‘‘பார்க்க சாஃப்ட்... வாங்கி இருப்பது இரண்டு பிளாக் பெல்ட். அதுதான் எங்க பிரியங்கா. ஸோ, ரெண்டு அடி தள்ளி நின்னு பேசுங்க’’ என பிரியங்காவுக்கு பஞ்ச் என்ட்ரி கொடுக்கிறார்கள் தோழிகள்.

சேலம், விநாயகா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் பிரியங்கா, ஆறு வயதில் இருந்தே கராத்தேயில் கலக்கிவருகிறார். அவர் வாங்கிய வெற்றிக் கோப்பைகள், வீட்டு அலமாரியில் இட நெருக்கடியால் போராடுகின்றன.

பிளாக் பெல்ட் பிரியங்கா!

‘‘அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் கற்றுத்தந்த இந்த கராத்தே, எனக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்துள்ளது” என்கிறார் பிரியங்கா. இவரின் தந்தை சீனிவாசன், 25 ஆண்டுகளாக கராத்தே பயிற்சியாளராக இருக்கிறார்.

2011-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சர்வதேச ஓப்பன் கப் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2012 கோலாலம்பூரில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய கராத்தே போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் பிரியங்கா. டெல்லியில் நடைபெற்ற தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 28 மாநிலங்களிலிருந்து சுமார் 500 வீரர்கள் கலந்துகொண்டனர். ‘ஜூனியர் கட்டா’ பிரிவில் கலந்துகொண்ட பிரியங்கா, தங்கப் பதக்கம் வென்றது யாரையும் ஆச்சர்யப்படுத்தவில்லை. காரணம், 2012-ம் ஆண்டிலிருந்து, இந்தப் போட்டியில் தங்க வேட்டையாடிவருகிறார் பிரியங்கா.

பிளாக் பெல்ட் பிரியங்கா!

“நான்காவது வருடமும் தங்கம் வென்றது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகப்போகிறது” என்று சின்னதாக சஸ்பென்ஸ் வைத்துத் தொடர்கிறார்.

“செப்டம்பர் மாதம் டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதில் ஜெயிக்கிறது சின்ன டார்கெட். 2018 ஆசியப் போட்டியில் தங்கம் அள்ளணும். 2020 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெயிக்கணும். சர்வதேசப் போட்டியில் சவால்களை சமாளிக்கணும். இதுக்காக, மலேசியாவுக்கு சிறப்புப் பயிற்சிக்கு போகிறேன். கடுமையான பயிற்சியோடு தன்னம்பிக்கையும் சேர்ந்தால் வெற்றிதானே” என்கிற பிரியங்காவின் முகத்தில் ஸ்மார்ட் சிரிப்பு.

படங்கள்: க.தனசேகரன்

ச.யாழினி

ஸ்ரீசாரதா மெட்ரிக் மகளிர் மேல்நிலைப் பள்ளி,

 சேலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு