Published:Updated:

ஆயிரத்தில் ஒருவன்!

ஆயிரத்தில் ஒருவன்!

லக கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்தக்  கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், மும்பையைச் சேர்ந்த 15 வயது பிரணவ் தனவடே.

ஆயிரத்தில் ஒருவன்!

பத்தாம் வகுப்பு படிக்கும் பிரணவ், மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, பந்தரி கோப்பைக்காக பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில், 323 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் நின்று, 1009 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார்.

ஆட்டோக்காரர் மகனான பிரணவுக்கு, கிரிக்கெட் என்றால் உயிர். தற்போது 10-ம் வகுப்பு என்பதால், பள்ளி நிர்வாகம் இவரை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரை கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. ஆனால், மனம் முழுவதும் கிரிக்கெட்டே நிறைந்திருந்தது. பெற்றோரிடம் சொல்லி, ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று, மீண்டும் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்துள்ளார் பிரணவ்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும்  பிரணவ், ஆறு அல்லது ஏழாவது நிலையில்தான் பேட்டிங் செய்வார். எனவே, இதுவரை ஒரு சதம்கூட எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாகத் தொடக்க வீரராகக் களம் இறங்க ஆரம்பித்தார். ‘‘எவ்வளவுதான் கஷ்டப்பட்டு ஆடினாலும் 70 முதல் 80 ரன்களில் ஆட்டம் இழந்துவிடுவேன். என் பயிற்சியாளர் முபின், ‘எப்போதும் தேவையற்ற ஷாட் விளையாடி, விக்கெட்டை இழக்கிறாய். இனி, உன் கேரியரே கிரிக்கெட்தான் என மனதில் நினைத்துக்கொண்டு  விளையாடு. பெரிதாக யோசி’ எனச் சொன்னார். நான்கு நாட்கள் கழித்து ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிரான இந்தப் போட்டியில் பங்கேற்றேன்’’ எனப் பூரிப்புடன் சொல்கிறார் பிரணவ்.

628 ரன்கள் என்பதே, இதுவரை தனிநபர் ஒருவர் கிரிக்கெட்டில் குவித்த அதிகபட்ச ஸ்கோர்.

1899-ம் ஆண்டு லண்டனில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், இந்தச் சாதனையை நிகழ்த்தினார் கொலின்ஸ் என்பவர். இந்தியாவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பிரித்வி ஷா என்ற சிறுவன் 526 ரன்களைக் குவித்தான்.

ஆனால், போட்டி நடந்த முதல் நாளே 199 பந்துகளைச் சந்தித்து 652 ரன்களைக் குவித்து, வியக்கவைத்தார் பிரணவ். அன்றைய தினம் இரவு தனது அம்மாவிடம், ‘நாளைய ஆட்டத்தில் 1,000 ரன்களைக் குவிப்பேன்’ எனச் சொல்லி இருக்கிறார். மறுநாள் உணவு இடைவேளையின்போது, 921 ரன்கள் எடுத்திருந்தார் பிரணவ். பயிற்சியாளரிடம் சென்று, ‘சோர்வாக இருக்கிறது, டிக்ளேர் செய்துவிடலாம்’ என்று தெரிவித்திருக்கிறார். ‘‘உன்னால் முடியும். 1,000 ரன்கள் என்ற மாபெரும் சாதனைக்கான வாய்ப்பை விட்டுவிடாதே’ என உற்சாகப்படுத்தி இருக்கிறார். சாப்பிட்டுவிட்டு மைதானத்துக்குச் சென்ற பிரணவ், அடுத்த அரை மணி நேரத்தில் 1,000 ரன்கள் என்கிற மேஜிக் இலக்கைத் தொட்டார். 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என கிரிக்கெட் விளையாடும் உலகின் முன்னணி நாடுகள்,   பிரணவ் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- பு.விவேக் ஆனந்த்