Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 13

சென்றதும் வென்றதும்! - 13
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 13

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 13

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்! - 13
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 13
சென்றதும் வென்றதும்! - 13

ரலாறு இதுவரை கண்டுள்ள பயணிகளில் அதிகப் பிரபலமானவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். உலகம் முழுவதிலும் உள்ள பள்ளிப் பாடப் புத்தகங்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 1492-ம் ஆண்டும் புகழ்பெற்றுவிட்டது.

உண்மையில், அமெரிக்கக் கண்டத்தில் முதன்முதலாக கால் பதித்தவர், கொலம்பஸ் அல்ல. அவர், அங்கே போவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே, ‘வைக்கிங்குகள்’ என்று அழைக்கப்படும் வட ஐரோப்பியர்கள், வட அட்லான்ட்டிக் பகுதியின் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து நாடுகளைக் கடந்து, அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதியான கனடாவை அடைந்தனர்.

கொலம்பஸ் பற்றிய தொடக்க கால வரலாற்றில் சில, ஆதாரம் இல்லாத தகவல்களே. அவற்றை ஒதுக்கிவிட்டு, உறுதியாகத் தெரியவரும் விஷயங்களைப் பார்ப்போம். கொலம்பஸ் பிறந்தது  1451-ம் ஆண்டு. தேதி, மாதம் உறுதியாகத் தெரியவில்லை. ஜெனோவா எனும் இத்தாலிய நகரில் பிறந்தார்.

கொலம்பஸின் அப்பா, அம்மா நெசவுத் தொழில் பின்னணியைச் சேர்ந்தவர்கள். கம்பளி ஆடைகளை நெய்து விற்பனை செய்துவந்தார்கள். கொலம்பஸ், அவருடைய இரு தம்பிகள் மற்றும்  குடும்பத்தில் உள்ள எல்லோரும் கம்பளி ஆடை உற்பத்தியில் உதவியாக இருந்தார்கள். நீண்ட காலத்துக்கு கொலம்பஸுக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது.

இத்தாலியின் முக்கியமான துறைமுக நகரமாக ஜெனோவா இருந்தது. மீன் பிடிக்கும் கப்பல்கள், சண்டை போடுவதற்காக வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்கள், வணிகர்கள் சென்று வருவதற்கான வர்த்தகக் கப்பல்கள் என, சின்னதும் பெரியதுமாகப் பல வகைக் கப்பல்கள் துறைமுகத்தில் நிரம்பி இருக்கும். எனவே, கடல் பயணங்களை மையப்படுத்தி பல தொழில்கள் உருவாகின. அவற்றில் ஒன்று, வரைபடம் தயாரிக்கும் பணி. கார்ட்டோகிராஃபி எனப்படும் இந்தத் துறையில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு புதிய இடம் கண்டுபிடிக்கப்படும்போதும், அதைச் சரியான இடத்தில் குறிப்பிட்டு, புதிய வரைபடத்தைத் தயாரிப்பார்கள்.

இவை எல்லாம் இளம் வயது கொலம்பஸை மிகவும் கவர்ந்தன. கம்பளியை விற்பதற்காக அப்பா கப்பலுக்குச் செல்லும்போது, கூடவே ஏறிக்கொள்வார். அப்பா கம்பளிக் கணக்குப் பார்க்க, கப்பலையும் கடலையும் கவனிப்பார் கொலம்பஸ்.

எப்படி லாகவமாக கப்பலைத் திருப்புகிறார்கள்... எப்படி சூறாவளிகளை எதிர்கொள்கிறார்கள்? என அறிந்துகொள்வார்.

15 முதல் 23 வயது வரை கொலம்பஸ் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தார்.  ‘நமக்கு கம்பளி எல்லாம் சரிப்பட்டு வராது’ என்று அப்போதே முடிவு செய்தார். மத்தியத்தரைக்கடல் பகுதியின் கிழக்கே அமைந்துள்ள சியோஸ் என்னும் தீவுக்கு, ஒருமுறை சென்றார் கொலம்பஸ். ஜெனோவாவின் வர்த்தகக் காலனியாக இந்தத் தீவு இருந்தது.

சென்றதும் வென்றதும்! - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

13 ஆகஸ்ட் 1476 அன்று, பெச்சல்லா எனும் கப்பலில் செல்லும் வாய்ப்பு கொலம்பஸுக்குக் கிடைத்தது. அப்போது, அவருக்கு வயது 25. உற்சாகமாகக் கப்பலுக்குள் சுற்றி வந்தார். திடீரெனக் கப்பல் ஆட ஆரம்பித்தது. கப்பலில் இருந்தவர்கள் பதட்டத்துடன் ஓடினார்கள். எங்கே திரும்பினாலும் கூச்சல், குழப்பம்.

அந்தக் கப்பலை, கடல் கொள்ளையர்களின் கப்பல்கள்  சூழ்ந்து தாக்குவதைத் தெரிந்துகொண்டார் கொலம்பஸ். அப்போது, வணிகக் கப்பல்கள் பயந்து பயந்துதான் பல பகுதிகளைக் கடந்துசெல்ல வேண்டும். வசதி படைத்த பெரிய வணிகர்கள், சில போர்க் கப்பல்களையும் உடன் அழைத்துச் செல்வார்கள். வசதி குறைந்தவர்கள், ஆயுதம் தாங்கிய வீரர்கள் சிலரை அழைத்துச் செல்வார்கள்.

கொலம்பஸ் இருந்த கப்பல், கொள்ளையர்களின் தாக்குதலால்  தடுமாறிக்கொண்டிருந்தது. கொலம்பஸும் கொள்ளையர்களுடன் போரிடத் தயாரானார். இரவு நெருங்க நெருங்க, போரும் தீவிரம் அடைந்தது. கொலம்பஸ் உட்பட பலரும் காயம் அடைந்தனர். உயிர் பிழைத்தால் போதும் எனக் கடலுக்குள் பாய்ந்து நீந்தத் தொடங்கினர். கொலம்பஸும் கடலுக்குள் குதித்தார்.

கொலம்பஸுக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும். ஆனால், ‘இங்கிருந்து எவ்வளவு தூரம் நீந்திச் செல்ல முடியும்? கரை பக்கத்தில் இருக்கிறதா? காயம்பட்டு ரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது. கரை போய்ச் சேரும் வரை உயிர் பிழைத்திருப்பது சாத்தியமா?’

இதையெல்லாம் யோசிப்பதில் பலன் இல்லை என, மூச்சைப் பிடித்துக்கொண்டு நீந்தத் தொடங்கினார் கொலம்பஸ். சிறிது நேரத்தில், கப்பலின் ஓர் உடைந்த மரப் பகுதி கைகளுக்குத் தட்டுப்பட்டது. அதைக் கடவுளின் வரம் என்றே நினைத்துப் பாய்ந்து, பற்றிக்கொண்டார்.

சென்றதும் வென்றதும்! - 13

கொலம்பஸின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை இறை பக்திகொண்ட கத்தோலிக்கர்களாக வளர்த்திருந்தனர். கடவுள்தான் தனக்கு இந்தக் கட்டையை அனுப்பியிருக்க வேண்டும் என நினைத்து மகிழ்ந்தார் கொலம்பஸ்.

கிட்டத்தட்ட ஆறு மைல் தொலைவுக்கு நீந்தி, போர்ச்சுக்கல்லின் கரையோரம் ஒதுங்கியபோதுதான் நிம்மதி பிறந்தது. அப்படியே கண்களை மூடிக்கொண்டார் கொலம்பஸ்.

‘கடவுளே உனக்கு நன்றி. நிச்சயம் எனக்காக நீ சில திட்டங்களை வைத்திருப்பாய். அதனால்தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறாய். சொல், நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?’ என மனதுக்குள் கேட்டுக்கொண்டார்.

கொஞ்சம் அல்ல, நிறையவே செய்ய வேண்டும் என பதில் அளித்தது வரலாறு.

(பயணம் தொடரும்...)