Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க!

காப்பி அடிக்கலாம் வாங்க!

காப்பி அடிக்கலாம் வாங்க!

காப்பி அடிக்கலாம் வாங்க!

Published:Updated:
காப்பி அடிக்கலாம் வாங்க!

ஹாய் சுட்டீஸ்... சென்ற இதழில், தொடர்ந்து வந்த பல தோல்விகளையே தனது வெற்றிக்கு அடித்தளமாகக் கொண்டு வெற்றிபெற்ற, சோய்ச்சிரோ ஹோண்டாவின் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம். இந்த முறை குழந்தைகளை மிகவும் நேசித்த நேருஜியின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

நவம்பர் 14, 1889-ல் உத்திரப்பிர தேசத்தின் அலஹாபாத்தில், பிரபல காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்தார்.  செல்வச் செழிப்பான குடும்பத்தில் அவர் பிறந்ததால், உயர்தரமான பள்ளியில் படித்தார். கல்லூரிப் படிப்பை லண்டன் டிரினிடி கல்லூரியில் படித்தார். தந்தையின் விருப்பத்துக்கு இணங்கி, லண்டனிலேயே சட்டப் படிப்பையும் படித்து பட்டம் பெற்றார்.

இந்தியா திரும்பிய நேருவுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. 1919-ஆம் ஆண்டில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்குப் பிறகு, நேரு மிகவும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

1924--ஆம் ஆண்டு, அலகாபாத் நகர முனிசிபல் கார்ப் பரேஷனுக்குத் தலைவராகத் தேர்வானார். இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பில் சேர்ந்தார். நேதாஜியுடன் இணைந்து துடிப்பு மிக்க இடதுசாரித் தலைவராகவும் விளங்கினார். தனது அரசியல் செயல்பாடுகளால் காந்திஜியின் நெருங்கிய அரசியல் தோழராக மாறினார்.

காப்பி அடிக்கலாம் வாங்க!

நேருவின் தீவிர அரசியல் ஈடுபாட்டினால், ஆங்கிலேய அரசு இவரை... தொடர்ந்து பல ஆண்டுகள் சிறைச்சாலையில் அடைத்தது. சிறையில் இருந்த நாட்களை நேருஜி மிகவும் பயனுள்ள வகையில் கழிக்க எண்ணினார்.

பல அரிய புத்தகங்களைப் படித்தார். ஏற்கெனவே கல்வியில் சிறந்து விளங்கிய நேருஜி, சிறையில் இருந்தபடி தனது செல்ல மகளான இந்திரா பிரியதர்ஷினிக்கு கடிதங்கள் பல எழுதினார்.

அன்புள்ள பிரியதர்ஷினிக்கு என்று ஆரம்பித்த அனைத்துக் கடிதங்களிலும் அன்பு விசாரிப்புகள் மட்டும் இல்லாது உலக வரலாறு, இந்தியாவின் வரலாறு என பல அரிய விவரங்களைக் கடிதம் மூலமே தன் மகளுக்கு போதித்தார். பிற்காலத்தில் இந்தக் கடிதங்கள் மூலம் கிடைத்த மாபெரும் அறிவுத் தாக்கத்தால், இந்திரா காந்தி உலக அரங்கில் பிரசித்தி பெற்றார்.

நேருஜி சிறையில் இருந்தபடி எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ மற்றும் 'க்ளிம்ப்ஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்டரி’ ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. இதன் மூலம் கொடிய சிறை வாழ்க்கையைக் கூட எப்படி உபயோகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று புரிந்துகொள்ளலாம்.

காந்தியின் வழி காட்டலின் பேரில் நேருஜி, 1929-ல் லாகூர் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். உடனடி சுய ராஜ்யம் என்ற இவரது கோரிக்கை ஆங்கிலேய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விரைவில் நம் நாடு சுதந்திரம் பெற்றது.

##~##
'உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில்... இந்தியா விழித்து எழுகிறது’ என்று இவர்தான் 1947 ஆகஸ்ட் 15-ல் அறிவித்தார். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரும் ஆனார்.

இவரது கூட்டுசேரா இயக்கம், பஞ்ச சீலக் கொள்கை ஆகியவற்றின் மூலம்   ஆசியப் பிராந்தியத்தின் நலனுக்காகப் பாடு பட்டதால் இவரை, 'ஆசிய ஜோதி’ என்றும் அழைத்தனர்.

சுதந்திர இந்தியாவை நிர்ணயித்ததில் முன்னிலை வகித்தார். நேருஜி, குழந்தைகள் மீது மிகவும் நேசமாகவும், அவர்களுடன் உரையாடுவதை மகிழ்ச்சியாகவும் எண்ணினார்.

குழந்தைகள் இவரை, 'சாச்சா நேரு’ என்று அன்புடன் அழைத்தனர். இன்றும் அவர், குழந்தைகளுக்கு 'நேரு மாமா’தான். அவர் நினைவைப் போற்றும் விதமாகத்தான், அவரது பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேருஜி, 1964 மே 27-ல் மாரடைப்பால் காலமானார்.

பெரும் செல்வந்தராக இருந்த போதும், தாய்நாட்டு சுதந்திரத்துக்காக சிறைப்பட்டதையும், அந்த தண்டனைக் காலத்தை வீணடிக்காமல், பயனுள்ளதாகக் கொண்டதையும், கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்ததால், இந்தியர்கள் அனைவருக்கும் பிடித்தமான தலைவராகவும் உயர்ந்ததைக் காப்பி அடிக்கலாம் வாங்க!

- கே.கணேசன்