Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 11

சென்றதும் வென்றதும்! - 11
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 11

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 11

சார்லஸ் டார்வின்

ன் முன்னால் வந்து அமர்ந்த அந்த    22 வயது இளைஞனின் மூக்கை உற்றுப்பார்த்தார், கேப்டன் ஃபிட்ஸ்ராய். ‘‘நீ யார்... என்ன படித்திருக்கிறாய்?’’

‘‘என் பெயர் சார்லஸ் டார்வின். என் அப்பா ராபர்ட் டார்வின். அவர் ஒரு மருத்துவர். என் தாத்தா எராஸ்மஸ், ஒரு தாவரவியல் நிபுணர். நான் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் மருத்துவம் படித்தேன்.’’

‘‘அதென்ன சிறிது காலம்?’’

‘‘எனக்கு அதில் ஆர்வம் இல்லை. என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. எனக்கு ரத்தம் என்றால் கொஞ்சம் பயம்.’’

ஃபிட்ஸ்ராய்க்கு சிரிப்பு வந்தது. ‘‘ரத்தத்தைக் கண்டு பயப்படும் டாக்டரா நீ? சரி, அடுத்து என்ன செய்யப்போகிறாய்?’’

‘‘நான் ஒரு பாதிரியாக வேண்டும் என அப்பா விரும்புகிறார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு இந்த உலகைப் பார்க்க வேண்டும். உலகில் உள்ள விலங்குகள்,  பூச்சிகள், பறவைகள், மீன்களை ஆராய வேண்டும். இயற்கையின் மாணவனாக இருந்துவிடவே விரும்புகிறேன். உங்களுடன்  கப்பலில் வந்தால், பலவிதமான தீவுகளைப் பார்க்கலாம். வித்தியாசமான உயிரினங்களைக் காணலாம். நிறையக் கற்றுக்கொள்ளலாம்.’’

ஃபிட்ஸ்ராய் அப்போதுதான் கவனித்தார். அந்த இளைஞரின் மூக்கு மட்டுமல்ல, அவன் பேச்சும் சரியில்லை. வார்த்தைகள் திக்குகின்றன. சில வார்த்தைகள் சரியாக வரவில்லை. குறிப்பாக, டபிள்யூ என்னும் எழுத்தைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. கண்களில் ஆர்வமும் துடிப்பும் இருந்தாலும் உடல் வலுவாக இல்லை.

சார்லஸ் டார்வின் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். ‘‘மருத்துவப் படிப்பிலும் பழசாகிப்போன பாடங்களையே நடத்தினார்கள். அதையெல்லாம் படித்தால், ஒரு பயனும் இருக்காது. அற்புதமான, விசித்திரமான பல உயிரினங்கள் உலகில் இருக்கின்றன. அதனால், நேரடியாக உலகைப் படிக்க முடிவெடுத்துவிட்டேன்.’’

‘‘அதெல்லாம் சரிதான். ஆனால், உன்னை எதற்காக நான் பீகிள் பயணத்தில் அழைத்துச்செல்ல வேண்டும்? உன் உடல் வலுவாக இல்லை. உன் பேச்சு சரியில்லை. படிப்பும் அரைகுறைதான்.’’

சென்றதும் வென்றதும்! - 11

டார்வின் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. ‘‘என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான பயணம். தயவுசெய்து மறுத்துவிடாதீர்கள். கடல் கடந்து தீவுகளுக்குச் செல்வதே என் கனவு. அதற்காகவே கஷ்டப்பட்டு ஸ்பானிஷ் மொழியும் கற்றுவைத்திருக்கிறேன்.’’

உண்மையில், டார்வினைப் பார்த்த அடுத்த விநாடியே கேப்டன் முடிவு செய்துவிட்டார். இவன் நமக்குச் சரிவர மாட்டான். இவனால் எதையும் ஒழுங்காகச் செய்துமுடிக்க முடியாது. இருந்தாலும், ஒரு பயணத்துக்காகக் கஷ்டப்பட்டு ஸ்பானிஷ் மொழியைக் கற்றிருக்கிறான் என்றால், இந்த அளவுக்குப் பயணத்தை நேசிக்கும் ஒருவனை நிராகரிப்பது சரியில்லை அல்லவா?

1831 டிசம்பர் 26 அன்று இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து கிளம்ப வேண்டும் என்பது திட்டம். ஹெச்.எம்.எஸ் பீகிள் தயாராக இருந்தது. முந்தைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால், யாருமே வரவில்லை. ஆடல், பாடல், கொண்டாட்டம் என மயங்கிவிட்டார்கள். அதனால், மறுநாளுக்குப் பயணத்தை ஒத்திவைத்தார் கேப்டன். 27-ம் தேதி எல்லோரும் சரியாக வந்துவிட்டார்கள். மொத்தம் 73 பேர். நல்ல காற்று, நல்ல வெளிச்சம். அற்புதமான வானிலை. பீகிள் கப்பல் உற்சாகமாக விடைபெற்றுக்கொண்டது.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது. புதிய தீவுகளை, நிலப் பகுதிகளை, உயிரினங்களை, செடிகொடிகளைச் சேகரித்து ஆய்வுசெய்வது. இயற்கை விஞ்ஞானிகள், கனிம வள நிபுணர்கள், உயிரியல் ஆய்வாளர்கள் போன்ற பலரும் அந்தப் பயணத்தில் பங்கேற்றிருந்தனர். இவர்களோடுதான் டார்வினும் இருந்தார்.

கப்பலைச் சுற்றிவந்த கேப்டன் அதிர்ந்துபோனார். ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தார் டார்வின். அருகில் சென்று பார்த்தார். டார்வினின் கண்கள் பாதி மூடியிருந்தன. உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கப்பல் கிளம்பி சிறிது நேரத்திலேயே இப்படித் துவண்டுவிட்டால், இவன் எப்படி முழுப் பயணத்தையும் தாக்குப்பிடிக்கப்போகிறான்?

ஜனவரி 4 அன்று, ‘மதேரா’ என்னும் தீவுக்கு வந்து சேர்ந்தது பீகிள் கப்பல். கேப்டன், இன்னொருமுறை டார்வின் தங்கியிருந்த கேபினுக்குச் சென்று பார்த்தார். ம்ஹூம், பேச்சு மூச்சே இல்லை. ஆய்வாவது, மண்ணாங்கட்டியாவது? எழுந்து நிற்கக்கூட வலுவில்லை டார்வினிடம்.

இரண்டு தினங்கள் கழித்து, சாண்டர் குரூஸ் பகுதியில் உள்ள டெனேரைஃப் என்னும் தீவை நெருங்கினர். டார்வின், கேபினில் இருந்து வெளியில் வந்தார். டெனேரைஃப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். அவர் கண்களில் உற்சாகம் நிரம்பியிருந்தது. அவரைப் பார்த்த கேப்டன் ஃபிட்ஸ்ராய்க்கும் சற்று உற்சாகம் பிறந்திருந்தது.

‘‘டார்வின், நீ முழுப் பயணத்தையும் தூங்கியே கழித்துவிடுவாயோ என்று பயந்துவிட்டேன்’’ என்றார்.

டார்வின் சிரித்தார். ‘‘அதெப்படி? டெனேரைஃப் போகவேண்டும் என்பதற்காகத்தானே இந்தக் கப்பலிலேயே ஏறினேன்.’’

‘‘உன்னால் உண்மையிலேயே ஆய்வுகள் செய்யமுடியுமா?’’

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள். என்னிடம் எத்தனை விதமான பறவைகளின் இறகுகள் இருக்கின்றன தெரியுமா? எவ்வளவு பூச்சிகளைச்  சேமித்து வைத்திருக்கிறேன்.விதவிதமான கற்கள், வண்ண மண் துகள்கள், சிப்பிகள், வித்தியாசமான மர வேர்கள், எலும்புகள் இருக்கின்றன. சில பறவைகளின் உடல்களை வைக்கோல், பஞ்சுவைத்துத் தைத்து, பாதுகாத்துவருகிறேன். பலவிதமான வேதியியல் பரிசோதனைகள் செய்திருக்கிறேன். விதவிதமான வாயுக்கள் உருவாவதைப் பார்த்திருக்கிறேன்.’’

கேப்டன், நம்பிக்கையுடன் டெனேரைஃப் நோக்கி கப்பலைச் செலுத்தியபோது, சில நபர்கள் சிறிய படகுகளில் நெருங்கினார்கள். ‘‘நீங்கள்தான் பீகிள் கப்பலின் கேப்டனா? உங்களுக்கு ஓர் அவசர செய்தி. நீங்கள் டெனேரைஃப் தீவுக்குச் செல்ல முடியாது. காலரா நோய் பரவிக்கொண்டிருப்பதால், பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்.’’

கேப்டன் மட்டுமல்ல, டார்வினின் உற்சாகமும் சட்டென்று வடிந்துபோனது. பீகிள் கப்பல், கேப் வெர்டே தீவை நோக்கி நகரத் தொடங்கியது. டார்வின் தன் கேபினுக்குச் சென்று சுருண்டு படுத்துவிட்டார்.

சாண்டியாகோ என்னும் தீவை வந்தடைந்ததும், பீகிள் கப்பலில் இருந்த எல்லோரும் இறங்கினார்கள். டார்வின் வேண்டா வெறுப்பாகத் தரையில் கால் பதித்தார். கனவு கண்ட இடத்துக்குப் போகமுடியாமல், கண்ட இடங்களில் இறங்கி என்ன செய்வது?

கரையைவிட்டு நகர்ந்து நடக்க ஆரம்பித்தார் டார்வின். பச்சைப் பசேலென்று மரங்களும் செடிகொடிகளும் பரவிக்கிடந்தன. ஆங்காங்கே சின்னச்சின்ன குட்டைகள், குளங்கள். டார்வின் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி நடந்தார். குளங்களில் சின்னச்சின்ன மீன்கள் தென்பட்டன. கவனமாகப் பார்த்தார். அந்த மீன்களின் அமைப்பு வித்தியாசமாக இருந்தது. அப்படியே உட்கார்ந்துவிட்டார். நோட்டுப் புத்தகத்தை விரித்து வரைய ஆரம்பித்தார். மீன்களின் கண்கள், உடல் அமைப்பு, அசையும் செவுல்கள் அனைத்தையும் குறித்துக்கொண்டார். அப்போதுதான் கவனித்தார், இதென்ன நீல நிற மீன் காணாமல் போய், சிவப்பு நிற மீன் தோன்றிவிட்டது. நீல மீன் எங்கே?

உன்னிப்பாகக் கவனித்தார். சட்டென்று மின்னல் வெட்டியது. நான் பார்ப்பது ஒரே மீன்தான். நீல நிற மீன்தான், தன்னை சிவப்பு நிற மீனாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஏன் அப்படிச் செய்கிறது? இந்தத் திறன் மீனுக்கு எப்படி வந்தது?

சென்றதும் வென்றதும்! - 11

பின்னால் வந்த கேப்டன், ‘ஒரு மீனைப் பார்த்து பக்கம் பக்கமாக என்ன எழுதிக்கொண்டிருக்கிறான் இவன்?’ என நினைத்தார்.

சிறிது நேரத்தில், டார்வின் எழுதுவதை நிறுத்திவிட்டு, தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார். சரி, இந்தப் பயணம் தோல்வி அடைந்துவிட்டது என்னும் முடிவுக்கு வந்தார் கேப்டன். வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த முக்கியப் பயணமாக அது மாறப்போவது அவருக்கு அப்போது தெரியாது.

(பயணம் தொடரும்)