ஸ்பெஷல்
Published:Updated:

மை டியர் ஜீபா!

மை டியர் ஜீபா!

மை டியர் ஜீபா!

உலகில் முதல் முதலில் தோன்றிய மரம் எதுன்னு ஒரு கணக்கு போட்டு சொல்லு ஜீபா?

    -எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

##~##
நீசொன்னாலும் சொல்லாட்டியும் இந்த விஷயத்துல ஆராய்ச்சியாளர்களே தோராயமா ஒரு கணக்கு போட்டுதான் சொல்லி இருக்காங்க. நியூயார்க்கில் உள்ள கில்போவா (நிவீறீதீஷீணீ) என்ற இடத்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளப் பெருக்கில் வெளிப்பட்ட ஒரு மரம், எல்லோர் கவனத்தையும் கவர்ந்துச்சு. முப்பதடி உயரத்தில் ஒரு பனை மரம் மாதிரியான தோற்றத்தில் இருந்த அந்த மரம், 385 மில்லியன் வருடங்களுக்கு முந்தையதா இருக்கும்னு சொல்றாங்க. இந்த வகை மரம்தான் உலகில் தோன்றிய முதல் மரமா இருக்குமாம். அந்த மரத்தின் படத்தையும் இங்கே கொடுத்து இருக்கேன் பார்த்துக்க சௌமியா!

எங்க அப்பா செல்போனை எங்கேயோ வெச்சுட்டு தேடிட்டு இருந்தாரு... அதை நான் கண்டுபிடிச்சுக் கொடுத்தேன். அப்போ...செல்போனை கண்டுபிடிச்சது நான்தான்னு சொல்லிக்கலாமா ஜீபா? எப்பூடி!

-ஏ.மதிவாணன், திருப்பத்தூர்.

பலே! உனக்கு சரியான ஒரு ஆளை காட்றேன்... அங்கே சொல்லு எப்பூடின்னு!

ஹாய் ஜீபா... டி.வி.யை யார் கண்டுபிடிச்சா?

    -சு.கார்த்திக், இராக்கியாபாளையம்.

எனக்குத் தெரிஞ்சு டிவியைக் கண்டுபிடிச்சது, ஸ்காட்லாண்டில் பிறந்த 'ஜான் லோகி பெய்ர்ட். அதை இன்னும் மெருகேத்தி கொடுத்தவர்... ஜெர்மனியின் 'பவுல் நிப்கோவ்’ என்பவர். எதுக்கும் திருப்பத்தூர் மதிவாணனையும் ஒரு தடவை கேட்டுக்கோ... ஒருவேளை அதையும் அவர் கண்டுபிடிச்சு இருக்கப் போறாரு! எப்பூடி..!

ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு... அப்படியெனில் முதல் ஐந்து அறிவுகள் எது எதுன்னு சொல்லு ஜீபா?

    -இரா.அசோக்குமார், அரசம்பட்டி.

பார்க்கறது, கேட்கறது, சுவைக்கறது, நுகர்றது, தொடறது இதுதான் அந்த ஐந்து அறிவுகள். உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இருந்தாலும் எல்லாமே இந்த ஐந்தையும் சரியா உணர முடியாது. ஆனா, மனிதர்களால மட்டும்தான் இது எல்லாம் முடியும். உதாரணமா... நீ '7 ஆம் அறிவு’ சினிமாவுக்குப் போனா... சூர்யாவைப் பார்ப்பே, அவர் பேச்சைக் கேட்பே, இடைவேளையில 'பப்ஸ்’ வாசனையைப் பிடிச்சுக்கிட்டே போவே, அதை வாங்கிட்டு வந்து சீட்ல உட்கார்ந்து சுவைப்பே... அந்த நேரம் உன்னைத் தாண்டிட்டுப் போற ஒருத்தர், காலை மிதிச்சுட்டா 'ஆ! பார்த்து போங்க’ன்னு அலறுவே. இது எல்லாம் போக, சினிமா முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், நண்பன்கிட்ட உன்னோட ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, சினிமாவைப் பத்தி அலசுவே. ஆனா, டிக்கெட் வாங்காம தியேட்டருக்குள்ளே இருக்கிற எலி, மூட்டைப்பூச்சியால இதெல்லாம் செய்ய முடியாது. உஷ்... அப்பாடா... நீ சினிமா பார்த்துட்டு வந்தப்ப தோணின கேள்விக்கு, நான் எவ்வளவு நீளமா பதில் சொல்ல வேண்டி இருக்கு!  

மை டியர் ஜீபா!

தீ பிடித்தால் அதன் ஜுவாலை மஞ்சள் கலந்த சிவப்பாக இருக்கிறது. ஆனால், கேஸ் அடுப்பு ஜுவாலை நீல நிறத்தில் எரிவது ஏன்?

    -அ. யாழினி பர்வதம், சென்னை-78.

இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, தீ எப்படி உண்டாகுதுன்னு தெரிஞ்சுக்கணும் யாழினி. எரியும் தன்மைகொண்ட ஒரு பொருளோடு வெப்பம் சேர்ந்து, காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனோடு இணையற ஒரு செயின் ரியாக்ஷன்தான் தீ. அந்த வகையில் காட்டுத் தீ போன்று வெளிப்புறத்தில் ஏற்படற தீயில் ஆக்ஸிஜனின் பங்குதான் அதிகம். அதனால, அந்த வகைத் தீ மஞ்சள் கலந்த சிவப்பா இருக்கு. மனிதன், அறிவாற்றல் மூலமா இந்தத் தீயை தனக்குப் பயன்படும் விதமா மாத்திக்கிட்டான். பூமிக்கு அடியில் இயற்கையா கிடைக்கும் திரவ, திட கனிமங்களை வாயுக்களா மாற்றி, எரிபொருளா பயன்படுத்தினான். அந்தக் கனிமங்களின் வேதியியல் தன்மையைப் பொருத்து, தீயின் நிறம் மாறுது. அந்த வகையில காப்பர் குளோரைடு அதிகம் இருக்கறதால, கேஸ் அடுப்பு ஜுவாலை நீலநிறத்தில் எரியுது. இன்னொரு விஷயம்... மஞ்சள் ஜுவாலையைவிட நீல நிற ஜுவாலையின் வெப்பத் தன்மை அதிகம். ஸோ, விரைவில் பொருட்களைச் சூடாக்க நீல ஜுவாலையைப் பயன்படுத்தறாங்க.  

ஹாய் ஜீபா... கோலி விளையாட்டுல நான் கில்லி... என்னோட மோதறதுக்கு நீ ரெடியா?

    -ஆர்.கார்த்திக், சென்னை-15.

விளையாட்டு அப்புறம்... முதல்ல உனக்கு கோலியைப் பத்தி கொஞ்சம் சொல்றேன்... சிந்து சமவெளி காலத்துலயே மார்பிள் கற்களால இந்த கோலிகளைச் செய்து இருக்காங்க. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தைவான்... இப்படி உலகம் முழுக்க இருக்கிற சுட்டிகள் கோலி விளையாடறாங்க. உலக சாம்பியன் போட்டிகள்கூட நடத்தப்படுது. ஆனா கார்த்திக், கோலி வேற... கில்லி வேற. கோலியை, கோலி விளையாட்டாத்தான் விளையாடணும். நீ கோலியில 'கில்லி''யா ஆடினா அது அழுகுனி ஆட்டம். அந்த மாதிரி ஆட்களோடு விளையாட நான் ரெடி இல்லே... (அப்பாடி தப்பிச்சேன்!)