ங்களின் அசத்தலான திறமையால், யூ-டியூப் வீடியோவில் லட்சக்கணக்கான ரசிகர்களை ரசிக்கவைத்து, வைரல் ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் சுட்டிகள் சிலரின் அப்டேட். படிங்க... பார்த்து ரசிங்க...

டைட்டஸ்

வைரல் கிட்ஸ்!

டைட்டஸ் (Titus)... இந்த அமெரிக்கச் சுட்டியின் வயது நான்கு. இரண்டு வயதில் இருந்தே, கூடைப் பந்தைக் குறி  பார்த்து வீசுவதில் கில்லி. அதுவும் எப்படி? நகரும் குட்டிக் காரில் அமர்ந்தபடியே வீசுகிறான். இரண்டு கைகளிலும் இரண்டு பந்துகளை எடுத்து, இரண்டு வலைகளில் ஒரே சமயத்தில் வீசுகிறான். ஐந்தாம் மாடியில்  கட்டடத்தின் உச்சியில் இருந்து வீசுகிறான். பந்தை சுவற்றில் லாகவமாக அடிக்க, திரும்பி வரும் பந்து, வலையில் விழுகிறது. டைட்டஸ் பந்தை எப்படி போட்டாலும், ரொம்ப சமர்த்தாக வலைக்குள் மிஸ் ஆகாமல் விழுவதைப் பார்க்கப் பார்க்க, நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள்.

சீஸர் சான்ட்

வைரல் கிட்ஸ்!

சீஸர் சான்ட் (Caesar Sant)... வயது ஏழு. அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதியில் வாழும் இந்தச் சுட்டி, இரண்டு வயதில் இருந்தே வயலின் இசைத்து அனைவரையும் கவர்ந்த குட்டி இசை மேதை. இப்போது, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். இந்த இசைத் திறமைக்கு சவால்விடுவது போல, ‘சிக்கிள் செல் அனீமியா’ (sickle-cell anaemia) என்கிற மிகவும் அரிய நோய், சீஸரைத் தாக்கியிருக்கிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறான். இதை, நேஷனல் ஜியாக்ரஃபி சேனல் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கும்போது உண்டாகும் வலியால் சீஸர் துடிப்பதும், சற்று நேரத்தில் புன்னகையோடு வயலின் வாசிப்பதும் உருக்கமாக இருக்கிறது. இந்த நோயைக் குணப்படுத்த, 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இணையத்தில், சீஸருக்காக நிதி திரட்டப்பட்டுவருகிறது.

அ ழே

வைரல் கிட்ஸ்!

உங்க வீட்டுச் செல்லப் பிராணி எது? நாய்... பூனை... கிளி..? சீனாவைச் சேர்ந்த அ ழே (A Zhe) எனும் சிறுவனின் செல்லக்குட்டி, மலைப்பாம்பு. ஆமாம். அ ழே ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது, அவன் அப்பா வீட்டுக்கு ஒரு மலைப்பாம்பை வாங்கி வந்தார். அப்போது முதல் மலைப்பாம்புடன்தான் தூங்குகிறான் அ ழே. தனது செல்லப் பிராணியுடன் வாக்கிங் செல்கிறான். அந்தப் பாம்பு, யாரையும் துன்புறுத்தியது இல்லை. அ ழே இப்போது உயர்நிலைப் பள்ளியில் படிப்பதால், வார இறுதியில் மட்டுமே வீட்டுக்கு வந்து பாம்புடன் விளையாட முடிகிறதாம். பெரியவன் ஆனதும் உயிரியலாளர் ஆக வேண்டும் என்பது கனவு. அதுக்குக் காரணம், ‘இந்த நண்பன்தான்’ என்கிறான் 13 வயது அ ழே.

ஹான் ஜெயிங்

வைரல் கிட்ஸ்!

சீ்னாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஹான் ஜெயிங் (Han Jiaying) நினைத்தால், எந்த விலங்கையும் சில நிமிடங்களில் தூங்கவைக்க முடியும். சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹான் ஜெயிங், முயல், நாய், கோழி, ஓணான் மற்றும் தவளை ஆகியவற்றை மெள்ளத் தடவி, ஓரிரு நிமிடங்களில் தூங்கவைத்தது, இப்போதைய இன்டர்நெட் சென்சேஷன்.

எப்படி இது சாத்தியம்? ‘இது, ஒருவகை ஹிப்னாட்டிசம். இதைச் செய்ய பல வருடப் பயிற்சி அவசியம்’ என்கிறார்கள் ஹிப்னாட்டிச வல்லுநர்கள். ‘விலங்குகளுக்கு ‘டானிக் இம்மொபிலிட்டி’ என்ற குணம் உண்டு. தன்னைவிட வலிமையான உயிரினம் நெருங்கினால், இறந்ததுபோல நடிக்கும். இது ஒரு தற்காப்பு முயற்சி. இதைத் தூண்டித்தான், ஹான் ஜெயிங் விலங்குகளைத் தூங்கவைக்கிறாள்’ என்கிறார்கள் சில மருத்துவர்கள். இது, ஹான் ஜெயிங்குக்கு எப்படித் தெரியும்? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

- கார்க்கிபவா, ர.ராஜா ராமமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு