அறிவியல் நாயகி!
‘‘எனர்ஜி சேவிங் பற்றி பிரதமர் பேசியதுதான் என் கண்டுபிடிப்புக்கான இன்ஸ்பிரேஷன்’’ எனப் புருவத்தை உயர்த்தவைக்கிறார் ஸ்ருதி சரஸ்வதி.

வேலூர், க்ராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஸ்ருதி, தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி போட்டியில் பங்கேற்ற சுட்டி விஞ்ஞானிகளில் ஒருவர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த இன்ஸ்பயர் அவார்டு அறிவியல் கண்காட்சியில், மூன்று விதமான கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்தார் ஸ்ருதி. அதை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், மாநில அளவில் தேர்வுசெய்து தங்கப் பதக்கம் அளித்தனர். இதன் மூலம், டெல்லியில் நடந்த தேசியப் போட்டிக்குத் தேர்வானார்.
வாகனம் செல்லும்போது, சென்சார் மூலமாகத் தானாகவே மின்சாரம் சேமிக்கும் கருவி, இவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று. சாலைப் பகுதியில் வாகனம் அல்லது மனித நடமாட்டம் இருக்கும்போது, சாலை ஓரங்களில் இருக்கும் மின்விளக்கு தானாக ஒளிரும். நடமாட்டம் இல்லாதபோது ஒளிராது. இரண்டாவது கண்டுபிடிப்பு, சிக்னல் சந்திப்புகளில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் சில வாகனங்கள் மீறிச் செல்வதை சென்சார் மூலம் தானியங்கித் தடை உண்டாக்கும் கருவி. பச்சை விளக்கு ஒளிர்ந்ததும் தடை மறைந்துவிடும். மூன்றாவது கண்டுபிடிப்பு, அவசர ஊர்தி (Ambulance) மற்றும் தீயணைப்பு வாகனம் செல்லும்போது சாலையில் வைக்கப்பட்டிருக்கும் IR Transmitter (உணறிகள்) மூலமாகத் தடையின்றிச் செல்ல உதவுவது. இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் சமூக அக்கறை மிளிர்கிறது.

“தேசியப் போட்டியில் கலந்துகொண்ட அனுபவமே மிகப் பெரிய பரிசு. பல மாநிலங்களில் இருந்து வந்து ஐ.ஐ.டி-யில் ஆய்வுசெய்யும் மாணவர்கள் பலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதை என்றும் மறக்க முடியாது” என்கிற ஸ்ருதியின் முகத்தில் புன்னகை ஒளிர்கிறது.
- ம.சுமன்