Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 14

சென்றதும் வென்றதும்! - 14
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 14

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 14

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்! - 14
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 14
சென்றதும் வென்றதும்! - 14

கொள்ளையர்களிடம் இருந்து தப்பி, போர்ச்சுக்கலில் கரை ஒதுங்கிய கொலம்பஸ், லிஸ்பன் என்னும் நகரை அடைந்தார். அவருடைய வாழ்க்கையை மாற்றியது அந்த நகரம். ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரில் இருந்தும் கப்பல்கள் அங்கே வந்துசென்றன. ஒவ்வொரு கப்பலில் இருந்தும் பலவிதமான கதைகளும் தரையிறங்கின. ‘நான் அங்கே அதைப் பார்த்தேன், இங்கே இதைப் பார்த்தேன்' என்று மாலுமிகள் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டார்கள்.

அப்போது, கொலம்பஸின் சகோதரர் பார்த்ததோலிமியோ, லிஸ்பனில்தான் இருந்தார். வரைபடம் தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரைப் பார்த்து, கொலம்பஸும் வரைபடத்தின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். புதிய இடங்களைக் கண்டறிந்த மாலுமிகளிடம் பேசி, வரைபடங்களை உருவாக்குவார். விரைவில், ‘நம்பகமான வரைபடம் வேண்டுமா? கொலம்பஸிடம் கேள்' என்று மக்கள் சொல்லும் அளவுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் புகழ்பெற்றன.

ஸ்பானிஷ், போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட மொழிகளையும் கற்கத் தொடங்கினார் கொலம்பஸ். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதிய இடங்களுக்குக் கப்பலில் சென்று, ஆபத்தான சூறாவளி, பனி படர்ந்த பிரதேசங்களை எப்படிக் கையாள்வது என்பதைத் தெரிந்துகொண்டார். ஐஸ்லாந்து,  ஆர்ட்டிக் பிரதேசத்தையும் விட்டுவைக்கவில்லை.

1300 தொடங்கி 1500 வரையிலான மத்திய காலத்தை, மறுமலர்ச்சிக் காலகட்டம் என்பார்கள்.  கலை, இலக்கியம், அறிவியல், புவியியல், மருத்துவம் எனப் பல துறைகளில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை ஐரோப்பியர்கள் நிகழ்த்தினார்கள். கொலம்பஸ், வரைபடத்தை உருவாக்குபவர் என்பதால், புதிய இடங்களைக் கண்டறிவதில் ஆர்வம் மிகுந்தது.

குறிப்பாக, ஐரோப்பாவில் இருந்து மேற்கே ஆசியா செல்வதற்கான நேரடிக் கடல்வழிப் பாதையைக் கண்டுபிடிக்க விரும்பினார். அப்போது, ஆசியா செல்வதற்குத் தெற்கு நோக்கியே பயணம்செய்ய வேண்டும். மிகப் பெரிய ஆப்பிரிக்கப் பிரதேசத்தைச்  சுற்றிக்கொண்டு ஆசியா செல்ல வேண்டும். கொலம்பஸ், மேற்கு நோக்கி முன்னேற விரும்பினார். அட்லாண்டிக் கடல் வழியாக மேற்கை அடைந்துவிட்டால், ஆசியாவைச் சுலபமாகத் தொட்டுவிடலாம். கிழக்கிந்தியத் தீவுகளைச் சுலபமாக அடைய முடிந்தால், எக்கச்சக்கமான பயண நேரத்தையும் பயணச் செலவையும் மிச்சப்படுத்தலாம்.

போர்ச்சுக்கல் மன்னரை அணுகி, தன் கனவுத் திட்டத்தை விவரித்தார் கொலம்பஸ். அனுமதி கிடைக்கவில்லை. இங்கிலாந்து சென்றும்  பலன் இல்லை. இறுதியாக, 1491-ம் ஆண்டு கொலம்பஸை ஆதரிக்க முன்வந்தார், ஸ்பானிஷ் மன்னர். கொலம்பஸ் புதிய இடத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அங்கு கிடைக்கும் செல்வத்தில் 10 சதவிகிதம் கொலம்பஸுக்குக் கிடைக்கும். அந்த இடத்தின் கவர்னராக நியமிக்கப்படுவார்.

1492, ஆகஸ்ட் 3 அன்று மூன்று கப்பல்களில் கொலம்பஸின் பயணம் தொடங்கியது. தி நினா, தி பிண்டா, தி சாண்டா மரியா என்பதே அந்தக் கப்பல்கள். ‘கிழக்கிந்தியத் தீவுகளுக்கு விரைவில் சென்றுவிடுவேன். அங்கிருந்து பொன்னும் ரத்தினங்களும் கொண்டுவருவேன்' என்று பூரிப்படைந்தார் கொலம்பஸ்.

சென்றதும் வென்றதும்! - 14

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில், கானரி தீவுகளில் கரை ஒதுங்கினார்கள். அங்கேயே சிக்கல் ஆரம்பித்துவிட்டது. மேற்கொண்டு முன்னேறுவதற்கான வானிலை அமையவில்லை. ஒரு கப்பலைப் பழுதுபார்க்கவும் வேண்டும். எனவே, செப்டம்பர் 6 வரை அங்கேயே தங்கினர்.

பிறகு, பயணம் ஆரம்பமானது. ‘மேற்கே, இன்னும் மேற்கே போய்க்கொண்டே இருங்கள்' என்று உத்தரவிட்டார் கொலம்பஸ். கப்பல் பணியாளர்களுக்கும் வீரர்களுக்கும் அலுத்துவிட்டது. கப்பலில் ஏறி உட்கார்ந்த நாள் முதலே இதே உத்தரவுதான். ‘மேற்கில் அப்படி என்னதான் இருக்கிறது? எதிர்பார்க்கும் இடம்தான் என்றால் எது? பெரிய வரைபடத் தயாரிப்பாளர் என்று இவரை நம்பி வந்தது தவறோ?' என சலிப்படைந்தார்கள்.

பணியாளர்கள் சோர்ந்துபோவதைக் கண்ட கொலம்பஸ், ஓர் உபாயத்தைக் கண்டறிந்தார். ஒவ்வொரு கப்பலிலும் ‘லாக் புக்' இருக்கும். இன்று எவ்வளவு தூரம் சென்றிருக்கிறோம், என்ன செய்திருக்கிறோம் என்பதைக் குறித்துவைக்கும் குறிப்பேடு. கொலம்பஸ், அதை இரண்டு விதமாகக் கையாண்டார். ஒன்று, பணியாளர்கள் பார்க்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்தக் குறிப்பேட்டில், அன்றைய தினம் எவ்வளவு தூரம் சென்றார்களோ அதை எழுதாமல், எண்ணிக்கையைக் குறைத்து எழுதிவைப்பார். அதைப் பார்க்கும் பணியாளர்கள், இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தார். நிஜமான தூரத்தைக் குறிக்கும் லாக் புக் அவரிடம் ரகசியமாக இருந்தது.

இந்த உத்தி வெற்றி பெறவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கியபோது, கப்பல் பணியாளர்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று விட்டார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலம் காணப்படவில்லை. அவர்கள் கொலம்பஸை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். அவர்களை அமைதிப்படுத்த முயன்ற கொலம்பஸ், ‘இன்னும் இரண்டு தினங்களில் நிலம் தட்டுப்படாவிட்டால் பயணத்தை ரத்து செய்துவிடலாம்’ என்றார்.

மறுநாளே நிலம் அகப்பட்டுவிட்டது. அக்டோபர் 12-ம் தேதி, கொலம்பஸ் புதிய இடத்தில் கால்களைப் பதித்தார். ‘திட்டமிட்டபடியே கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்துவிட்டோம்' என்று உற்சாக முழக்கமிட்டார். அங்கிருந்த பழங்குடிகளை, ‘இந்தியர்கள்' என்று அழைத்தார் கொலம்பஸ். உண்மையில், அது கிழக்கிந்தியத் தீவும் அல்ல, அவர்கள் இந்தியர்களும் அல்ல. ‘பஹாமா தீவுகள்' என்று பின்னாளில் அழைக்கப்பட்ட இடம்தான் அது.

சென்றதும் வென்றதும்! - 14

பிறகு, கியூபா தொடங்கி பல கரீபியன் தீவுகளைச் சுற்றி வந்தார். மனிதர்கள் யாரும் கால் பதிக்காத புதிய உலகைக் கண்டுபிடித்துவிட்ட திருப்தி அவருக்கு ஏற்பட்டது. அந்தத் தீவுகளில் ஏற்கெனவே வசித்துவந்த பழங்குடிகள் யார் என்பது பற்றி அவர் யோசிக்கவே இல்லை. கொலம்பஸ், அந்தப் பழங்குடிகளை மதிக்கவே இல்லை என்பதோடு, அவர்களோடு பலத்த மோதலிலும் ஈடுபட்டார்.

மேலும் இரு முறை பயணங்கள் மேற்கொண்ட கொலம்பஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தார். யுஎஸ்ஏ என்று அழைக்கப்படும் வட அமெரிக்காவில், அவர் கால் பதிக்கவே இல்லை. கொலம்பஸ் கிழக்கிந்தியத் தீவுகளையும் கண்டறியவில்லை, அமெரிக்காவிலும் கால் பதிக்கவில்லை. இருந்தாலும் அமெரிக்காவைக் கண்டறிந்தவர் என்னும் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.

(பயணம் தொடரும்...)