ்டைல் சின்ன பைக்!

செம ஸ்டைல் சின்ன பைக்!

செம ஸ்டைல் சின்ன பைக்!

“இன்னும் ஒரு வருஷம்தான் அங்கிள், அப்பறம் நான் ரொம்ப பிஸி”

இன்ட்ரோவிலேயே அதிரடி காட்டுகிறார் வருண். சென்னை, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வருணிடம், சிறுவர்கள் ஓட்டக்கூடிய குட்டிக் குட்டி பைக்குகள் உள்ளன. செல்லப் பிராணியைப் போல அவற்றை தடவிக்கொடுக்கிறார்.

தனது ஃபேவரைட்டான ஆரஞ்சு நிற பைக்கைத் தட்டிவிட்டு, ஸ்டைலாக வண்டியில் அமர்ந்ததும் மறக்காமல் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டார். அடுத்த நொடி, மின்னல் வேகத்திலும் லாகவமாக சீறிப் பாய்கிறது அவரது பைக்.

செம ஸ்டைல் சின்ன பைக்!

ஒரு ரவுண்டு முடித்துத் திரும்பிய வருண், “நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா மலேசியா போயிருந்தாங்க. திரும்பி வரும்போது இந்த ஜப்பான் நாட்டு பாக்கெட் பைக்கை வாங்கிட்டு வந்தாங்க. இந்த மெரினா பீச்தான் நான் வண்டி ஓட்டிப் பழகிய இடம்” என்கிறார்.

இப்போது, வருணிடம் அட்டகாசமான ஐந்து குட்டி பைக்குகள் உள்ளன.

“வருண், ஏதாவது புதுசா கத்துக்கட்டும்னுதான் பைக் வாங்கிட்டு வந்தேன். அவனோட ஆர்வம்தான் அடுத்தடுத்து பைக்குகளை வாங்கவெச்சது. பல வண்டிகளைத் தேடி வாங்குவேன். அதுக்கே. நிறைய நாள் ஆகும். மெக்கானிக்கை வைத்து, அந்த வண்டிகளில் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்வோம்” என்கிறார் வருணின் அப்பா சதாசிவம்.

வருணுக்கு உதவிகரமாக அவரின் அப்பா மட்டுமல்ல குடும்பமே இருக்கிறது. அவரது அம்மாவும் அக்காவும் எப்போதும் எனர்ஜி டிப்ஸ்களை வழங்கி உற்சாகம்     ஊட்டி வருகின்றனர்.

‘‘பிஸி ஆகிடுவீங்கன்னு சொன்னியே, அந்த சஸ்பென்ஸை உடைங்க” என்றதும்,சிரிக்கிறார் வருண்.

“நான் இப்போ ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் இருங்காட்டுக்கோட்டையில் ரேஸ் பயிற்சி எடுத்துக்கிறேன். எனக்கு இப்ப 12 வயசு. ரேஸ்ல கலந்துக்க குறைந்தபட்சம் 13 வயசு ஆகியிருக்கணுமாம். இதுதான் அந்த சஸ்பென்ஸ்”  என்ற வருண் ஆர்வத்தோடு தொடர்ந்தார்.

செம ஸ்டைல் சின்ன பைக்!

“ரேஸ்ல கலந்துக்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கான டிரெஸ்ஸே ஏழெட்டு கிலோ இருக்கும். அதைப்போட்டு, ஹெல்மெட்டை மாட்டினா, நம்ம உலகமே வேற.  வண்டியை எவ்வளவு ஜாக்கிரதையாக ஓட்டினாலும், சின்னச்சின்ன விபத்துகள் தவிர்க்க முடியாதது. அப்போது, கீழே விழும்போதும் உடலுக்குப் பாதிப்பு இல்லாம வளைந்து விழணும். அதுக்காக, உடலை இலகுவாக வளைக்க ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்குப் போறேன். ஃபிட்னஸ் கிளாஸ்  போறேன். இத்தாலியைச் சேர்ந்த ரேஸ் வீரர் வாலன்டினா ரோஸி, ஸ்பெய்ன் நாட்டு மார்க் மார்க்கஸ் இரண்டு பேரையும் பிடிக்கும். ரொம்ப நேரம் பேசிட்டேன்ல... என்னோட வொயிட் ஹோண்டாவுல ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி முடிக்கும் முன்பு, வெள்ளை ஹோண்டா உறுமியது. 

முதலில் ஓட்டிய பாக்கெட் பைக் 35 சிசி. அடுத்து, 39 சிசி, 45 சிசி, 50 சிசி, 65 சிசி என்று ஓட ஆரம்பித்து, இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் யமஹா ஆர்-15, 150 சிசி என்று ஆச்சர்யம் தருகிறது வருணின் ஜம்ப்.

செம ஸ்டைல் சின்ன பைக்!

“வருண், கிரிக்கெட்லேயும் கில்லி. இந்த வாரம்கூட  சென்னை டீம் செலக்‌ஷனுக்குப் போயிட்டு வந்தான்” என்று வருண் அம்மா சொல்லி முடிப்பதற்குள், ஒரு ரவுண்டு முடித்து வண்டி நின்றது.

“அம்மா, கிரிக்கெட் பற்றி சொல்லிட்டாங்களா? எனக்கு டோனியும் ரெய்னாவும் ரொம்பப் பிடிக்கும். சென்னையில் நடந்த ஐபிஎல் மேட்சை நேரில் போய்ப் பார்த்தேன். எங்க ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல, நான் ஆல்ரவுண்டர். மீடியம் பேஸ் பெளலிங் போட்டா, விக்கெட் விழுந்துக்கிட்டே இருக்கும்” என்ற வருண், கைகளைக் காற்றில் வீசி, பெளலிங் போட்டார்.

கிரிக்கெட், பைக் ரேஸ் இரண்டில் எது வருணின் சாய்ஸ்?

“இரண்டும் பிடிக்கும். ரேஸ்தான் ரொம்ப அதிகமா பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு, இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் யமஹா ஆர்-15 பைக்கைக் காட்டும் வருணின் கண்களில் ஒளிர்ந்தது, வெற்றியின்  நம்பிக்கை.

- வி.எஸ்.சரவணன், படங்கள்: பா.கார்த்திக்