Published:Updated:

சென்றதும் வென்றதும்!

சென்றதும் வென்றதும்!

உலகை மாற்றிய கடல் பயணங்கள் மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்!

உலகை மாற்றிய கடல் பயணங்கள் மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்!

புதிய உலகம்

‘‘ஐயோ கடலா'' என்று பயந்து அலறியவர்களின் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிக மிக அதிகம். அப்போது என்றால், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில்.

‘‘குதிரையில் போகிறேன், ஒட்டகத்தில் போகிறேன். நடந்து போகிறேன். ஆனால், கடல் மட்டும் வேண்டவே வேண்டாம்'' என்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்றதும் வென்றதும்!

தங்கமும் வைரமும் கொடுப்பதாக ஆசை காட்டினாலும் மயங்க மாட்டார்கள். கடல் என்றால் அவ்வளவு பயம். ஏன்?

சென்றதும் வென்றதும்!

பல காரணங்கள். நிலப் பிரதேசத்தில் பயணம் செய்வது எளிதானது. தேவைப்பட்ட இடத்தில் பயணத்தை நிறுத்தி ஓய்வு எடுக்கலாம். வழி தவறிவிடுவோமோ என்ற பயம் இல்லை. தண்ணீர், உணவு என என்ன தேவைப்பட்டாலும் வழியில் கிடைக்கும். காய்ச்சல், கால் வலி, வயிற்று வலி என எந்தத் தொந்தரவு வந்தாலும் பயம் இல்லை. எங்காவது ஒரு வைத்தியர் இருப்பார். ஏதாவது கசப்பு மருந்து தருவார். விழுங்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

கடலில்? கொண்டுபோன தண்ணீரும் உணவும் காலியாகிவிட்டால், நாமும் காலி. ‘‘ஐயா, இந்த வழியில் போனால் அமெரிக்கா வருமா?’’ என்று யாரையும் கேட்க முடியாது. கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் இப்படித்தான் எங்கோ போகத் திட்டமிட்டு, வேறு எங்கோ போய்ச் சேர்ந்தார். இன்னும் பலர் கிளம்பியதோடு சரி. எங்கே போனார்கள், என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது.

கடல் பயணம் ஆரம்பிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஜாலியாக டாடா காட்டிவிட்டு  கிளம்புவார்கள். ஜில்லென்று காற்று முகத்தில் அறையும்போது, ‘அடடா இதுவல்லவா வாழ்க்கை’ எனத் தோன்றும். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வாரங்கள் செல்லச் செல்ல, மாதங்கள் செல்லச் செல்ல எல்லாமே தலைகீழாக மாறிவிடும்.  சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் எப்போது பார்க்கப்போகிறோம் என மனம் ஏங்கத் தொடங்கும்.

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி என்று எது வந்தாலும் மருந்து ஒன்றுதான். பல்லைக் கடித்துக்கொண்டு  அமைதியாக இருக்க வேண்டும். பல் வலி வந்துவிட்டால், அதைக்கூடச் செய்ய முடியாது.

நிலத்தில் இருக்கும் வரை புயலோ, மழையோ எது வந்தாலும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடலில் இது சாத்தியம் இல்லை. கொஞ்சம் மழை கனத்தாலும் கப்பல் தள்ளாட ஆரம்பித்துவிடும். உன்னை ஒரு வழி  செய்யாமல் விட மாட்டேன் என்று அலைகள் ஆள் உயரத்துக்கு எழும்பி நின்று பயமுறுத்தும். எது கிழக்கு, எது மேற்கு? போய்ச் சேர எவ்வளவு அவகாசம் பிடிக்கும்? காலியாக இருக்கும் குடிநீர்த் தொட்டியை எப்படி நிரப்புவது? ம்ஹூம், ஒருவருக்கும் தெரியாது.

ஒரு நாள் திடீரென்று சூரியனின் ஒளி தெரியும். ஆடிப்பாடி கொண்டாடுவார்கள். கரை வந்துவிட்டால், தாவிக்குதித்து இறங்கி, அங்கும் இங்கும் ஓடி மகிழ்வார்கள். அந்தப் புதிய இடத்தின் மரங்களில்  வகை வகையாக, பல சுவைகளில் பழங்கள் இருக்கும். ஆசை தீரச் சாப்பிடுவார்கள்.

அந்தப் புதிய இடத்தில் தங்கம் இருக்கும். மலை மலையாக வைரம் இருக்கும். விலை மதிக்க முடியாத கற்களும் மணிகளும் இருக்கும். எல்லாவற்றையும் பங்கு போடுவார்கள். பைகள் நிறைய  நிரப்பிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரும்புவார்கள்.

அப்புறமென்ன? ஏழையாக கப்பல் ஏறிக் கிளம்பிப்போனவர்கள், பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள். புதிய வீடு வாங்கலாம். இல்லை, இல்லை மாளிகையே கட்டலாம். தோட்டம் போடலாம். அந்தத் தோட்டம் முழுக்க தங்கத்தால் வேலி போடலாம்.  எல்லோரும் பெருமிதமாகப் பார்ப்பார்கள்.  இவர் யார் தெரியுமா? மிகப் பெரிய கடல் பயணி என ஊரே கொண்டாடும். மரியாதை, அங்கீகாரம், பதவி, பொருள் அனைத்தும் கிடைக்கும்.

சென்றதும் வென்றதும்!

இந்தக் கனவோடுதான் பலர் கப்பல் ஏறினார்கள். இந்தக் கனவோடுதான் புதிய இடங்களைத் தேடத் தொடங்கினார்கள். இந்தக் கனவோடுதான் கடும் குளிரையும் காய்ச்சலையும் தாங்கிக்கொண்டார்கள். வீட்டை மறந்து, புறப்பட்ட நாட்டை மறந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் மிதந்துகொண்டே இருந்தார்கள். ஆண்டுக்கணக்கில் கடலே கதி என்று கிடந்தார்கள். பலர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடலில் கழித்து முடித்தார்கள். இருந்தாலும் பெரும்பாலானோரின் கனவுகள் நிறைவேறவே இல்லை. பல கப்பல்கள் மழையிலும் வெள்ளத்திலும் சிக்கிக் காணாமல்போயின.

கிளம்பிச் சென்றவர்கள், பல ஆண்டுகள் ஆகியும் திரும்பவே இல்லை என்பதை உணர்ந்ததும், நிலத்தில் இருந்தவர்கள் நம்பிக்கை இழந்தார்கள். நிலம்தான் பாதுகாப்பானது. நிலம் மட்டும்தான் நமக்கானது.  புதிய இடம் என எதுவும் இல்லை. கப்பல் ஏறிச் சென்றால், தங்கமும் வைரமும் கிடைக்கும் என்பது பொய். கடல் ஆபத்தானது. அதற்குக் கருணையே இல்லை. அது மனிதர்களை விழுங்கிவிடுகிறது. பெரிய, பெரிய கப்பல்களைக்கூட விழுங்கி ஏப்பமிட்டுவிடுகிறது. பேசாமல், நாம் உண்டு நம்  வீடு உண்டு என இருந்துவிடவேண்டியதுதான். இப்படி நினைத்தவர்கள்தான் அதிகம்.

ஆனால், சிலர் மட்டும் நம்பிக்கையை இழக்கவே இல்லை. என்ன ஆபத்து வந்தாலும் சரி, நான் கப்பலைவிட்டு இறங்கப்போவது இல்லை என்பதில் உறுதியுடன் இருந்தனர். மழை, வெள்ளம், சூறாவளி, காய்ச்சல், குளிர் எதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. ‘போகாதே ஆபத்து’ என்று பலர் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.

நத்தையைப் போல பாதுகாப்பாக ஓர் இடத்தில் வாழ அவர்களுக்கு விருப்பம் இல்லை. பறவையைப் போல சுதந்திரமாகப் பறந்து செல்ல விரும்பினார்கள். புதிய இடங்களை, புதிய வாய்ப்புகளை, புதிய உலகைக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் துடித்தார்கள்.

சென்றதும் வென்றதும்!

மழையும் இருளும் புயலும் உடல் உபாதைகளும் அவர்களை இம்சித்தன. மிகப் பெரும் சவால்களை, மிகப் பெரும் ஆபத்துகளைத் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். புது உலகைக் கண்டுபிடித்தார்கள். அப்படிக் கண்டுபிடித்தவர்கள்தான் கொலம்பஸ், வாஸ்கோடாகாமா... இன்னும் பலர்.

எப்படி நடந்தது இந்த அதிசயம்? அந்தப் பயணத்தில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன?

(பயணம் தொடரும்...)