
யோகா எங்க செல்ல ஃப்ரெண்டு!

அண்ணன் சல்மான்கான் படிப்பது ஒன்பதாம் வகுப்பு. தம்பி அசாருதீன் படிப்பது ஆறாம் வகுப்பு.இருவரும் மதுரையில் இருக்கும் விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். இரண்டு பேருமே யோகா சாம்பியன்கள். மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சல்மான்கான் முதல் இடம். 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், அசாருதீன் முதல் இடம். ஒரே வீட்டில் இரண்டு யோகா சாம்பியன்கள்.
அண்ணனும் தம்பியும் சில ஆண்டுகளுக்கு முன்பு சம்மர் கேம்ப்பில்யோகா கற்றுக்கொண்டனர். அப்போதிருந்து யோகாதான் இவர்களுக்கு செல்லமான நண்பன்.

‘‘அப்பா கொடுத்த ஊக்கம்தான், எங்கள் சாதனைகளுக்குக் காரணம்’’ என்று உற்சாகமாகச் சொன்னார் சல்மான். ‘‘தரையில் ஆசனங்கள் செய்வது மட்டும் அல்ல. ஒற்றைக் கயிற்றில் செய்யப்படும் ரோப் யோகா, எண்ணெய் தடவிய வழுக்குமரத்தில் செய்யும் யோகா போன்றவை எங்கள் ஸ்பெஷல்’’ என்கிறார் அசாருதீன்.
சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் ட்ராஃபியையும் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள். தேசிய அளவில் நடந்த போட்டியிலும் தங்கப்பதக்கம் வாங்கி இருக்கிறார்கள்.

‘‘சமீபத்தில், புதுச்சேரியில் நடந்த சர்வதேச யோகாசனப் போட்டியில், புதுச்சேரி மாநில முதல்வர் முன் செய்துகாண்பித்துப் பாராட்டுப் பெற்றது மறக்க முடியாத தருணம். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்குபெறத் தகுதிபெற்றபோதும், வசதியின்மையால் பங்குபெற முடியாமல் போய்விடுகிறது’’ என்று சோகமாகச் சொன்னார் சல்மான்.
இந்த யோகா பாய்ஸின் அப்பா ஜமீஸ்கான். இவர், இருசக்கர வாகனங்களுக்கான சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் இவர்களின் அக்காவுக்கும் யோகாவில்தான் ஆர்வம்.

‘‘நாங்கள் சிலம்பத்திலும் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கோம். வாள் வீச்சு, சுருள்கத்தி ஆகிய கலைகளைக் கற்றுவருகிறோம். அடுத்து, களரி கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சிலம்பத்தில் ஜெயித்த பதக்கங்களையும் ஆர்வமாகக் காட்டினார் அசாருதீன்.
2017-ம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் சர்வதேச யோகாசனப் போட்டி நடைபெற உள்ளது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற இப்போது தீவிரமாகப் பயிற்சி எடுக்கிறார்கள்.
இந்த யோகா சகோதரர்கள், பல பள்ளிகள், கல்லூரிகளில் இலவசமாக யோகா வகுப்பு எடுக்கிறார்கள். ‘‘நாம் கற்ற கலையை, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் போதுதான் அது முழுமைபெறுகிறது, மனசுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது” என்றார்கள்.
- மு.ராகினி ஆத்ம வெண்டி, படங்கள்: சு.ஷரண் சந்தர்