Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 7

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

பிரீமியம் ஸ்டோரி

மெக்கல்லன்

வாஸ்கோ ட காமா பிறந்து 20 ஆண்டுகள் கழித்து, அதே போர்ச்சுக்கல் நாட்டில் மெக்கல்லன் பிறந்தார். ஆனால், போர்ச்சுக்கலைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள், ஆஹா ஓஹோ என மெக்கல்லனைப் புகழ மாட்டார்கள்.

‘‘மெக்கல்லன் பிறந்தது என்னவோ இங்கேதான், ஆனால், அவர் ஸ்பெயின் மன்னரின் உதவியுடன்தானே பயணம் மேற்கொண்டார்’’ என்பார்கள்.

சென்றதும் வென்றதும்! - 7

ஸ்பெயினுக்குச் சென்று கேட்டால்,  அவர்களும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். ‘எங்கள் மன்னர் உதவி செய்தாலும் அவர் போர்ச்சுக்கல் நாட்டுக்காரர்தானே’ என நகர்ந்துவிடுவார்கள்.

பாவம்தான் இந்த மெக்கல்லன். இவர்  புகழ் சர்வதேச அளவில் பரவியதால் பிழைத்துக்கொண்டார். மெக்கல்லன், உலகை வலம்வந்த கதையைப் பார்ப்பதற்கு முன்னால், சுருக்கமாக அவரை வலம்வந்துவிடலாம்.

மெக்கல்லன் காலத்தில் ஐரோப்பாவில் போர்ச்சுக்கலும் ஸ்பெயினும்தான் வல்லரசுகள். இந்த இரண்டையும் சேர்த்து, ‘ஐபீரியன் தீபகற்பம்’ என்று அழைப்பார்கள். இங்கிருந்த வணிகர்கள், அரசர்கள், மாலுமிகள், பொதுமக்கள் எல்லோருக்கும் அப்போது இருந்த ஒரே விருப்பம், ஸ்பைஸ் எனப்படும் வாசனைப் பொருட்கள். இறைச்சியைப் பாதுகாக்கவும் உணவுக்குச் சுவையூட்டவும் மிளகு, ஏலக்காய், பட்டை உள்ளிட்ட வாசனைப் பொருட்களை விரும்பிப் பயன்படுத்தினர். இந்த வாசனைப் பொருட்களின் தாய்வீடு, ஸ்பைஸ் தீவுகள் (தற்போதைய பெயர் இந்தோனேஷியா). இங்கே, நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் இருந்தன.

முதலில் அரேபியர்களுக்கு மட்டுமே இந்தத் தீவுகள் தெரியும். வாஸ்கோ ட காமா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, போர்ச்சுகீசியர்களும் தெரிந்துகொண்டனர். ஸ்பைஸ் தீவுகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆசியாவும் ஐரோப்பியர்கள் மத்தியில் பிரபலமானது. ஆசியாவைக் குறிவைத்து கொலம்பஸ் பயணம் மேற்கொண்டார். அவருக்குப் பிறகு மெக்கல்லன்.

மெக்கல்லனின் ஆரம்பகால வாழ்க்கை மர்மமாகவே இருக்கிறது. இங்கே வசித்திருக்கலாம், அங்கே படித்திருக்கலாம் எனும் யூகங்களே அதிகம். உறுதியாகத் தெரியவரும் தகவல், இளம் வயதில் மெக்கல்லன் போர்ச்சுக்கல் அரண்மனையில் பணியாளராக இருந்தார். எப்படிப்பட்ட வேலை?

ராஜ குடும்பத்தினர் அரண்மனைக்கு வரும்போது, முதுகை வளைத்து வணக்கம் செலுத்த வேண்டும். பணிவாகப் பின்னால் போக வேண்டும். அவர்களைக் குஷிப்படுத்த வேடிக்கையாகக் கதை சொல்ல வேண்டும்.  விடுகதை, நகைச்சுவைச் சம்பவங்களைச் சொல்லி சிரிக்கவைக்க வேண்டும். தேவைப்பட்டால் நடனம் ஆட வேண்டும்.

சென்றதும் வென்றதும்! - 7

இதை மட்டுமே மெக்கல்லன் செய்துகொண்டிருக்காமல், அரண்மனைக்கு வந்துபோகும் விதவிதமான மனிதர்களையும் கவனிக்க ஆரம்பித்தார். அவர் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. மெக்கல்லன் சந்தித்த பலரும் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் கப்பல் அதிகாரிகளாகவும் இருந்தனர். அவர்களுடைய நடை உடை, பழக்கவழக்கம், பேச்சு முறை எல்லாம் அவரைக் கவர்ந்தன. குறிப்பாக, ஸ்பைஸ் தீவுகள் குறித்து அவர்கள் பேசிக்கொண்டதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார். அங்கே போவதற்கு போர்ச்சுக்கலில் இருந்து புதிய வழிகளைக் கண்டறிவது பற்றித் தெரிந்துகொண்டார்.

‘அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் தீவுகளில்? மிளகும்  ஏலக்காயும் அங்கே மட்டும்தான் கிடைக்குமா? அங்கே போவது அவ்வளவு கஷ்டமா? ஆசியா, ஆசியா என்கிறார்களே... அது எங்கே இருக்கிறது?’ அவருக்குள் கேள்விகள் எழுந்தன.மெக்கல்லனின் ஆர்வம், கப்பல் மீது திரும்பியது. ஒரு பெரிய கப்பலில் செல்லும் வாய்ப்பு வந்தால்,  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தார். கடலில் இறங்கிய பிறகு எல்லா பக்கமும் நீர்தானே இருக்கும்? எந்தப் பக்கம் போக வேண்டும், எங்கே திரும்ப வேண்டும்  என்பதை  எப்படித் தெரிந்து கொள்வார்கள்? என ஒவ்வொரு கேள்விக்கும் விடை கேட்டுத் தெரிந்துகொண்டார்.பிறகு, காம்பஸ் குறித்தும் வரைபடங்கள் குறித்தும்  கற்றுக்கொண்டார். கடல் பயணத்தின்போது புயலையும் மழையையும் எப்படிச் சமாளிப்பது என்பது புரிந்தது. வாசனைப் பொருட்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொண்டார்.

மெக்கல்லனையும் ஸ்பைஸஸ் ஆசை பிடித்துக்கொண்டது. ‘நாமும் கடலில் சென்றால் என்ன? ஸ்பைஸஸ் தீவுகளையும் ஆசியாவையும் கண்டு வந்தால் என்ன? அரண்மனையில்  பாடுவதும் ஆடுவதும் சலாம் போடுவதும் சுலபமாக இருக்கலாம். ஆனால், அதில் சுவாரஸ்யம் என்ன இருக்கிறது? கடல் நீரில் கால் நனைப்பதைவிட பெரிய இன்பம் வேறு’ என நினைத்தார்.ஒரு நாள், அவர் காதுக்கு ஒரு செய்தி வந்தது. ஸ்பைஸ் தீவுகளுக்குச் செல்ல, ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களாம். விரைவில் ஒரு கப்பல் அங்கே போகப்போகிறதாம். புகழ்பெற்ற பெரிய மாலுமி அதைச் செலுத்தப்போகிறாராம்.மெக்கல்லனின் இதயம் வேக வேகமாகத் துடித்தது. அந்த மாலுமி யார் என விசாரித்தார். வாஸ்கோ ட காமா எனச் சொன்னார்கள்.

‘‘அந்தக் கப்பலில் எனக்கும் இடம் கிடைக்குமா?” எனக்  கேட்டார். மன்னர் அனுமதித்தால் கிடைக்கும் என்றார்கள்.

இரண்டாம் ஜார்ஜ் மன்னர் இறந்து, முதலாம் மானுவேல் அப்போது மன்னராகப் பொறுப்பேற்றிருந்தார். புதிய மன்னர் நிச்சயம் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்பிக்கையுடன் சென்று விண்ணப்பித்தார் மெக்கல்லன்.

மன்னர், மெக்கல்லனை ஏற இறங்கப் பார்த்தார். அரண்மனைப் பணியாளருக்கு ஏன் இந்த வேலை என நினைத்தாரோ என்னவோ, ‘‘உனக்கு எதற்கு கப்பல் பயணம்?  போய் உன் வேலையைப் பார்’’ என்று சொல்லிவிட்டார்.

பாவம், மெக்கல்லன். அவர் கண் முன்னால் வாஸ்கோ ட காமாவின் கப்பல் கிளம்பிச் சென்றுவிட்டது. ‘போய் வா கப்பலே’ என்று முதுகை வளைத்து சலாம் போட்டார் மெக்கல்லன். கண்கள் முழுக்க கண்ணீர்.

‘‘இன்று இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் நானும் இதே போன்ற ஒரு கப்பலில் போகத்தான் போகிறேன். அழகிய கடலே, எனக்காக அப்போது நீ காத்திருப்பாயா?’’ என கடலைப் பார்த்துக் கேட்டார்.

கடலுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால், நிச்சயம் அது சத்தம் போட்டு, ‘‘மெக்கல்லன், நிச்சயம் உனக்காக நான் காத்திருப்பேன்’’ எனச் சொல்லியிருக்கும்.

மெக்கல்லனின் கனவு நிறைவேறும் நாளும் வந்தது. அன்று முதல் அவர் சந்தித்த சவால்களும் சாகசங்களும் பிரமிக்கவைப்பவை.

(பயணம் தொடரும்...)

சென்றதும் வென்றதும்! - 7
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு