
சுட்டி ஸ்டார் நியூஸ்!
மரம் ஏறும் ஆடுகள்!

அணில், குரங்குகள்தான் மரம் ஏறும். ஆனால், மொராக்காவில் உள்ள ஆடுகள், அருகனா எனும் மரங்களில் ஏறி, இலைகளை விரும்பி உண்ணுகின்றன. உலகிலேயே மரம் ஏறும் ஆடுகளை ஆப்பிரிக்க நாடான மொராக்காவில் மட்டும்தான் காணமுடியும்.

ஓகோ ஓவியர்!

உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவைத் தெரியும். ஆனால், அவரது முழுப் பெயர் தெரியுமா? Pablo Diego Jose Francisco de Paula Juan Nepomuceno Maria de los Remedios Cipriano dela Santisima Trinidad Ruiz y picasso. (எத்தனை எழுத்துகள் உள்ளன என எண்ணிப் பாருங்கள்)இவரது 78 ஆண்டு ஓவியப் பணியில், 13,500 வண்ண ஓவியங்கள், 1,00,000 அச்சுப் பதிவு ஓவியங்கள் மற்றும் செதுக்கல்கள், 34,000 கதை விளக்க ஓவியங்கள் மற்றும் 300 சிற்பங்களைப் படைத்திருக்கிறார்.

பெங்குவின் பாசம்!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஜோவா பெரேரா டி சௌசா (Joao Pereira de Souza) என்ற மீனவர், 2011-ம் ஆண்டு எண்ணெய்ப்படலத்தில் சிக்கி, ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெங்குவின் ஒன்றை மீட்டு, சிகிச்சை அளித்தார். அதற்கு, ‘ஜின்லிங்’ என்று பெயரும் வைத்தார். குணமடைந்ததும் கடலில் கொண்டுபோய் விட்டுவிட்டார். சில மாதங்கள் கழித்து, அதே இடத்தில் ஜின்லிங்கைப் பார்த்த ஜோவா, இன்ப அதிர்ச்சியடைந்தார். தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க ஆண்டுதோறும் பிரேசிலுக்கு வருகிறதாம். மற்ற நாட்களில் அர்ஜென்ட்டினா மற்றும் சிலி கடற்கரைகளில் இருக்கிறது. ஜோவாவைப் பார்ப்பதற்காக 5,000 மைல்கள் பயணம் மேற்கொள்ளும் பெங்குவினைப் பார்த்து, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.

நான் எலி அல்ல!

கொறித்துத் தின்னும் ஒரு குட்டிப் பிராணி, சின்சிலா (Chinchilla). இவை, பெரு நாட்டின் ஆண்டஸ் மலைப் பகுதியில் அதிகமாக வாழ்கின்றன. இதன் உடல், பட்டுப்போல மிருதுவாக இருக்கும். இதன் தோலினால், அங்கிகள் (ஃபர் கோட்) தயாரிக்கப்படுகின்றன. ராயல் சின்சிலாக்களின் தோல் மிகவும் விலை உயர்ந்தது என்பதால், வேட்டையும் அதிகரித்துவிட்டது. எனவே, பாதுகாக்கவேண்டிய இனமாகக் கவனிக்கப்படுகிறது.

பிரமிப்பு!

பிரமிடு என்றாலே நினைவுக்கு வருவது, எகிப்தின் கூம்பு வடிவிலான இந்த உலக அதிசயம். ஆனால், எகிப்தில் மட்டும் அல்லாமல் சூடான், நைஜீரியா, கிரீஸ், இந்தோனேசியா, மெக்சிகோ உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும்கூட பிரமிடுகள் உள்ளன. பேரரசர்கள், அவரது குடும்பத்தினரை அடக்கம்செய்ய இந்தப் பிரமிடுகள் கட்டப்பட்டன.
கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிடு, சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப்பரப்புகொண்டது. 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டதாம்.கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை என்றும், ஒரு லட்சம் தொழிலாளிகள் 20 வருடங்கள் பணியாற்றியிருந்தால் மட்டுமே, இத்தனை பெரிய பிரமிடை உருவாக்கியிருக்்க முடியும் என்கிறார்கள், கட்டடக்கலை வல்லுநர்கள்.

அதிசய நதி!

அமேசான் மழைக்காடுகளின் இடையே மர்மநதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 6.4 கி.மீ நீளத்துக்கு, இந்த நதியின் நீர் 50 டிகிரியிலிருந்து 90 டிகிரி செல்சியஸ் வரையும், சில இடங்களில் அதிகபட்சமாக 200 டிகிரிக்கு மேலும் வெப்பமாகிறது. இந்த நதிக்குள் தவறி விழும் விலங்குகள்,சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிடுகின்றன. ஆற்றில் இருந்து ஆவி வந்துகொண்டே இருக்கும். ஆனால், இந்தத் தண்ணீரைக் குடிக்க, சமைக்கப் பயன்படுத்தலாம் எனவும், மருத்துவ குணம்கொண்டது எனவும் இந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
