Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 10

சென்றதும் வென்றதும்! - 10
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 10

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 10

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்! - 10
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 10

செங் ஹே

மிங் இளவரசர் சூ டி, 1402-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி சீனாவின் மன்னர் ஆனார். நாட்டில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள விரும்பினார். சீனப் பெருஞ்சுவரை விரிவாக்குவது அவரது கனவு. அதற்கான வேலைகள் தொடங்கின. தலைநகர் பெய்ஜிங்கில் புதிய அரண்மனை உள்ளிட்ட சில கட்டுமான வேலைகளையும் தொடங்கினார். சீனாவின் வர்த்தக உறவுகளை வலுவாக்க, உலக நாடுகளுடன் தொடர்புகொள்ள விரும்பினார். செங் ஹே அந்தப் பொறுப்பை ஏற்றார்.

‘‘செங் ஹே, எனக்குப் பல கனவுகள் இருக்கின்றன. அவை நிறைவேற நிறையப் பணம் தேவை. வியாபாரம் பெருகினால்தான் பணம் சேரும். முந்தைய மன்னர்கள் இரும்புத்திரை போட்டு சீனாவை மூடி வைத்திருந்தார்கள். கதவைத் திறந்து, நாம் உலகைப் பார்க்க வேண்டும். உலகமும் சீனாவைப் பார்க்க வேண்டும். அதற்கு உன் உதவி தேவை’’ என்றார்.

சென்றதும் வென்றதும்! - 10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், சொல்லுங்கள்!’’ என்றார் செங் ஹே.

‘‘உடனடியாக சில கப்பல்களை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் சென்று சீனாவின் பெருமைகளைச் சொல்ல வேண்டும். புதிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வளர்க்க வேண்டும். உன்னால் முடியுமா?’’

‘‘முடியும்’’ என்றார் செங் ஹே. அப்போது, ‘கப்பல்’ என்பது கடலில் செல்லும் ஒரு வாகனம் என்று மட்டும்தான் தெரியும். அதனாலென்ன, கற்றுக்கொண்டால் போச்சு எனக் களத்தில் குதித்தார் செங் ஹே. தந்தையை இழந்து, கைதியாக்கப்பட்டு, அரண்மனையில் பணியாளனாக ஓடித் திரிந்த ஓர் இளைஞனுக்குக் கிடைத்த வாய்ப்பு இது.

கப்பல் கட்டுவதில் தேர்ச்சிமிக்க பணியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் தேடிப்பிடிக்கத் தொடங்கினார். பத்து, நூறு, ஆயிரம் என ஆட்கள் சேர்ந்துவிட்டனர். இருந்தும் செங் ஹேவுக்குத் திருப்தி இல்லை. மேலும் மேலும் ஆட்களைத் தேடிக்கொண்டே இருக்க, ‘‘செங் ஹே, நீ எவ்வளவு கப்பல்களை உருவாக்கப்போகிறாய்?”என்று அரண்மனை அதிகாரிகள் சந்தேகத்துடன் கேட்டார்கள். 

சென்றதும் வென்றதும்! - 10

‘‘நீங்களே சொல்லுங்களேன். உலகம் முழுக்க சீன வணிகர்கள் சுற்றிவர எவ்வளவு கப்பல்கள் தேவைப்படும்?’’

‘‘சில நூறு கப்பல்கள்.’’

“இல்லை, ஆயிரக்கணக்கான கப்பல்கள் வேண்டும். மன்னராலும் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்து முடிப்பதுதானே எனக்குப் பெருமை? நூறு கப்பல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்தால், ஆயிரம் கொண்டுவந்து நிறுத்த வேண்டாமா?’’ என்றார் செங் ஹே.

ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கடுமையாகப் பணியாற்றி, கப்பல்களை உருவாக்கினார்கள். ஒவ்வொன்றையும் மேற்பார்வையிட்ட செங் ஹே, ‘இந்தக் கப்பலில் நான் சென்றால் எப்படி இருக்கும், பல தேசங்களைக் கண்டறிந்து என் மன்னருக்கும் என் நாட்டுக்கும் பெருமை சேர்க்கலாமே’ என நினைத்தார்.

மொத்தம் 3,500 கப்பல்களை செங் ஹே உருவாக்கி முடித்தபோது, சீனாவே ஆச்சர்யப்பட்டது. ஒன்பது கப்பல்களை தனக்கே தனக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கச் சொன்னார் செங் ஹே. ஒவ்வொன்றும் 400 அடி நீளம். பிற்காலத்தில் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் பயன்படுத்திய கப்பலின் நீளமே 85 அடிகள்தான்.

செங் ஹே உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினார். முதல் பயணம் 1405-ல் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் நீடித்தது. எதையுமே பிரமாண்டமாக யோசிக்கத் தெரிந்தவர் அல்லவா? 62 கப்பல்கள் செங் ஹேவுடன் பயணம்செய்தன. பின்னால் 200 கப்பல்கள் அணிவகுத்து வந்தன.  பாதுகாப்புக்கு 28,000 ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருந்தனர்.

முதல் பயணமே இந்தியாவுக்குத்தான். தெற்கு சீனக் கடலில் இருந்து கிளம்பி, இந்தியப் பெருங்கடல் வழியே காலிகட் அடைந்தார். ‘இனி நிலமே வேண்டாம், கடலில் தூங்கி, ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும் ஒரு புதிய பிரதேசத்தைக் காண வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டார்.

சீனா திரும்பும் வழியில், சுமத்திரா தீவில் ஒரு பெரிய கொள்ளைக்கூட்டம் தாக்கியது. செங் ஹேயின் வீரர்கள் விடுவார்களா,5,000 கொள்ளையர்களைக் கொன்று,  தலைவனைச் சிறைப்பிடித்தார்கள்.

அரண்மனை திரும்பியவர்களிடம்,  ‘எவ்வளவு பணம் கிடைத்தது, என்னென்ன பிரதேசங்களைக் கைப்பற்றினீர்கள்?’ எனப் பலரும் ஆவலுடன் கேட்டார்கள்.

‘‘நான் போனது அதற்காக இல்லை நண்பர்களே’’. இதோ, நிறையப் பரிசுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன” என்றார்.
‘3,500 கப்பல்களை உருவாக்கி, 28,000 வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது, சில பரிசுப் பொருட்களை மட்டும் கொண்டுவருவதற்கா? சரியான ஏமாளி’ என்று அவர்கள் நினைத்தார்கள்.

சென்றதும் வென்றதும்! - 10

‘‘நான் சென்றது  மன்னரின் மகிழ்ச்சிக்காக. வியாபாரத்துக் காகத் தொடர்ந்து பல நாடுகளுக்குச் செல்வேன். ஆனால், எதையும் ஆக்கிரமிக்கப் போவது இல்லை’’ என்று உறுதியாகச் சொன்னார் செங் ஹே.

பெர்ஷியன் வளைகுடா,  கிழக்கு ஆப்பிரிக்கா என மேலும் ஐந்து பயணங்களை மேற்கொண்ட செங் ஹே,  ஒவ்வொரு பகுதியும் எந்தெந்த வகையில் சீனாவிடம் இருந்து வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தார். சில அழகிய பொருட்களை மட்டும் கொண்டுவருவார்.

‘‘என் அருமை சீனர்களே, ஆப்பிரிக்காவில் இருந்து நான் கொண்டுவந்துள்ள அதிசயத்தைப் பாருங்கள்’’ என்று கப்பலில் இருந்து பெரிய பெட்டியை இறக்கி, மூடியுள்ள துணியைச் சட்டென விலக்குவார் செங் ஹே.

மக்கள் வாய் பிளப்பார்கள். ‘ஐயோ, இதென்ன பூதமா? இவ்வளவு பெரிய கால்களா? அந்த நீளமான கழுத்து ஒடிந்து விழுந்துவிடாதா? இது நம்மைக்  கடித்தால், நம் கழுத்தும் இப்படி நீண்டுவிடுமா?’ என அலறுவார்கள்.

‘‘பயப்படாதீர்கள், இது சாதுவான பிராணி. இதன் பெயர் ஒட்டகச்சிவிங்கி’’ என்பார் செங் ஹே.

இன்றும்கூட பலர் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். ‘புதிய இடங்கள் பார்த்தார். விதவிதமான விலங்குகளைக் கொண்டுவந்தார். எல்லாம் சரி, செங் ஹேவால் சீனாவுக்கு என்ன பலன்? செங் ஹே நினைத்திருந்தால், இந்தியப் பெருங்கடலை ஆண்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?’

ஏனென்றால், செங் ஹே என்ன செய்ய விரும்பினாரோ... அதை மட்டுமே செய்தார். கடலில்தான் வாழவேண்டும் என விரும்பினார், அதுவே நடந்தது. அவர் இறந்ததும் கடலில்தான்.

(பயணம் தொடரும்)

சென்றதும் வென்றதும்! - 10
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism