Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 6

சென்றதும் வென்றதும்! - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 6

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

ஜேம்ஸ் குக்

‘மனிதர்களால் நினைத்துப்பார்க்க முடியாத இடத்துக்குப் போக வேண்டும் என்பதுதான் என் எளிமையான கனவு’ என்றார் ஜேம்ஸ் குக்.

அப்படி ஒரு வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ‘டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் (Terra Australis) போய் வரவேண்டும். முடியுமா?’ என்று கேட்டார்கள். ‘ஓ... நான் தயார்’ என்று கிளம்பிவிட்டார் ஜேம்ஸ் குக்.

அது என்ன டெர்ரா ஆஸ்டிராலிஸ்? 15-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை தயாரிக்கப்பட்ட  பல வரைபடங்களில் இந்தப்    பெயரைப் பார்க்கலாம்.  ஆசியா,  ஐரோப்பா, ஆப்பிரிக்கா போல அது ஒரு பெரிய கண்டம் என்றும், பல அற்புதமான உயிரினங்களைக்கொண்ட பெரிய நிலப் பிரதேசம் என்றும், நீண்ட பனிப் பிரதேசம் என்றும் பலவிதமாகச் சொல்வார்கள்.

சென்றதும் வென்றதும்! - 6

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி, குறிப்பாக அது எங்கே இருக்கிறது? இங்கேதான் சிக்கலே. யாரும் அதைப் பார்த்தது இல்லை.  இருக்கு, ஆனால் எங்கே என்று தெரியாது.  இருந்தாலும், ஜேம்ஸ் குக் கிளம்பிவிட்டார். ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை முழுக்க சுற்றி வந்தவர். தெற்கில் நியூஸிலாந்து வரை சென்றவர். தெற்கில் இன்னும் கொஞ்சம் போனால், ஒளிந்துகொண்டிருக்கும் அந்த டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்னும் மாயக் கண்டத்தைக் கண்டுபிடித்துவிட முடியாதா என்ன?

1772-ம் ஆண்டு குக்கின் இரண்டாவது பயணம் ஆரம்பமானது. இந்த முறை, ‘ரிசல்யூஷன்’, ‘அட்வென்ச்சர்’ என்ற கப்பல்கள் தயாராக இருந்தன. கப்பலில் ஏறியதுமே குக் வழக்கம்போல பணியாளர்களை அழைத்தார். அதே பழைய பல்லவி. தினமும் குளி, துணிகளைத் துவைத்துக் காயப்போடு, சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவிக்கொள் எனும் அறிவுரைகள்.

அப்போது, ‘ஸ்கர்வி’ எனப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு நோய் தாக்கும். மாலுமிகள், கப்பல் பணியாளர்கள், பயணிகள் பலரும் பயணத்தின்போதே உயிரிழந்தனர். தன்னுடன் வருபவர்களுக்கு ஸ்கர்வி வந்துவிடக் கூடாது என ஓர் ஆராய்ச்சியாளராகவே மாறி, பல பரிசோதனைகளை மேற்கொண்டார் ஜேம்ஸ் குக்.

பலவிதமான புட்டிகளில், வகைவகையான சாறுகளைப் பிழிந்து, அவற்றை அனைவருக்கும் கொடுத்தார் ஜேம்ஸ் குக். என்ன கொடுத்தாலும் ஏன், ஏது எனக் கேள்விகள் கேட்காமல் வாங்கி, டபக்கெனக் குடித்துவிட வேண்டும். ஊறவைத்த கேரட், மால்ட், ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு ஆகியவை குக் அதிகம் பயன்படுத்திய மருந்துகள். இயற்கை மருத்துவத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. தன்னுடன் சில மருத்துவர்களையும் அழைத்து வந்திருந்தார். செடி, கொடி, இலை, தழை எனப் பலவற்றைச் சேகரித்து, அவற்றின் மருத்துவக் குணங்களைக் கண்டுபிடிப்பார்கள். இந்தப் பரிசோதனை பெரும் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் குக் சென்ற கப்பல்கள் தவிர, மற்ற கப்பல்களில் சென்றவர்களில் பலரை ஸ்கர்வி நோய் தாக்கியது. அதன் பிறகு புறப்பட்ட கப்பல்கள் அனைத்திலும் ஜேம்ஸ் குக்கின் வழிமுறையே கையாளப்பட்டது. குறிப்பாக, எலுமிச்சைச் சாறு பலவித உபாதைகளுக்கு உதவியாக இருந்தது. வரைபடம் இருக்கிறதா என்பதைவிட, எலுமிச்சைச் சாறு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் கப்பலையே இயக்கினார்கள். எல்லா மாலுமிகளும் தங்கள் பணியாளர்களுக்கு ஜேம்ஸ் குக் வழங்கிய அதே முழ நீள அறிவுரைகளை வழங்கினார்கள். சுத்தமாக இருந்து, நல்ல உணவைச் சாப்பிட்டார்கள்.

சென்றதும் வென்றதும்! - 6

சரி, டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்ன ஆனது? நியூஸிலாந்தில் டேரா போட்டுத் தங்கிய ஜேம்ஸ் குக், அங்கிருந்து எல்லாத் திசைகளிலும் சென்று பார்த்தார். எந்தக் கண்டத்தையும் காணமுடியவில்லை. கடுமையான குளிர் வாட்டியது. பெரிய பெரிய பனிப் பாறைகள் தென்பட்டன. திடீரென்று சூறாவளி தாக்கியது. இரவு நேரங்களில் புயல் வீசியபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டார்கள்.

இப்படி 10,600 மைல் தூரத்தை ஜேம்ஸ் குக் கடந்துசென்றார். எந்தவித நிலப்பரப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்பது ஒரு கற்பனை இடம். யாரும் அதைத் தேடிப் போக வேண்டாம்’ எனத் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதினார்.

அவர் சொன்ன பிறகுதான் உலகம் ஏற்றுக்கொண்டது. புதிய கண்டத்தைக் கண்டுபிடித்து புகழ் பெற்றவர்கள் மத்தியில், ஒரு கண்டம் இல்லவே இல்லை என்பதைச்  சொன்ன முதல் பயணி,  ஜேம்ஸ் குக். நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை முதல்முறையாக, விரிவாக வரைபடத்தில் குறித்தவர் இவர்தான். பசிபிக் பெருங்கடல் பகுதி பற்றியும் விரிவாக வரைபடத்தில் குறித்தார். ஜேம்ஸ் குக் போட்டுக் கொடுத்த பாதையில்தான் அதற்குப் பிறகு வந்தவர்கள் அனைவரும் சென்றார்கள்.

ஜேம்ஸ் குக்கின் மூன்றாவது பயணம் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்தவை. 1779-ம் ஆண்டு ஹவாய் தீவை வந்தடைந்த ஜேம்ஸ் குக், அங்கே சில வாரங்கள் தங்கினார். பிறகு, ‘கீலாகெக்குவா விரிகுடா’ (Kealakekua Bay) எனும் பகுதிக்குச் சென்றார். கப்பலை விட்டு அவர் கீழே இறங்கியதும், ஹவாய் மக்கள் கும்பல் கும்பலாக ஓடிவந்து வணங்கினார்கள்.  ‘லோனோ... எங்கள் தெய்வமே வந்துவிட்டீர்களா’ என்று ஆரவாரம் செய்தார்கள்.

பிறகுதான் தெரிந்தது, அது அவர்களுடைய பண்டிகை தினம். லோனோ என்னும் கடவுளை வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நேரம், வித்தியாசமான உடையில் வந்த ஜேம்ஸ் குக்கை அவர்கள், ‘லோனோ’ என்றே நினைத்துவிட்டார்கள்.

சில தினங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 14 பிப்ரவரி 1779 அன்று, ஏதோ கருத்து வித்தியாசம். ஜேம்ஸ் குக் குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் நடந்த வாய்ச் சண்டை, அடிதடி வரை போய்விட்டது. சிலர், பின்னால் இருந்தபடி ஜேம்ஸ் குக்கின் தலையைத் தாக்கினார்கள். கீழே விழுந்தவரை சிலர் கத்தியால் குத்த, ஜேம்ஸ் குக் அதே இடத்தில் மரணம் அடைந்தார்.

அவசரப்பட்டு இப்படிச் சிலர் நடந்துகொண்டாலும், ஹவாய் மக்கள் ஜேம்ஸ் குக்கை நினைத்து வருந்தினார்கள். ‘அவர் லோனோவாக இல்லாமல் இருக்கலாம், இருந்தாலும் அவர் எங்களுக்குக் கடவுளைப் போன்றவர்தான்’ என்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்றும் ஜேம்ஸ் குக்கின் அடையாளம் இதுதான். அவர் உலகின் தலைசிறந்த பயணிகளில் ஒருவர் மட்டுமல்ல, நல்ல மனிதர்.

(பயணங்கள் தொடரும்...)

சென்றதும் வென்றதும்! - 6