Published:Updated:

சல்யூட் டீச்சர்

சல்யூட் டீச்சர்

சல்யூட் டீச்சர்

சல்யூட் டீச்சர்

Published:Updated:

றிவுக் கண்களைத் திறக்கும் ஆசிரியர் பணி, நாட்டைக் காக்கும் ராணுவப் பணிக்கு நிகரானது. அதிலும், சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களின் பொறுமையும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சில சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு சல்யூட் வைப்போம்.   

‘‘எனக்கு சின்ன வயதில் இருந்தே டீச்சர் ஆகணும்னு ஆசை. வளர வளர, நான் சந்தித்த சில குழந்தைகள், எனக்குள் ‘சிறப்புப் பள்ளி ஆசிரியர்’ எண்ணத்தை வளர்த்தார்கள்” என்கிறார் ரெய்சல் சிந்தியா மேரி.

சல்யூட் டீச்சர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி, கே.கே.நகரில் இருக்கிறது, ‘இன்டேக்ட் சிறப்புப் பள்ளி’. ஆட்டிசம், தசை வளர்ச்சிக் குறைபாடு, டௌன்ஸ் சிண்ட்ரோம் (Down’s Syndrome) போன்ற குழந்தைகளுக்கான பள்ளி. இங்கே பணிபுரியும் ஆசிரியர்களில் ஒருவர், ரெய்சல் சிந்தியா மேரி.

‘‘நான் நல்லா டான்ஸ் ஆடுவேன்.கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு தோழி மூலம், ஒரு சிறப்புப் பள்ளிக்கு டான்ஸ் கத்துக்் கொடுக்கப் போனேன். அந்தப் பிள்ளைகளைப் பார்த்துப் பழகிய பிறகு, என்னுடைய ஆசிரியர் கனவு இன்னும் உறுதியாச்சு. சிறப்பு ஆசிரியருக்கான டிப்ளமோ  படிச்சேன். 2006-ல் இந்த இன்டேக் சிறப்புப் பள்ளிக்கு வந்தேன். இவங்க, நார்மல் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் குறைஞ்சவங்க கிடையாது. நாங்க இவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறதைவிட, இவங்ககிட்டே கத்துக்கிட்டதுதான் அதிகம். நாம கொஞ்சம் டல்லா இருந்தாலும், கண்டுபிடிச்சு விசாரிப்பாங்க. நல்லா டிரெஸ் பண்ணியிருந்தா,  உற்சாகப்படுத்துவாங்க. அந்த அன்புக்கு ஈடே இல்லை’’ என்கிறார் ரெய்சல்.

சல்யூட் டீச்சர்

மற்றொரு ஆசிரியரான பவுலின் சோபியா ராணி, “என் பையன் பெயர் ஜோஸ்வா. ஒண்ணரை வயது ஆகும்போதுதான் அவன் ஆட்டிசம் குழந்தைனு தெரிஞ்சது. அவனுக்காக நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டு, சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சு, இன்றைக்கு பல குழந்தைகளுக்கான ஆசிரியரா இருக்கேன். இங்கே இருக்கிற ஒவ்வொரு குழந்தையையும் நான் ஜோஸ்வா போலவே நினைக்கிறேன். ஒவ்வொரு குழந்தையையும் சிறப்புக் கவனம் செலுத்தி, தனித்தனியே கவனிக்கிறோம். அவங்க மீது நாம அக்கறை காட்டறதை அவங்களுக்குப் புரியவெச்சுட்டாப் போதும். நாம் சொல்றதைக் கேட்பாங்க” என்கிறார்.

சல்யூட் டீச்சர்

மக்களோடு வாழ்வதற்கான பயிற்சி, தொழிற்பயிற்சி வகுப்புகளும் உள்ளன. ‘‘இவங்களுக்குக் கற்றுக்கொடுப்பது கடவுள் கொடுத்த வரம்” என்றபடி மாணவர்களை அன்போடு அணைத்துக் கொள்கிறார்கள்.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்

‘‘அன்பு என்கிற வார்த்தையின் அர்த்தத்தை  கரெக்டா தெரிஞ்சுக்கணுமா? இங்கே வாங்க. நாங்க தினம் தினம், ஒவ்வொரு நிமிஷமும் அன்பில் திளைக்கிறோம்” என்று புன்னகையோடு வரவேற்கிறார், சகோதரி என அழைக்கப்படும் தலைமை ஆசிரியை சபீனா.

பாளையங்கோட்டையில் உள்ளது, ‘புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி.’ உள்ளே நுழைந்தால், பட்டாம்பூச்சிகளின் உலகில் நுழைந்த பரவசம். 140 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில், எட்டு மாணவர்களுக்கு ஓர் ஆசிரியை.

சல்யூட் டீச்சர்

சில குழந்தைகளை மடியில் அமரவைத்துக்கொண்டு  ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைப் பார்க்கவே அழகு. அப்படித் தன் மடியில் இருந்த ஒரு சிறுமியை இறக்கிவிட்டு வந்தார் சபீனா.

‘‘நான் இந்தப் பள்ளியில் 9 வருடங்களாக வேலை செய்கிறேன். இங்குள்ள குழந்தைகளை, அவர்களின் ஐ க்யூ அளவைப் பொறுத்து 0 முதல் 6 வரை ஒரு பிரிவாகவும், 7 முதல் 15 வரை ஒரு பிரிவாகவும்,     15-க்கு மேற்பட்டோரை மற்றொரு பிரிவாகவும் வைத்துள்ளோம். சிலருக்கு மனநலப் பாதிப்புடன் உடல்நலக் குறைபாடும் உள்ளது. 10 வயதுக்கு மேலாகியும் கழுத்தை நிறுத்த முடியாத நிலையில், படுக்கையிலேயே இருப்போரும் உண்டு. கால்கள் செயல் இழந்த நிலையில் இருப்போருக்கு, கல்வியுடன் பிஸியோதெரப்பியும் செய்யப்படுகிறது. தங்களது அன்றாடச் செயல்களைப் பிறர் துணை இல்லாமல் தாங்களாகவே செய்வதற்குக் கற்றுக்கொடுப்பதுதான் எங்கள் கல்வியின் முக்கிய நோக்கம்” என்கிற சபீனா, இந்தப் பள்ளியிலேயே தங்கி இருக்கிறார்.

சல்யூட் டீச்சர்

எப்படி அவர்களாகவே உடைகளை அணிவது, தங்கள் பொருட்களை எடுத்துவைப்பது, நிறங்களின் வேறுபாடுகளை அறியச்செய்வது, படங்களைக் காட்டி அதன் பெயரை சொல்லவைப்பது என ஒவ்வொரு மாணவருக்கும் நேரம் ஒதுக்கி, பொறுமையாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

‘‘சில சமயம், பெற்றோர்களையும் வரவைத்து, நாங்க நடத்தும் பாடங்களைக் கவனிக்கச் சொல்வோம். அதைப் பார்த்துட்டு வீட்டுக்குப்போய் நடத்துவாங்க.  பொதுவாக, மனவளர்ச்சி குன்றியோர் பற்றிய விழிப்புஉணர்வு இங்கே ரொம்பக் குறைவு. திடீர்னு கத்துவாங்க, அடிப்பாங்க, சண்டை போடுவாங்க என நினைச்சுக்கிறோம். மனநலம் பாதித்த ஒருவரைப் பார்த்தால், கேலிசெய்து சிரிக்கிறோம்.  ரொம்பப் பரிதாபமாப் பார்க்கிறோம்.  இது ரெண்டுமே தப்பு. உங்க ஃப்ரெண்டுகிட்டே எப்படிப் பேசுவீங்களோ, எப்படி நடந்துப்பீங்களோ, அப்படி இயல்பாப் பேசணும். அவங்களுக்குப் புரியலைனாலும் திரும்பத் திரும்ப பொறுமையாப் பேசணும். ‘பொறுமை, முகத்தில் எப்போதும் புன்னகை.’ இதுதான் எங்களின் புத்தகம். அந்தப் புத்தகத்தைத் திறந்துதான் பாடம் நடத்துகிறோம்” என்கிற சபீனா டீச்சரின் முகத்தில் தவழ்கிறது புன்னகை.

- பி.ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

‘‘மரிய திரவியம் டீச்சர்தான் எங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச டீச்சர்.்” என கோரஸாக சொன்னார்கள் அந்த மாணவர்கள்.

பாளையங்கோட்டை, மகாராஜ நகரில் 188 மாணவர்களுடன், உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது, ஆனி ஜேன் ஆஸ்க்வித் பார்வைத்திறன் குறைந்தோர் மேல்நிலைப் பள்ளி.  ஓடிப்பிடித்து விளையாடும் மாணவர்களைப் பார்த்தால், பார்வை குறைந்தோர் எனச் சொல்ல முடியாது.

சல்யூட் டீச்சர்

அவர்களின் அன்புப் பிடியிலிருந்து சிரிப்புடன் வந்தார் மரிய திரவியம். ‘‘நெல்லை மாவட்டம், சுரண்டை அருகே உள்ள தன்னூத்து கிராமம்தான் எனது சொந்த ஊர். எனக்கு எட்டு வயது வரை நன்றாகக் கண் தெரிஞ்சது. பசுமையான வயல்வெளிகள், மரங்கள், மலைகள், அருவிகள் என அனைத்தையும் ரசித்தேன். அந்தச் சமயம், எங்கள் பகுதியில் கண் நோய் பரவியது. கண் மருந்துக்குப் பதிலாக, புண்ணுக்குப் போடும் மருந்தைப் போட்டதால், கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை குறைந்து, ஒன்பதாவது படிக்கும்போது, முழுமையாகப் போய்விட்டது” என்றார்.

அதன் பிறகு, இந்தப் பள்ளியில் சேர்ந்தார் மரிய திரவியம். பள்ளிப் படிப்பு மற்றும் உயர் கல்வியை முடித்து, இதே பள்ளிக்கு ஆசிரியையாக வந்து 26 வருடங்கள் ஆகின்றன.

‘‘எங்கள் பள்ளியில் 24 ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.  அதில் மூன்று பேர் பார்வைக் குறைபாடு உடையவர்கள். எல்லோருமே அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்கள்தான். இங்கே எட்டு குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் எனப் பிரித்து, பாடம் நடத்துகிறோம். இவர்களின் உலகத்தில் நானும் ஓர் அங்கம். பார்வையோடு சில வருடங்கள் இருந்து, பார்வை இல்லாமலும் வாழ்வதால், இரண்டு நிலைகளின் அனுபவங்களும் எனக்கு உண்டு. அந்த அனுபவங்களைப் பாடம் நடத்தும்போது, எனது மாணவர்களுக்குப் பயன்படுத்துகிறேன்.

சல்யூட் டீச்சர்

உதாரணமாக, ஒரு மலர் பற்றிச் சொல்லும்போது, அது எந்த வடிவில் இருக்கும், செடியில் எப்படிப் பூத்திருக்கும் என்பதை... அதை நான் பார்த்த விதத்தில் சொல்வேன்’’ என்கிறார் மரிய திரவியம்.

‘‘டீச்சர், அவங்களைப் பற்றி ரொம்பக் குறைவா சொல்றாங்க. இன்னும் நிறைய இருக்கு. நாங்க பார்த்திருக்காத இந்த உலகத்தைப் பற்றி அவர் சொல்லும்போதே, அது எங்க மனசுல ஓவியமாத் தெரியும். டீச்சர் நல்லா பாடுவாங்க. கவிதை எழுதுவாங்க. ஒரு பாடத்தை நடத்தும்போதே, கவிதை மாதிரி நடத்துவாங்க. எங்களை நிறையப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவாங்க. எப்படித் தலை சீவணும், எப்படி டிரெஸ் போடணும் என டிப்ஸ் கொடுப்பாங்க. நாங்க மனசு கஷ்டத்தோடு இருந்தால், எப்படித்தான் கண்டு் பிடிப்பாங்களோ தெரியாது. பக்கத்தில் கூப்பிட்டு, தலையைத் தடவிக்கொடுத்து, ‘குரல் ஏன் டல்லா இருக்கு? வீட்ல என்ன பிரச்னை?’ எனக் கேட்கும்போது, எல்லாக் கவலையும் மறைஞ்சுபோயிடும். இவங்க எங்களுக்கு டீச்சராக இருக்கும் நேரம் குறைவுதான். பல நேரம் தாயாக இருக்காங்க” என்கிறார் சுடலை என்ற மாணவர்.

‘‘இவங்களைப் பேசவிட்டால் இப்படித்தான் ஓவரா சொல்வாங்க. இதில், என்னைப் போன்ற ஆசிரியர்களின் பங்களிப்பு குறைவுதான். இவங்களிடம் இயல்பாகவே இருக்கும் திறமைகளை லேசாகத் தட்டிக்கொடுத்து வெளியே கொண்டுவர்றோம். அவ்வளவுதான்” என்கிறார் மரிய திரவியம் அமைதியாக. 

- பி.ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism