Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 2

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவைப் பற்றி 15-ம் நூற்றாண்டில் நான், நீ எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், எஸ்டெவா ட காமா. அவர் ஒரு புகழ்பெற்ற ராணுவ வீரர். செல்வாக்கு மிக்க பிரமுகர். போர்ச்சுகல் நாட்டில், சினீஸ் என்னும் இடத்தில் வசித்துவந்தார். தன்  வாழ்நாளில் எப்படியாவது இந்தியாவுக்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்துவந்தார்.

சென்றதும் வென்றதும்! - 2

அவருடைய மூன்றாவது மகன் வாஸ்கோ ட காமாவுக்கு சின்ன வயதிலேயே கடல் அறிமுகமாகிவிட்டது. மீன் பிடிக்கும் சிறிய படகுகளில் ஏறி வலம் வருவது அவருக்குப் பிடித்திருந்தது. கடல் அலைகளின் ஓயாத சத்தம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. அவருடைய ஆர்வத்துக்குத் தீனி போட, கணிதமும் கப்பல் செலுத்தும் தொழில்நுட்பமும் கற்பிக்கப்பட்டன.

அப்பாவின் இந்தியக் கனவு, வாஸ்கோ ட காமாவுக்கும் தொற்றிக்கொண்டது. அப்படி அங்கே என்னதான் இருக்கிறது? அங்கே போவதற்கு ஏன் எல்லோரும் புதிய வழியைத் தேடுகிறார்கள்? அப்படியானால், பழைய வழி என்றும் ஒன்று இருக்கிறதா?

தேடத் தொடங்கினார் வாஸ்கோ ட காமா. கிரீஸ், ரோம் போன்ற பல சாம்ராஜ்ஜியங்களுடன் இந்தியாவுக்கு வர்த்தக உறவுகள் இருந்ததால், அந்த நாடு செல்வத்தின் அடையாளமாக இருந்தது.  தங்கம், பட்டு, வாசனைப் பொருள்கள், விலை மதிப்பற்ற ஆபரணக் கற்கள் என பலவற்றையும் இந்திய வணிகர்கள் ஐரோப்பியச் சந்தைகளுக்குக் கொண்டுவந்து விற்பனைசெய்துவந்தார்கள். இந்திய வணிகர்கள் ஐரோப்பாவுக்கு வருவதற்குப் பிரச்னை இல்லை. ஆப்கானிஸ்தான், பெர்ஷியா, அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய பகுதிகளைக் கடந்து, நில மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தனர். அரபிக் கடல், செங்கடல், மத்தியத் தரைக்கடல் என  கடல் வழித்தடம் இருந்தது.

சிக்கல் என்னவென்றால், இந்த வழிகள் அனைத்தும் அப்போது அரபு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஐரோப்பியக் கிறிஸ்தவர்களுக்கும் அரபு முஸ்லிம்களுக்கும் நீண்ட காலமாகவே பகை இருந்து வந்ததால், இந்த வழித்தடங்கள் ஐரோப்பியர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தன.

அப்படியானால் ‘நானே புதிய வழியைக் கண்டுபிடிக்கிறேன்’ என்று முடிவெடுத்த வாஸ்கோ ட காமா, பயணத்தைத் தொடங்கினார். 8 ஜூலை 1497 அன்று, போர்ச்சுகலின் தலைநகரம் லிஸ்பனில் இருந்து வாஸ்கோ ட காமா தனது முதல் இந்தியக் கடல் பயணத்தை ஆரம்பித்தார்.

சென்றதும் வென்றதும்! - 2

மொத்தம் நான்கு கப்பல்கள். ஒன்றின் எடை என்ன தெரியுமா? 200 டன். (1 டன் என்பது 1000 கிலோ கிராம்). ஒவ்வொரு கப்பலுக்கும் பெயர் இருக்கிறது. வாஸ்கோ ட காமா பயணம் செய்த கப்பலின் பெயர், செயின்ட் கேப்ரியல். இரண்டாவது கப்பலை அவர் சகோதரர் பாலோ ட காமா செலுத்தினார். மூன்றாவதில் பணியாளர்கள். நான்காவது, சரக்குக் கப்பல். மொத்தம் 170 பேர் இருந்தார்கள்.

முதலில், வாஸ்கோ ட காமா எல்லோருக்கும் தெரிந்த, பழக்கப்பட்ட வழித்தடத்தில் கப்பலைச் செலுத்தினார். இத்தகைய நீண்ட பயணங்களின்போது இடையிடையே ஓய்வு தேவைப்படும். அறிமுகமான நிலப் பகுதிகளில் ஒதுங்குவார்கள். சரக்குக் கப்பலில் குடிநீர் நிரப்பிக்கொள்வது, உணவு சேகரிப்பது  போன்ற சில வேலைகளைச் செய்வார்கள்.

வாஸ்கோ ட காமாவின் கப்பல்கள், ஒரு வாரம், கேப் வர்டி என்னும் தீவுக் கூட்டத்தில் தங்கிவிட்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் தொடங்கியது. தொடர்ந்து 90 நாட்கள், நிலமே கண்ணில் காணவில்லை. குளிக்க முடியாது. அதே பழைய உடைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும். கடும் குளிர் வேறு. ரொட்டியும் இறைச்சியும் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட ஆரம்பித்தன. உடலும் உள்ளமும் சோர்வடைய ஆரம்பித்தபோது, ஒரு வழியாகத் தென் ஆப்பிரிக்கா கண்ணில் பட்டது.

10,000 கி.மீ கடந்த பிறகு ஒரு துண்டு நிலம். வாஸ்கோ ட காமா ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டார். ஆம், இதற்கு முன்னால் இவ்வளவு நீண்ட ஒரு தொடர் பயணத்தை இடையில் எங்கும் நிற்காமல் வேறு யாரும் மேற்கொண்டது இல்லை. இந்தச் சாதனையே, மேலும் போகத் தூண்டியது. இதோ, கையில் சிக்கும் இடத்தில்தான் இந்தியா எனச் சொல்லிக்கொண்டார் வாஸ்கோ ட காமா.

மீண்டும் பயணம் தொடர்ந்தது. தெற்குப் பகுதியில் இருந்த நன்னம்பிக்கை முனை என்னும் பகுதியை வாஸ்கோ ட காமா சுற்றி வந்தார். ஆப்பிரிக்காவை ஒட்டியபடி கீழிருந்து அப்படியே, மேலே மேலே செல்லத் தொடங்கினார்கள். இனி அவர்கள் பழக்கப்பட்ட பாதையில் இருந்து பிரிந்து, புதிய வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

கென்யாவில் உள்ள மாலிண்டி என்னும் இடத்தை அடைந்தனர். அங்கே ஆட்சி புரிந்த ஒரு சுல்தான், நல்லவிதமாக வாஸ்கோ ட காமாவை வரவேற்று உபசரித்தார். அனுபவம் வாய்ந்த ஓர் அரபு மாலுமி, இந்தியா போவதற்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

வாஸ்கோ ட காமா இந்தியப் பெருங்கடலில் முன்னேறிக் கொண்டிருந்தார். உடன் வந்தவர்கள் பலர் துவண்டுவிட்டனர். போதும் திரும்பிடலாம் என்றார்கள். நோய் வசப்பட்டுப் பலர் உயிரிழந்தனர். ஓரிடத்தில் சரக்குக் கப்பல் முழுமையாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. வாஸ்கோ ட காமா பயணத்தை நிறுத்தவே இல்லை.

அரபிக் கடல் வந்தது. வாஸ்கோ ட காமாவின் கண்கள் கரையைத் தேடிக்கொண்டே இருந்தன. இந்த வழி சரியானதுதானா? இதுவரை யாரும் சாதிக்காததை என்னால் சாதிக்க முடியுமா? அல்லது இதுவும் வீண் முயற்சியாகப் போய்விடுமா?

சென்றதும் வென்றதும்! - 2

ஒருவழியாக, 20 மே 1498 அன்று கரை கண்ணில் பட்டது. இது எந்த இடம்... நாம் எங்கே இருக்கிறோம்? போய் விசாரித்துவிட்டு வாருங்கள் எனச் சிலரை அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பி வரும் வரை வானத்தைப் பார்த்தபடி அமைதியாக இருந்தார் வாஸ்கோ ட காமா. சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பினார்கள். இந்த இடத்தின் பெயர் கோழிக்கோடு. கேரளாவில் இருக்கிறதாம். ஆம், நாம் இந்தியா வந்துவிட்டோம்!

வாஸ்கோ ட காமாவின் முகத்தில் முதல் முறையாக புன்னகை மலர்ந்தது. கப்பலைவிட்டு இறங்கினார். முதல் முறையாக இந்தியாவில் தன் கால்களைப் பதித்தபோது நிச்சயம் அவர் உடல் சிலிர்த்திருக்க வேண்டும். உடல் மட்டுமா, உள்ளமும்தான்!

(பயணம் தொடரும்...)

வாஸ்கோட காமாவின் கடல் பயணங்களால் கிடைத்த பயன்!

ப்பல் மூலம் ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்து இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர், வாஸ்கோ ட காமா. வாஸ்கோ ட காமாவின் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி, போர்ச்சுகல் பல முன்னேற்றங்களை அடைந்தது.

இந்தியா ஒரு காலனி நாடாக மாறுவதற்கு இந்தப் பயணம் உதவியது. ஆறே ஆண்டுகளில், 1505-ம் ஆண்டு இந்தியாவில் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தது போர்ச்சுகல். 1947-ம் ஆண்டு, இந்தியா பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகும்,  1961-ம்  ஆண்டு வரை போர்ச்சுகலின் காலனி ஆதிக்கம் இந்தியாவில் நீடித்தது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு