Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 4

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

மார்கோ போலோ

நீரால் சூழ்ந்த வெனிஸ் நகரில் இருந்து, நான்கு ஆண்டுகள் சாகசக் கடல் பயணம் செய்து, சீனாவுக்கு வந்தார் மார்க்கோ போலோ. அவரை, பேரரசர் குப்லாய் கான் வரவேற்று, தனது அரண்மனையில் தங்கவைத்திருந்தார்.

சென்றதும் வென்றதும்! - 4

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு நாள், தன் தூதுவரை அழைத்த குப்லாய் கான், ஒரு கடிதத்தைக் கொடுத்து, 10 ஊருக்குத் தள்ளியுள்ள அரண்மனையில் சேர்த்துவிட்டு மதியத்துக்குள் வரச் சொன்னார். மார்க்கோ போலோவுக்கு ஆச்சர்யம். அவ்வளவு சீக்கிரம் எப்படி வர முடியும்?

மார்க்கோ போலோ குழப்பம் தெளிவதற்குள் மதியம் ஆகிவிட்டது. தூதரும் திரும்பிவிட்டார். மன்னரிடம் இருந்து கடிதத்தை வாங்கிக்கொண்டு முதல் தூதர் குதிரையில் பாய்ந்து செல்வார். சிறிது தூரம் சென்றதும் அங்கே இருக்கும் இன்னொரு தூதரிடம் சேர்ப்பார். இப்படி,  1,000 மைல் என்றாலும், விரைவில் செய்தியைச் சேர்த்துவிட முடியும்.

இன்னொரு நாள், வாழ்நாளில் முதல் முறையாகக் காகிதத்தில் தயாரிக்கப்பட்ட பணத்தைப் பார்த்து வியந்தார் மார்க்கோ போலோ. ஐரோப்பாவில், 1600-ம் ஆண்டு வரை யாரும் காகிதத்தைப் பயன்படுத்தியது இல்லை. பணம் என்றால், நாணயம். ஏதாவது எழுத வேண்டும் என்றால், விலங்கின் தோலைப் பதப்படுத்தி, கீறிக்கீறி எழுதுவார்கள்.

மற்றொரு நாள். பூமியே பிளந்துவிடுவதைப் போன்ற ஒரு சத்தம். இரு காதுகளையும் பொத்திக்கொண்டு நடுங்க ஆரம்பித்துவிட்டார் மார்க்கோ போலோ. வானம் கீழே உடைந்து விழுந்துவிட்டது என்றே நினைத்தார். ஆனால், ‘பட்டாசு வெடித்தோம், பயப்படாதீர்கள்’ என்று சீனர்கள் அவர் முதுகைச் செல்லமாகத் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தினார்கள்.

சென்றதும் வென்றதும்! - 4

குப்லாய் கான், பக்கத்து நாட்டின் மீது போர் தொடுக்கப்போகிறார் என்பது தெரிந்ததும், நானும் வருகிறேன் எனக் கிளம்பிவிட்டார். மார்க்கோ போலோவுக்கு தனிக் குதிரை வண்டிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் கவனித்தார். போர் வீரர் மட்டுமல்ல, அவர் அமர்ந்திருந்த குதிரையும் கவசம் அணிந்திருந்தது.

வீரர்கள் பயன்படுத்திய வில், அம்பு ஆயுதங்களும் மார்க்கோ போலோவை மிகவும் கவர்ந்தன. ஐரோப்பாவைவிட, சீன அம்புகள் பல மடங்கு வேகத்துடன் சீறிப் பாய்வதை அவர் உணர்ந்தார்.

பெரிய மரக் கிளைகள், பட்டைகள், சக்கரங்கள் ஆகியவற்றை இணைத்து,  பிரமாண்டமான உண்டிக்கோலைத் தயார்செய்து, பெரிய கற்களைவைத்து எதிரிகள் மீது வீசினார்கள். இறந்துபோன விலங்குகளின்  உடல்களையும் இப்படி வீசினார்கள்.  அதிலிருந்து நோய்த் தொற்றும் கிருமிகள் பரவி எதிரிகளை அழித்துவிடுமாம்.

இப்படி, மார்க்கோ போலோ தன் வாழ்நாளின் மிக முக்கியமான பாடங்களைப் பயணங்கள் மூலம் கற்றார். திபெத், பர்மா, ஜப்பான் எனத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த ஆசியப் பகுதிகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. 1292-ல் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கினார் மார்க்கோ போலோ.

பெரிய வணிகக் கப்பலில், 300 பேர் உடன் வந்தனர். கோரமண்டல் கரை வழியாக இன்றைய தஞ்சாவூர் பகுதியை அடைந்தார் மார்க்கோ போலோ. அப்போது, ஆட்சியில் இருந்தவர்கள் பாண்டியர்கள். மன்னர்கள், சாமானியர்கள் எனப் பலரும் தயங்காமல் தரையில் அமர்வதைப் பார்த்து, அவரும் அப்படியே அமர்ந்தார்.

தமிழகத்தில் அவருக்குப் பிடிக்காத ஒரு விஷயம், வெயில். பிழியப் பிழிய வியர்வை பொங்குவதையும், தலை முதல் கால் வரை கொளுத்துவதையும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.அப்படியே சாம்பலாகிவிடுவோமோ என்று அஞ்சினார். அந்த வெயிலிலும் மன்னர்கள் உடல் முழுக்க, பல ஆபரணங்களை அணிந்திருப்பதைக் கண்டு  மயக்கமே வந்தது போலோவுக்கு.

‘அரிசி’ என்று வெள்ளையாக ஒன்றைக் கையால் அள்ளி எடுத்து, வாயில் போட்டு மெல்வதைப் பார்த்து, தானும் அவ்வாறே செய்துபார்த்தார்.

ஒரு பாத்திரத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஆவென்று வாயைத் திறந்து நீர்வீழ்ச்சி போல வாயில் கொட்டுகிறார்கள். உதடுகளில் படாமல் இப்படித் தூக்கிப் பிடித்துக்  குடிப்பது விசித்திரமாக இருக்கிறது. எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என வியந்தார் மார்க்கோ போலோ.

மனிதனின் தலை அளவு உள்ள பெரிய காய் ஒன்றை எல்லோரும் சாப்பிடுவதைக் கண்டு ரசித்தார். அது தேங்காய்.

இப்படி அவரால் புரிந்துகொள்ள முடியாத பல விநோதங்கள் தமிழகத்தில் இருந்தன. ‘வாயில் ஏதோ இலையை மடக்கிப் போட்டு மெல்கிறார்கள். நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று சொல்கிறார்கள். மாட்டை வணங்குகிறார்கள். மாட்டின் சாணத்தை வீடு முழுக்கப் பூசுகிறார்கள். ஆண் சாமியோடு சேர்த்து, பெண் சாமிகளும் கோயில்களில் இருக்கின்றன. இரவு நேரங்களில் இந்தக் கடவுள்கள் உயிர்பெற்று எழுந்து உலாவும் எனப் பாடுகிறார்கள். பெரிய இலையைப் பறித்து வந்து, அதில் உணவு சாப்பிடுகிறார்கள்.’

இப்படி, தமிழகம் பற்றிப் பல விஷயங்களை அவரது நூலில் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு அதிசய சக்தி இருப்பதால் 250 ஆண்டுகள் வாழ்கிறார்கள். சில பயமுறுத்தும் விலங்குகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிங்கம், சிறுத்தை எனப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். சில குரங்குகள் பார்ப்பதற்கு மனிதர்களைப் போலவே இருக்கின்றன. பல வண்ணங்கள்கொண்ட  பெரிய பறவை ஒன்று உள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத அந்த அதிசயத்தின் பெயர், ‘மயில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்றதும் வென்றதும்! - 4

மார்க்கோ போலோவின் மிகப் பெரிய சாதனை இதுதான். பல இடங்களுக்குத் துணிச்சலாகச் சென்று வந்தார். தான் கண்ட, கேள்விப்பட்ட அத்தனை அதிசயக் கதைகளையும், அற்புதக் காட்சிகளையும்  விரிவாக எழுதிவைத்தார். எந்தப் புதிய இடத்துக்குப் போனாலும் அந்த இடத்தின் பெயர், அங்கு வசிக்கும் மக்களின் மொழி, நடை உடை பாவனைகள் பற்றி குறித்துக்கொண்டார்.

பிற்காலத்தில், இந்தப் புத்தகத்தைப் படித்துதான் பலர் சீனாவைப் பற்றியும் ஆசியாவைப் பற்றியும் கற்றுக்கொண்டார்கள். அந்த வகையில் மார்க்கோ போலோ, பயணிகளின் பயணி.

வாஸ்கோ ட காமாவைப் போல மார்க்கோ போலோ புதிய கடல் வழித்தடம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கொலம்பஸ் தொடங்கி பல பிற்கால மாலுமிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார். இரண்டு தெரு தள்ளி எதையும் பார்த்திராத, வெனிஸ் நகரில் இருந்து முதல் நபராக 11,000 மைல் பயணம் மேற்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளைப் படித்த பலர், அதில் வரும் பல விஷயங்களை நம்பவில்லை. கற்பனையில் மட்டுமே இதெல்லாம் நடக்கும், உண்மையில் நீங்கள் இங்கெல்லாம் போனீர்களா, இதையெல்லாம் பார்த்தீர்களா என அவரிடம் ஒருமுறை கேட்டார்களாம்.

70 வயது தாத்தாவாக இருந்த மார்க்கோ போலோ, அவர்களைப் பார்த்து சிரித்தவாறு, ‘‘இதில் உள்ள அனைத்தும் உண்மை. நான் பார்த்ததில் பாதியைத்தான் எழுதி இருக்கிறேன். முழுக்க எழுத நேரம் இல்லை.’’ என்றார்.

(பயணம் தொடரும்...)

சென்றதும் வென்றதும்! - 4