
சுவை தரும் கப்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீங்கள், ஒரு கிளாஸில் தண்ணீரை ஊற்றிக் குடிக்கிறீர்கள். அந்த சாதாரண தண்ணீர் ஆரஞ்சு, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, லெமன் என உங்களுக்குப் பிடித்த ஒரு பழச்சாற்றைக் குடிப்பது போன்ற உணர்வைக் கொடுத்தால், எவ்வளவு உற்சாகமாக இருக்கு! நியூயார்க்கைச் சேர்ந்த ஐசாக் லாவி (Isac Lavi) என்பவர், பழங்களின் வாசனையைக் கலந்து தயாரித்திருக்கும் புது வகையான கப், உற்சாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தக் கப்பின் ஆயுட்காலம், 6 மாதங்கள். 6 சுவைகளில் கிடைக்கும் இதன் நம் ஊர் விலை 2,300 ரூபாய்.

தாத்தா பூனை!

‘உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மிக வயதான வளர்ப்புப் பூனை’ என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது, கார்டுராய் (CORDUROY). ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஒரிகானைச் சேர்ந்த இந்தப் பூனை, 1989 ஆகஸ்ட் 1-ல் பிறந்தது. 26 வயதைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘டிஃபனி டூ’ (Tiffany Two) என்ற பூனை 27 வருடங்கள் வாழ்ந்து 2015-ம் ஆண்டு மரணம் அடைந்தது. அதன் சாதனையை கார்டுராய் முறியடித்துள்ளது.

கடலில் சாதனை!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா வாட்சன் என்ற 16 வயது மாணவி, புதிய சாதனை படைத்திருக்கிறார். ‘எல்லாவின் இளஞ்சிவப்புப் பெண்’ என்று பெயரிடப்பட்ட ஒரு படகில், 210 நாட்கள் தன்னந்தனியாகக் பயணித்து, உலகைச் சுற்றி இருக்கிறார். ஏழு மாதங்களுக்குப் பிறகு, சிட்னி நகரின் புகழ்பெற்ற ஓபரா இல்லத்துக்கு அருகில் தரையில் கால் பதித்தார். சுமார் 23,000 நாட்டிக்கல் மைல் தொலைவை, யாருடைய உதவியும் இன்றி, எந்த இடத்திலும் நிற்காமல் தொடர்ந்து பயணித்துக் கடந்துள்ளார்.

ஆர்மடில்லோ!

நம் ஊர் எறும்புத்தின்னியைப் போல இருக்கும் இந்த ஆர்மடில்லோ, அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே வாழ்கிறது. ஓட்டினால் மூடப்பட்ட இதன் உடலின் அடிப்பாகம், பனி போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும். இவ்வளவு அழகான உயிரைப் பற்றி, இது வாழும் இடத்தில் யாருக்கும் தெரியவில்லை. மணல்பாங்கான முட்களைக்கொண்ட கள்ளிச் செடிகள் நிறைந்த பகுதியில் இது வாழ்கிறது. ஆபத்து நேரும் எனத் தோன்றினால், பந்தைப் போல சுருண்டுகொள்ளும்.
