Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 9

சென்றதும் வென்றதும்! - 9
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 9

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

செங் ஹே

சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெற்றது. அதன், தொடக்க விழாவில், ஒரு அணிவகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நீல ஆடை உடுத்திய மாலுமிகள், ஆளுக்கொரு துடுப்பை ஏந்தியபடி நடைபோட்டனர். அவர்களின் கையில் இருந்த துடுப்புகள் ஒன்றுசேர்ந்து, ஓர் அழகிய கப்பலாக மாறியது. ‘செங் ஹே’ என்ற தலைசிறந்த மாலுமியை நினைவுபடுத்துவதே அந்த அணிவகுப்பின் நோக்கம்.

சீனர்களே மறந்துபோன முக்கியமான மாலுமி, செங் ஹே. சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள யுனான் என்னும் இடத்தில்  1371-ல்  பிறந்தவர். பிறக்கும்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், மா ஹே. அவர், ஹுய் என்னும் சீன முஸ்லிம் இனக் குழுவைச் சேர்ந்தவர். அதனால், முகமது நபியை நினைவுகூரும் வகையில், மா என்னும் முதல் பெயரை வைத்தார்கள். எனவே, அவரை இப்போதைக்கு மா ஹே என்றே அழைப்போம்.

சென்றதும் வென்றதும்! - 9

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மா ஹே பிறந்தபோது, யுனான் பகுதியை மங்கோலியர்களான யுவான் பரம்பரையினர் ஆண்டுவந்தனர். அப்போதெல்லாம் ஒருவர் பதவிக்கு வந்துவிட்டால், அவர் மகன், அவருடைய மகன் என வம்சமே பல நூறு ஆண்டுகள் ஆளும். பிறகு, அவர்களை வீழ்த்திவிட்டு, இன்னொருவர் ஆட்சிக்கு வருவார். மா ஹே தாத்தாவின் தாத்தா, மங்கோலிய அரசரிடம் பணியாற்றியவர். அவருடைய மூதாதையர்களில் சிலர், மங்கோலியர்களாக இருந்திருக்கலாம். எனவே, மா ஹே ஒரே சமயத்தில் மங்கோலியராகவும் சீனராகவும் இஸ்லாமியராகவும் இருந்தார்.

மா ஹேவுக்கு 10 வயது ஆனபோது,  மிங் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் யுவான் பரம்பரையினர் மீது போர் தொடுத்தனர். அந்தப் போரில் மா ஹேவின் அப்பாவும் பங்கேற்று உயிரிழந்தார். யுவான் பரம்பரையும் தோற்று, மங்கோலியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சீனாவைச் சீனர்களே ஆளத் தொடங்கினார்கள். ஆம், மிங் என்பவர்கள் ஹன் சீனர்கள்.

10 வயது மா ஹேவுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ‘ஏன் திடீரென்று நம் நிலத்தில் யாரோ புகுந்துவிட்டார்கள்? அப்பா போரில் இறந்தது ஏன்? இனி எனக்கு என்னாகும்?’ எனக் கலங்கியபோது, ஒரு மிங் ஜெனரல் நெருங்கி வந்தார். அவரைப் பார்த்ததும் மா ஹேவுக்கு உடல் முழுக்க அச்சம் பரவியது. அப்பாவைப் போல என்னையும் கொல்லத்தான் வருகிறாரோ என  நினைத்து ஓடினார். அந்த ஜெனரலும் துரத்தி வர, மா ஹே சட்டென்று ஓர் ஆற்றில் குதித்துவிட்டார்.

ஜெனரலுடன் வந்திருந்த வீரர்களும் ஆற்றில் குதித்து அவனை மீட்டார்கள். அவர்கள் துரத்தி வந்தது, ஒரு மங்கோலியரின் இருப்பிடத்தைப் பற்றி விசாரிக்கவே. சரி வா, என மா ஹேவை அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றார்கள்.

ஆனால், ஒரு 10 வயது கைதியை என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘இளவரசரிடம் அழைத்துச் செல்வோம், என்ன செய்வதென்று அவர் முடிவெடுக்கட்டும்’ என நினைத்தார்கள்.

மா ஹேவை இழுத்துச் சென்று, சூ டி என்னும் மிங் இளவரசரிடம் சேர்த்தார்கள். அவருக்கும் குழப்பமாக இருந்தது. வயதில் பெரியவனாக இருந்தால், ஏதாவது வேலை செய்யவைக்கலாம். திருதிருவென்று விழித்தபடி நிற்கும் இந்தச் சிறுவனை என்ன செய்வது?

நாட்கள் செல்லச்செல்ல, மா ஹேவின் நல்ல உள்ளம் இளவரசருக்கு மிகவும் பிடித்துப்போனது. மா ஹேவுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தார். இளவரசர் என்றாலும் ஒரு பெரிய பிரதேசம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. (பின்னாளில் அதுவே பெய்ஜிங் ஆனது.) அவருக்கு வயது 21. மா ஹே தன் இனிமையான சுபாவத்தால் விரைவில் அரண்மனையில் நல்ல பெயர் வாங்கிவிட்டார். மிங் ஆட்சி பற்றிய பயமும் விலகிப்போனது. அப்பாவை இழந்தாலும் அன்பான மனிதரின் ஆதரவு கிடைத்தது.

ஒரு நாள் இளவரசர் மா ஹேவை அழைத்தார், ‘‘இங்கே பார் மா ஹே, நீ இப்படி சின்னச்சின்ன அரண்மனை வேலைகளையே செய்துகொண்டிருப்பது நல்லதல்ல. உன் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு பணியாளர் தேவையில்லை. ஒரு நல்ல ஆலோசகராக உன்னால் மாற முடியுமா?’’

‘‘ஓ... அதற்கென்ன’’ என ஒப்புக்கொண்டான் மா ஹே. ஓர் இளவரசருக்கு ஆலோசகராக இருக்க, கல்வி கற்க வேண்டும். போர்ப் பயிற்சி எடுக்க வேண்டும். அக்கம்பக்கம் உள்ள நாடுகளைப் பற்றி   தெரிந்துகொள்ள வேண்டும். இதெல்லாம் முடிகிற காரியமா?

சென்றதும் வென்றதும்! - 9

எல்லாப் பெரிய பயணங்களும் முதல் அடியில் இருந்தே தொடங்குகின்றன என்பது ஒரு சீனப் பழமொழி. மா ஹே துணிச்சலுடன் அனைத்துச் சவால்களையும் ஏற்றுக்கொண்டான். அதிக முனைப்பும் தீவிரமும் இருந்ததால், விரைவிலேயே மா ஹே மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்துத் தெரிய ஆரம்பித்தார். மா ஹே, வாலிபப் பருவம் எட்டினார்.

மா ஹேவின் திறமைகளை அங்கீகரித்து, அவரைப் பல வேலைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுத்தினார் இளவரசர். இதைக் கண்டு  அரண்மனையில் இருந்த மற்றவர்கள், இளவரசரிடம் மெள்ள முணுமுணுத்தார்கள்.

‘‘மதிப்புக்குரிய இளவரசரே! எங்களைப் போல எவ்வளவோ திறமைசாலிகள் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். போயும் போயும் ஒரு கைதியிடம் இவ்வளவு நம்பிக்கை வைக்கலாமா? மா ஹே என்னும் பெயரே விநோதமாக இருக்கிறது. அவன் நம்மைப் போல ஹன் வம்சத்தைச் சேர்ந்தவன் இல்லை. வேறு மதத்தைச் சேர்ந்தவன். பாதி மங்கோலியன். மங்கோலியர்கள் நம் எதிரிகள் என்பது உங்களுக்குத் தெரியாதா?’’ என்றார்கள்.

இளவரசர் உடனே முடிவெடுத்துவிட்டார். எல்லோருக்கும் முன்னால் மா ஹேவை வரவழைத்தார். ‘‘மா ஹே, உன் பெயரை இதோடு மறந்துவிடு. இனி, நீ ‘செங் ஹே’ என்று அழைக்கப்படுவாய். இனி செங் ஹேவை யாரும் அந்நியராகப் பார்க்க மாட்டார்கள்’’ என்றார்.

அரண்மனையில் இருப்பவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. காரணம், செங் என்பது இளவரசர் மிகவும் விரும்பி மதிக்கும் அவருடைய குதிரையின் பெயர். ‘அப்படியானால், இந்த செங் ஹேவையும் இளவரசர் மதிக்கிறார், விரும்புகிறார் என்று பொருளா? ஐயையோ, நாமே வாயைவிட்டு இவனுக்கு இன்னும் பெரிய இடத்தைக் கொடுத்துவிட்டோமே. இந்த செங் ஹே என்னவெல்லாம் செய்யப்போகிறானோ’ என நொந்துபோனார்கள்.

அவர்கள் பயந்ததைப் போலவே நடந்தது. செங் ஹேவும் இளவரசரும் சேர்ந்து, சீனாவின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள்.

(பயணம் தொடரும்...)

சென்றதும் வென்றதும்! - 9