Published:Updated:

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர்

Published:Updated:

‘‘ங்கள் பள்ளியில், ஒவ்வொரு வகுப்புக்கும் ரெண்டு மூணு சுட்டி விஞ்ஞானிகள் இருக்காங்க. இன்னும் சில வருஷத்துல ஊர் முழுக்க விஞ்ஞானிகளா இருப்பாங்க. அதுக்குக் காரணம், எங்க அசோகன் சார்தான். வாங்க அவரைச் சந்திப்போம்” எனப் பெருமையோடு அழைத்துச் சென்றார்கள்  மாணவர்கள்.

அசோகன், நாமக்கல் மாவட்டம், பழையபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர். பதக்கங்கள் மற்றும் கோப்பைகளால் நிறைந்திருக்கிறது இந்தக் கிராமத்துப் பள்ளி.

கனவு ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கிராமத்து மாணவர்களிடம், அறிவியல் பாடம் என்றாலே பயமும் தயக்கமும் இருக்கு. நகரத்தில் பெரிய பள்ளியில் படிப்பவர்களால்தான் அறிவியலில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும், அவர்களால்தான் விஞ்ஞானிகள் ஆக முடியும் என்ற எண்ணம் இவங்ககிட்ட இருப்பதை இவங்களோடு பேசின கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சுக்கிட்டேன். இந்த எண்ணத்தை மாற்றணும். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பெரிய வசதிகள் தேவை இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் எளிமையான பொருட்கள் மூலமே புதிய புதிய அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பள்ளியில் இருந்தும் உலகம் போற்றும் விஞ்ஞானி உருவாகலாம். அதுக்கான சிறிய முயற்சிதான் இது” எனப் புன்னகைக்கிறார் அசோகன்.

கனவு ஆசிரியர்

இவரது வழிகாட்டுதல் மூலம் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுட்டி விஞ்ஞானிகளாக ஜொலித்திருக்கிறார்கள். அறிவியல் கருத்தரங்குகள், போட்டிகளில் பங்கேற்று, மாநில மற்றும் தேசிய  அளவில் பரிசுகளை அள்ளி வந்துள்ளனர்.

கழிவு நீரிலிருந்து மின்சாரம், மகளிர் பாதுகாப்பு எச்சரிக்கைக் கருவி, சுனாமி முன்னெச்சரிக்கைக் கருவி, இயற்கைப் பூச்சிவிரட்டி... என இவர்களது  கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.

11-ம் வகுப்பு படிக்கும் செளந்தர்யா, நம்மைச் சுற்றி கிடைக்கும் மூலிகைச் செடிகளில் இருந்து, இயற்கைப் பூச்சிவிரட்டி மருந்தைக் கண்டுபிடித்து, பரிசு பெற்றிருக்கிறார்.

கனவு ஆசிரியர்

‘‘எனக்கு அறிவியல் பாடம் ரொம்பப் பிடிக்கும். வகுப்பில் முதலாவதா வருவேன். ‘புத்தகத்தில் இருப்பதைப் படிக்கிறதும், முதல் மார்க் எடுக்கிறதும் மட்டும் போதாது. இந்த அறிவியல் மூலம் மற்றவங்களுக்கு நீ என்ன செய்யப்போறே? அறிவியல் போட்டிகளில் கலந்துக்க!’ என அசோகன் சார்  சொன்னார். அதுக்கு முன்னாடி அறிவியல் கருத்தரங்குகளுக்கு அனுப்பிவெச்சார். அங்கே, பல்வேறு மாணவர்களைச் சந்திக்கும்போதுதான் இவ்வளவு நாளா, யாரோ சொன்ன தியரியிலேயே ஒப்பேத்திட்டு இருக்கோம்னு புரிஞ்சது. நானும் போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பிச்சேன்’’ என்கிறார் சௌந்தர்யா.

சுனாமி எச்சரிக்கைக் கருவியைக் கண்டுபிடித்திருக்கும் 10-ம் வகுப்பு ஞானசேகரன், ‘‘சுனாமி, அனைவரையும் பாதித்த ஒரு நிகழ்வு. பல உயிர்களைப் பலி வாங்கியதை யாரும் மறக்க முடியாது. இன்னொரு முறை உயிர் இழப்புகள் ஏற்படக் கூடாது என நினைச்சு, சாரிடம் பேசினேன். என்னை உற்சாகப்படுத்தி, வழிமுறைகளைச் சொன்னார். அதன்படி நான் சுனாமி எச்சரிக்கைக் கருவியைக் கண்டுபிடிச்சு பரிசு வாங்கினேன்’’ என்கிறார்.

கனவு ஆசிரியர்

‘‘ஆரம்பத்தில் அறிவியல் பாடம்னாலே எனக்கு ரொம்பப் பயம். அசோகன் சார் பாடம் நடத்தும் முறையைப் பார்த்த பிறகுதான்  படிக்கும் ஆர்வமே வந்தது. நிறைய மார்க் எடுத்ததோடு, நாமும் ஏதாவது கண்டுபிடிக்கணும்னு நினைச்சேன். அப்படிக் கண்டுபிடிச்சதுதான் ஆபத்தில் இருக்கும் பெண்கள், தகவல் தெரிவிக்க உதவும் இந்த சென்சார் கருவி” என்கிறார் அபினேஷ்.
இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள், போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள  வழிகாட்டுவதோடு, தேவையான நிதி உதவியையும் செய்கிறார் அசோகன்.

‘‘அதோடு, பாதியில் படிப்பை நிறுத்திய  நிறைய மாணவர்களின் பெற்றோரை பார்த்துப் பேசி, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்திருக்கார். ஒரு நண்பரைப் போல ஜாலியா பேசிக்கிட்டே பாடம் நடத்துவார். கடந்த 10 வருஷங்களாக இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்கிறோம்” என உற்சாகமாகச் சொல்கிறார்கள் மாணவர்கள்.

‘‘புரிதலோடு கூடிய கல்வியால், நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களைத் தர இயலும். அதன் மூலம், இன்னும் பல ஆயிரம் அப்துல் கலாம்கள் இந்தியாவில் உருவாக முடியும் என நிச்சயமாக நம்புகிறேன்” எனச் சிரிக்கிறார் அசோகன்.


- ச.ஆனந்தப்பிரியா
படங்கள்: சூ.நந்தினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism