Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 12

சென்றதும் வென்றதும்! - 12
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 12

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 12

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்! - 12
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 12
சென்றதும் வென்றதும்! - 12

சார்லஸ் டார்வின்

பீகிள் கப்பல் எங்கே கரை ஒதுங்கினாலும், முதல் ஆளாகப் பாய்ந்து இறங்கி, அந்த இடத்தைச் சுற்ற ஆரம்பித்துவிடுவார் சார்லஸ் டார்வின். மீன் எப்படி நீந்துகிறது, கொக்கு எப்படிப் பறக்கிறது, பூச்சிகளின் கண்கள் எப்படி இருக்கும் என ஆராய ஆரம்பித்தால், அவருக்கு நேரம் போவதே தெரியாது. சாப்பாடே தேவையில்லை. ஒரு வெட்டுக்கிளியின் உணவு எப்படிச் செரிமானம் ஆகிறது? காய்ந்த குச்சி போல இருக்கும் இந்தப் பூச்சியின் உடலுக்குள் என்னென்ன இருக்கும்? என்ற சந்தேகங்கள் தோன்றும்போது, கையோடு வெட்டுக்கிளியையும் பூச்சியையும் பிடித்து, கத்தியால் கீறி நுணுக்கமாக ஆய்வுசெய்து, குறிப்புகளை எழுதத் தொடங்கிவிடுவார்.

தாவரங்கள், சிப்பிகள், மரப்பட்டைகள், கொட்டைகள், செடிகொடிகள் எனப் பார்க்கும் எல்லாவற்றில் இருந்தும் ஒவ்வொன்றைக் கப்பலில் போட்டுக்கொண்டு போய்விட விரும்பினார். பீகிள் கப்பலைச் சேர்ந்த பலர், கரை ஒதுங்கியவுடன் மனிதர்களிடம்தான் சென்று பேசுவார்கள். ஆனால் டார்வினோ, மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிர்களிடமும் பேசுவார். அபூர்வமாகத்தான் மனிதர்களை அவர் பார்ப்பார்.

பிரேசிலிலுக்குச் சென்றபோதும் அதுவே நடந்தது. காட்டில் ஒரு கம்பளிப்பூச்சியைக்கூட விடாமல் பார்த்து, பிடித்து, ஆராய்ந்து, சிலவற்றைப் பையில் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாகச் சுற்றிக்கொண்டிருந்தார். தற்செயலாக அவர் பார்வை கறுப்பு நிறத்தில் இருந்த மனிதர்கள் மீது விழுந்தது. மரம் வெட்டிக்கொண்டும், மூட்டை சுமந்துகொண்டும், சில நேரம், மனிதர்களைச் சுமந்துகொண்டும் சென்றுகொண்டிருந்தனர். டார்வின், சற்று நேரம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு கப்பலுக்குத் திரும்பிவிட்டார். அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார், கேப்டன் ஃபிட்ஸ்ராய்.

‘‘என்ன டார்வின், அதற்குள் பிரேசிலைப் பார்த்துவிட்டாயா? பெரிய காடாக இருக்கிறதே, நீ சுற்றிவருவதற்கு நேரமாகும் என நினைத்தேன்” என்றார்.

‘‘நானும் அப்படித்தான் நினைத்தேன். வழியில் நான் கண்ட சில கறுப்பின மனிதர்கள் என்னைச் சங்கடப்படுத்திவிட்டார்கள்’’ என்றார் டார்வின்.

‘‘அவர்கள் எப்போதும் இப்படித்தான் டார்வின். நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம்.’’

டார்வினின் முகம் மாறியது. ‘‘நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. விலங்குகளைப் போல இவர்களை சில வெள்ளையர்கள் வேலை வாங்குகிறார்கள். சக மனிதர்களை இப்படி கஷ்டப்படுத்துபவர்கள்தான் நாகரிகம் தெரியாதவர்கள்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்றதும் வென்றதும்! - 12

கேப்டன் ஃபிட்ஸ்ராயால் இதை ஏற்கமுடியவில்லை. ‘‘பல மனிதர்களால் அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும் டார்வின். அவர்களுடைய திறமை அவ்வளவுதான். வெகு சிலரால் மட்டுமே எஜமானர்களாக மாறமுடியும். நீ பார்த்த கறுப்பின மக்கள் அடிமைகளாக இருப்பதற்காகவே பிறந்தவர்கள்.’’

கேப்டன், வயதில் மூத்தவர், அவர் மனம் வைத்ததால்தான் இந்தப் பயணமே சாத்தியமானது. இருந்தாலும் அவர் கூறியதில் டார்வின் உடன்படவில்லை.

‘‘எல்லா உயிர்களும் ஒன்று போலத்தான் பிறக்கின்றன கேப்டன். மனிதர்களில் மேலானவர்கள், கீழானவர்கள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லை. வெள்ளையாக இருப்பவர்கள் எஜமானர்களாக இருக்க வேண்டும், கறுப்பு நிறம் என்றால் அடிமை வேலைதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வது, அறிவியல் உண்மைக்கு எதிரானது.’’

இதைக் கேட்டதும் கேப்டனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ‘‘நீ மனிதர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிடு. விலங்குகளும் பூச்சிகளும்தான் உனக்கு லாயக்கு. இனி என்னிடம் வராதே.’’ என்றதும், டார்வினும் எழுந்து சென்றுவிட்டார். பிறகு, எல்லோரும் வந்து சமாதானம் செய்ததும்தான் கோபப்பட்டது தவறு என, டார்வினிடம் மன்னிப்பு கேட்டார் கேப்டன்.

பயணம் தொடர்ந்தது. அர்ஜென்டினாவில் புன்ட்டா அல்ட்டா என்னும் இடத்தில், நீண்ட காலத்துக்கு முன் அழிந்துபோன ஒரு பாலூட்டியின் மிகப்பெரிய எலும்புக்கூட்டைப் பார்த்தார். வேறு சில அழிந்த விலங்குகளின் எலும்புத் துண்டுகளும் பற்களும்கூட கிடைத்தன. இந்த மிருகங்கள் ஏன் அழிந்துபோயின? அதிக குளிர் அல்லது அதிக வெப்பம் காரணமாக அவை அழிந்திருக்குமா? இந்த எலும்புகளை வைத்துக்கொண்டு அந்தப் பாலூட்டிகள் எப்படி இருந்திருக்கும் எனத் தெரிந்தகொள்ள முடியுமா? இப்படி எத்தனை விதமான விலங்குகள் இதுவரை உலகில் இருந்து அழிந்துபோயிருக்கும்? மற்ற விலங்குகள் எப்படி அழிவில் இருந்து தப்பித்தன? இப்படிப் பல கேள்விகள் டார்வினுக்கு எழுந்தன.

டார்வினைப் பொறுத்தவரை, ஒரு மீனும் ஒரு பூச்சியும் ஒரு செடியும் ஒரு மனிதனும் ஒன்றுதான். ஒரு சின்னப் பறவையிடம் இருந்து பல ஆச்சர்யமூட்டும் உண்மைகளைக் கற்க முடியும். பறவைகளிடமே இவ்வளவு கற்க முடியும் என்றால், சிந்திக்கத் தெரிந்த மனிதரிடம் இருந்து எவ்வளவோ அற்புதங்களைக் கற்க முடியும்! அதைச் செய்யாமல், அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது பெரிய தவறு என்பார்.

காட்டு விலங்குகளுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லை. அவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. படித்தவருக்கும் படிக்காதவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு பழங்குடி மனிதரைப் பள்ளியில் படிக்கவைத்தால், அவரால் நன்றாகக் கல்வி கற்க முடியும் என்று டார்வின் நம்பினார்.

சிலி, கலபாகஸ் தீவுகள், கேப்டவுன், நியூசிலாந்து, சிட்னி  பகுதிகளில் டார்வின் கண்ட உயிரினங்கள், அவருடைய நம்பிக்கையை உறுதிசெய்தன. மனிதருக்கும் விலங்குக்கும் இடையில் எந்த அடிப்படை வேறுபாடுகளும் இல்லை என்பது அவருக்குக் கண்கூடாகத் தெரிந்தது. உயிர்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் காட்சி அளிக்கின்றன. பறவைகள், மீன்கள், கொறிக்கும் விலங்குகள், பாலூட்டிகள், தாவரம் எனப் பல பிரிவுகளில் பிரிந்து கிடக்கின்றன. ஆனாலும் அனைத்தும் ஒரே குடும்பம்.

சென்றதும் வென்றதும்! - 12

நிறம், மொழி, மதம், நாடு என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய மூதாதையர் ஒருவர்தான். அவர்களில் சிலரை அடிமைகள் என்றும் எஜமானர்கள் என்றும் பிரித்துப் பார்ப்பது தவறு. ஆரம்பத்தில் எல்லா உயிர்களும் எளிமையாகவே இருந்தன. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவை மாற்றம் அடைந்தன என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தார் டார்வின். இந்த மாற்றங்கள் ஏற்பட, பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின. பாக்டீரியா தொடங்கி மனிதன் வரை அனைத்து உயிர்களும் இப்படிப் படிப்படியாகத்தான் வளர்ச்சி அடைந்தன. இதைப் பரிணாம வளர்ச்சி என அழைத்தார் டார்வின்.

அதென்ன பரிணாம வளர்ச்சி? சூழ்நிலைக்குத் தகுந்தபடி தம்மை மாற்றிக்கொள்ளும் உயிரினங்கள் தொடர்ச்சியாக வாழ்கின்றன. இந்த மாற்றங்கள் அடுத்தடுத்த சந்ததிகளாக நடக்கும்போது, அவை படிப்படியாக வளர்ச்சி அடைகின்றன. இதெல்லாம் நடப்பதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள்கூட ஆகும். தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவை டைனோசர்  போல அழிந்துவிடுகின்றன. ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலில் இன்னொரு முக்கிய விஷயத்தை டார்வின் கண்டறிந்தார். மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடம் இருந்தே தோன்றினர் என்றார் அவர்.

இயற்கையின் ரகசியத்தைக் கண்டுபிடித்த தலைசிறந்த மனிதராக சார்லஸ் டார்வின் கொண்டாடப்படுகிறார். அதற்கு, பீகிள் கப்பலுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

(பயணம் தொடரும்)

சென்றதும் வென்றதும்! - 12

• பீகிள் பயணம் முடிந்து 20 ஆண்டுகள் கழித்தே, பரிணாம வளர்ச்சி பற்றிய தன் ஆய்வை டார்வின் வெளியிட்டார். அதைப் படித்தால் என்ன சொல்வார்களோ என்ற பயமே காரணம்.

• டார்வின் நினைத்ததுபோலவே அது எப்படி குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவான் எனப் பலர் சீறினார்கள். குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை, இருவருடைய மூதாதையரும் ஒன்று என்றுதான் சொல்கிறேன் என விளக்கினார் டார்வின்.

• டார்வினின் கண்டுபிடிப்புகள் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயின. நீண்ட காலத்துக்குப் பிறகு, மேலும் பல ஆய்வாளர்கள் டார்வின் சொன்னதை நிரூபித்த பிறகே, உலகம் அவரை ஏற்றுக்கொண்டது.

• 2000-ம் ஆண்டு தொடங்கி, பிரிட்டன் 10 பவுண்ட் தாளில் டார்வினின் படமும் பீகிள் கப்பலின் படமும் இடம்பெற்றுவருகிறது.

• நூற்றுக்கும் அதிகமான உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் டார்வினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism