Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 3

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 3

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:

மார்கோ போலோ

த்தாலி என்பது இப்போது ஒரு நாடு. சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னால், பல்வேறு நகரங்களாகத் தனித்தனியே ஆளப்பட்டு வந்தது. அதில் ஒரு நகரம், வெனிஸ். இதை, நகரம் என்பதைவிட சின்னச்சின்னத் தீவுகளின் (மொத்தம் 118)  தொகுப்பு என்று அழைக்கலாம். இரண்டு தெருக்கள் தள்ளிப் போகவும், படகில்தான் போயாகவேண்டும்.

பெரும்பாலானோர் இரண்டு, மூன்று தெருக்களைத் தவிர வேறு எதையும் பார்த்ததுகூட இல்லை. உலகம் எவ்வளவு பெரியது? அதில் என்னென்ன நாடுகள், நகரங்கள் இருக்கின்றன என அவர்களுக்குத் தெரியாது. வெளியில் போனால்தானே தெரியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்றதும் வென்றதும்! - 3

முதல்முறையாக, மார்கோ போலோவின் குடும்பத்தினருக்கு அந்த வாய்ப்பு வந்தது. ‘‘ஒரு வேலையாக சீனாவுக்குப் போகிறேன் வருகிறீர்களா?’’ என்று ஒரு நண்பர் கேட்டதும், மார்கோ போலோவின் அப்பா நிகோலோவும் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

மார்கோ போலோவை உறவினர்களிடம் விட்டுவிட்டு கிளம்பினார்கள். இப்போது சீனாவின் தலைநகராக இருக்கும் பெய்ஜிங், அப்போது மங்கோலியாவில் இருந்தது. மங்கோலியர்களின் அரசரான, புகழ்பெற்ற குப்லாய் கான் அரண்மனையை, நீண்ட பயணத்துக்குப் பிறகு அடைந்தனர்.

ஐரோப்பியாவில் இருந்து வந்திருந்த போலோ குடும்பத்தினரை குப்லாய் கானுக்குப் பிடித்துவிட்டது. அவர்களை அரசாங்கப் பிரதிநிதிகளாக நியமித்து, ஒரு பணியையும் கொடுத்தார். ரோம் நகருக்குச் சென்று, புனித போப்பைச் சந்திக்க வேண்டும். கணிதம், வானியல் உள்ளிட்ட விஷயங்களைக் கற்ற 100 கத்தோலிக்கர்களோடு சீனாவுக்குத் திரும்ப வேண்டும். பலவிதமான நோய்களைத் தீர்க்கும் புனித எண்ணெயைக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்தப் பணி.

‘‘சரி ஆகட்டும்’’ என்ற போலா குடும்பத்தினர் ஐரோப்பா திரும்பினார். குப்லாய் கான் கேட்டு அனுப்பியதில் எண்ணெய் மட்டுமே கிடைத்தது. ஆனால், அவர் கேட்காத இன்னொரு விஷயம் நடந்தது. அதுதான் 17 வயது மார்கோ போலோ. இந்த முறை சீனாவுக்கு தானும் வருவேன்  என்றார் மார்கோ போலோ.

‘‘அவ்வளவு தூரம் உன்னால் கடலில் போக முடியாது மகனே. வெனிஸில் இருந்து அட்ரியாடிக் கடலை அடைந்து, அங்கிருந்து மத்தியத் தரைக்கடல் செல்ல வேண்டும். இந்த இரண்டையும் கடப்பதற்குள் இரண்டாயிரம் ஆபத்துகள் வரும்’’ என்றார் நிகோலோ.

மார்கோ போலோ தெளிவாகச் சொல்லிவிட்டார். ‘‘எனக்கு வீடு போதாது. நான் முழு உலகையும் பார்க்க வேண்டும்.’’

1271-ம் ஆண்டு, மார்கோ போலோவின் (1254- 1324) முதல் பெரும் கடல் பயணம் ஆரம்பமானது. அப்பா நிகோலோவின் பெரும் கவலை, ‘கடல் பிசாசு’. அட்ரியாடிக் கடலைத் தொடும்போது, நிச்சயம் நீரில் இருந்து கடல் பிசாசு தோன்றும் என்று நம்பினார். அப்படி வந்துவிட்டால், தன் மகனை திரும்பவும் வெனிஸ் அனுப்பிவைக்க  ஏற்பாடு செய்திருந்தார்.

‘‘கடல் பிசாசு, இரண்டு கப்பல் அளவு பெரியதாக இருக்கும்’’ என்று சிலர் சொல்லி இருந்தார்கள். ‘‘இல்லை, 10 கப்பல் உயரம். பல கப்பல்களைப் பிடித்து விழுங்கிவிடும். சில சமயம், கப்பலை விட்டுவிட்டு மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடும். கப்பலைக் கவிழ்த்துவிட்டுத் தத்தளிக்கும் மனிதர்களைக் கண்டு ரசிக்கும். அதற்கு 10 கைகள். அதன் வால், மலைப் பாம்பைவிட நீளமானது’’ என்றார்கள் சில மூத்த மாலுமிகள்.

சென்றதும் வென்றதும்! - 3

இந்தக் கதைகளை, அனைத்து இத்தாலிய வர்த்தகர்களும் நம்பினார்கள். கடலில் சின்ன அசைவு தென்பட்டாலும் ‘‘ஐயோ கடவுளே’’ என்று அலறினார்கள்.

மார்கோ போலோவும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார். ஒரு பிசாசும் காணோம். ஆனால், வழி முழுக்க பல அதிசயங்கள் தோன்றின. காஸ்பியன் கடலுக்கு அருகில், முதல்முறையாக ஓர் எண்ணெய் கிணற்றைக் கண்டார். அந்த எண்ணெய் மூலம் விளக்கு ஏற்றலாம் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னபோது, நம்பவே முடியவில்லை. ‘மெழுகு, விறகைப் பயன்படுத்தியே வெளிச்சம் ஏற்படுத்த முடியும். மிருகங்கள், காய்கறிகளில் இருந்தே எண்ணெய் எடுக்க முடியும். தண்ணீர் போல எண்ணெய் கிணறு இருக்குமா என்ன?’ என வியந்தார் மார்கோ போலோ.

கடல், கடலுக்கு அருகில் உள்ள நிலப் பகுதி. மீண்டும் கடல் என்று ஆமை வேகத்தில் போலோவின் பயணம் நகர்ந்தது. பெர்ஷியாவில் (இப்போது ஈரான்) திடீரென்று சலசலப்பு ஏற்பட்டபோது, கடல் பிசாசு கும்பலாக வந்துவிட்டதாக அனைவரும் அஞ்சினார். வந்தவர்கள்  கொள்ளைக்காரர்கள் என்பதால், அவர்களிடம் போராடித் தப்பினார்கள். கடல் பயணத்தை நிறுத்திவிட்டு, நிலம் வழியாகச் செல்லத் தொடங்கினார்கள். ஆப்கானிஸ்தானில் வளைந்த கொம்புகளுடன்கூடிய ஆடுகளைப் பார்த்து திகைத்து நின்றார் மார்கோ போலோ. அது என்ன உயிரினம் என்றே அவருக்குத் தெரியவில்லை. பின்னாட்களில் இவை, போலோ ஆடுகள் என்றே பெயர் பெற்றன.

சிங்கத்தை மிரட்சியுடன் வேடிக்கைப் பார்த்தார். பல விசித்திரமான காய்கறிகளையும் பழ வகைகளையும் பார்த்தார். தாலிகான் என்னும் பகுதியில் உள்ள மலைகளில் உப்பு நிறைந்தது. உலகம் முழுவதும் உயிர் வாழ்வதற்கு இந்த உப்பு போதும் என்று நினைத்தார். தங்கம் போல் உப்புக்கு  அப்போது அதிக மவுசு இருந்தது.

இப்படி வழி நெடுகிலும் அவர் பார்த்த ஒவ்வொன்றும் அவருக்கு அதிசயமாகவே இருந்தது. கோபி பாலைவனத்தையும், மத்திய ஆசியப் பகுதிகளையும் கடந்து, சீனாவை நெருங்குவதற்குள் நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆம்! வெனிஸில் இருந்து கிளம்பிய 17 வயது மார்கோ போலோ, குப்லாய் கான் அரண்மனைக்குள் நுழைந்தபோது 21 வயது.

குப்லாய் கானின் பிரமாண்டமான அரண்மனை, மங்கோலியர்களின் மாறுபட்ட வாழ்க்கைமுறை என்று அனைத்தும் மார்கோ போலோவைக் கவர்ந்தன. பிசாசுக்குப் பயந்து வீட்டில் தங்கியிருந்தால், இதையெல்லாம் பார்த்திருக்க முடியுமா? வெனிஸ் மட்டும்தான் உலகம் என்று நினைத்திருந்தால், இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைத்திருக்குமா?

‘‘இப்போது சந்தோஷமா மார்கோ போலோ, உன் பயணம் முடிந்துவிட்டதா?” எனக் கேட்டார் நிகோலோ.

‘‘இல்லை, இப்போதுதான் அப்பா தொடங்கியிருக்கிறது’’ என்றார் மார்கோ போலோ. அடுத்த 16 ஆண்டுகளுக்கு மார்கோ போலோ தொடர்ச்சியாக செய்த பயணங்கள், சந்தித்த ஆபத்துகள், சாதனைகள் பற்றி அடுத்த இதழில்...

(பயணம் தொடரும்...)

என்ன வழி?

சென்றதும் வென்றதும்! - 3

ரோப்பாவில் இருந்து கிழக்கு ஆசியா செல்ல மார்கோ போலோ காலகட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் இருந்தன. ஒன்று, பட்டுப் பாதை. இது 5,000 மைல் நீளம். பட்டாடைகள் வாங்குவதற்காக வணிகர்கள் பயன்படுத்திய பாதை இது. இரண்டாவது, மிளகு போன்ற வாசனைப் பொருள்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கடல் வழி வாசனைப் பொருள் பாதை. மார்கோ போலோ பட்டுப் பாதையைப் பயன்படுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism