Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 5

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

ஜேம்ஸ் குக்

சி, பட்டன், ரிப்பன் போன்ற துணி தைக்க உதவும் பொருட்களை விற்பனை செய்யும் கடை அது.  அங்கு வேலைசெய்தால், நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இளம் வயதிலேயே ஜேம்ஸ் குக் அங்கே சேர்த்து விடப்பட்டார். பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்கி, பணம் சம்பாதித்து முன்னேறலாம். எந்தப் பொருளுக்கு என்ன விலை என்றெல்லாம் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒரு நாள் தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவர், சில பொருட்களை வாங்கினார். அவர் கொடுத்த நாணயங்களில் ஒன்று வித்தியாசமாக இருந்தது. அதில், எஸ்எஸ்சி என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதற்கு ‘சௌத் சீ கம்பெனி’ என்று சொன்னார்கள். அப்படியென்றால்...

சென்றதும் வென்றதும்! - 5

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரிட்டிஷ் அரசும் சில தனியார் நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய ஒரு வர்த்தக அமைப்பு. கப்பல்கள் மூலம் தென் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, வர்த்தகம் செய்வதற்கு உரிமை பெற்றிருந்தது இந்த நிறுவனம். அவர்கள் தயாரித்த நாணயங்களில் இந்த முத்திரை இருக்கும். அந்த நாயணத்தைப் பார்த்ததும் அமெரிக்கக் கனவு காண ஆரம்பித்துவிட்டார் ஜேம்ஸ் குக். அதற்குப் பிறகு ஊசி, நூல், பட்டன் மீது அவர் மனம் போகுமா?

18 வயது ஆனபோது, குக்கின் கனவு நிறைவேறியது. ‘‘பால்டிக் கடல் வரை போகிறோம். எடுபிடி வேலை செய்ய வருகிறாயா?’’ என்று சிலர் கேட்டதும் துள்ளிக்குதித்து ஓடினார் குக். 1755-ல் பிரிட்டன், ஃப்ரான்ஸ் இரு நாடுகளும் மோதிக்கொண்டபோது, குக் தனது நாடான பிரிட்டனுக்காகப் போரிட, கப்பல் படையில் சேர்ந்தார். கப்பலில் குக் இருக்கிறார் என்றால், பயப்படவேண்டியது இல்லை என்கிற  அளவுக்கு உயர்ந்தார். ‘‘எங்களுடன் வந்து கப்பலைச் செலுத்துகிறீர்களா? உங்களுக்கு எவ்வளவு பணம் தரட்டும்?’’ என்று பலரும் ஜேம்ஸ் குக்கைத் தொல்லைப்படுத்தினார்கள்.

ஜேம்ஸ் குக் தேர்ந்தெடுத்தது, ‘பிரிட்டிஷ் ராயல் சொஸைட்டியின் எண்டவர்’ என்னும் கப்பலை. அது, பெரிய சரக்குக் கப்பல். பொதுவாக, நிலக்கரியைக் கொண்டுசெல்லவே அதைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இரண்டு முக்கிய ஆராய்ச்சிக்காக, ஜேம்ஸ் குக் அந்தக் கப்பலுக்கு வரவழைக்கப்பட்டிருந்தார். முதலாவதாக, சூரியனுக்கும் பூமிக்குமான தொலைவைக் கண்டறிய வேண்டும். வீனஸ் கிரகம் இந்த இரண்டுக்கும் இடையில் தோன்றப்போவதாக வானியல் விஞ்ஞானிகள் கணித்திருந்ததால், அந்த நிகழ்வு பற்றி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்பது முதல் வேலை. இரண்டாவதாக, தெற்கில் ஒரு புதிய கண்டம் இருப்பதாக பல காலமாகப் பேசி வந்தார்கள். அது, உண்மையா எனக் கண்டுபிடிக்க வேண்டும்.

புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது சரி, வீனஸையும் சூரியனையும் பற்றி அவருக்கு என்ன தெரியும்? ஜேம்ஸ் குக், சிறந்த  மாலுமி மட்டுமல்ல. வரைபடங்கள் தயாரிக்கவும் தெரிந்தவர். கார்டோகிராஃபி என இந்தத் துறை அழைக்கப்படுகிறது. போர்க் கப்பலில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், அற்புதமான வரைபடங்களைத் தயாரிப்பார். அறிவியலுக்கு அறிவியல், சாகசத்துக்குச் சாகசம் என இரண்டிலும் வெளுத்து வாங்கியவர் குக்.

சென்றதும் வென்றதும்! - 5

ஜேம்ஸ் குக்கின் முதல் பெரும் பயணம் 26 ஆகஸ்ட் 1768-ல் ஆரம்பமானது. நீண்ட பட்டன் வைத்த வெள்ளைச் சட்டை, நீல நிற மேல் கோட் அணிந்து கம்பீரமாக வந்த ஜேம்ஸ் குக்கை, கப்பலில் இருந்த பணியாளர்கள் சாதாரணமாகத்தான் பார்த்தார்கள். வழக்கம்போல அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

‘‘இன்று முதல் நீங்கள் சில புதிய பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.  தினமும் குளிக்க வேண்டும். யாராவது குளிக்கவில்லை எனத் தெரிந்தால், தண்டனை கிடைக்கும். கப்பலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிறு தூசுகூட இருக்கக் கூடாது. வாரத்துக்கு இரண்டு முறை படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டும்’’ என்றார்.

பணியாளர்கள் திருதிருவென விழித்தார்கள். ‘இவருக்கு என்ன ஆகிவிட்டது? நான் குளித்தால் என்ன, குளிக்காமல் போனால் என்ன? படுக்கையை மாற்றினால் என்ன, தலைகீழாகப் போட்டு படுத்தால் என்ன?’ என்று சிணுங்கிக்கொண்டே குளித்தார்கள். இதோடு விட்டாரா? பை நிறைய எலுமிச்சம் பழங்களைக் கொண்டுவந்திருந்தார் ஜேம்ஸ் குக். அதை எல்லோரும் குடித்தே தீர வேண்டுமாம். ‘அடக் கொடுமையே! இவருக்கு உண்மையிலேயே கப்பல் பற்றி ஏதாவது தெரியுமா தெரியாதா?’ என்று நினைத்தார்கள்.

ஜேம்ஸ் குக், தன் கடமையை மறந்துவிடவில்லை. கானரி, கேப் வெர்டே தீவுகள், ரியோ டி ஜெனிரோ ஆகியவற்றைக் கடந்து, தென் அமெரிக்காவில் உள்ள ‘கேப் ஹார்ன்’ பகுதியைச் சுற்றிவந்து, 13 ஏப்ரல் 1769-ல் ‘டெஹிடி’ என்னும்  இடத்தை வந்தடைந்தது எண்டவர் கப்பல். வீனஸை  அங்கே ஆராயலாம் என்பது திட்டம். ஆனால், சூரியக் கதிர்கள் பலமாக இருந்ததால், கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஜேம்ஸ் குக் சோர்ந்துவிடவில்லை. அந்தப் பணிக்குப் பதில், அருகில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்து குறித்துக்கொண்டார்.

அடுத்து, புதிய கண்டத்தைக் கண்டடைவதற்கான பயணம் ஆரம்பமானது. இந்தப் பயணம் ஏமாற்றம் அளிக்கவில்லை. விரைவில், புதிய பகுதியைக் கண்டறிந்தார்கள். அந்தக் கண்டத்தின் ஒரு பகுதி நியூஸிலாந்து. ஜேம்ஸ் குக் குதூகலம் அடைந்தார். நியூஸிலாந்து இரண்டு தீவுகளாக இருப்பதைக் கண்டார். மவோரி பழங்குடி மக்கள் தங்கள் முகத்தில் ஏதேதோ உருவங்கள் வரைந்திருந்ததைப் பார்த்து ஆச்சர்யத்துடன் விசாரித்தார். அதுபோல  குக்கின் ஆட்கள் வரைந்துகொண்டார்கள். பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் (டாட்டூஸ்) மேற்கு உலகுக்கு அறிமுகமானது இப்படித்தான்.

ஜேம்ஸ் குக் மிகக் கவனமாக நேரம் செலவிட்டு, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து நியூஸிலாந்து வரையிலான வழித்தடத்தை வரைபடமாகத் தீட்டினார். எங்கு, எந்தத் திசையில் திரும்ப வேண்டும், என்னென்ன தீவுகளை அல்லது பிரதேசங்களைக் கடக்க வேண்டும், எந்தக் கடல் பகுதி எங்கே பிரிகிறது, அதன் சிறப்புத் தன்மைகள் என்ன என்பதை வரைந்துகொண்டார்.

சென்றதும் வென்றதும்! - 5

ஜேம்ஸ் குக் உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட கப்பல் பணியாளர்கள், ‘‘ஐயா, எல்லாம் சரி. நாங்கள் தினமும் குளிக்க வேண்டும் என எதற்காகச் சொன்னீர்கள்?’’ என்று கேட்டார்கள்.

ஜேம்ஸ் குக் சிரித்தபடியே, ‘‘சுத்தமாக இருந்தால், ஆரோக்கியமாக இருக்கலாம். குளிக்காமல் அழுக்காக இருந்தால், பலவித நோய்கள் தொற்றிக்கொள்ளும். உங்களுக்கு அப்படி நடக்கக் கூடாது’’ என்றார் அக்கறையுடன்.

(பயணம் தொடரும்...)