Published:Updated:

மேரு கழுகும் மெகா புதையலும்!

மேரு கழுகும் மெகா புதையலும்!
பிரீமியம் ஸ்டோரி
மேரு கழுகும் மெகா புதையலும்!

- சுட்டி ஸ்டார்ஸ் சந்திப்பு

மேரு கழுகும் மெகா புதையலும்!

- சுட்டி ஸ்டார்ஸ் சந்திப்பு

Published:Updated:
மேரு கழுகும் மெகா புதையலும்!
பிரீமியம் ஸ்டோரி
மேரு கழுகும் மெகா புதையலும்!
மேரு கழுகும் மெகா புதையலும்!

'தந்தையர் தினம்' கொண்டாடிய ஜூன் 19-ம் தேதி, நம் சுட்டி ஸ்டார்களுக்கு ஸ்பெஷல் தினமாக அமைந்தது. முகம் நிறைய புன்னகை, மனம் நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்னைக்குப் பறந்துவந்தன 5௦ பட்டாம்பூச்சிகள். 'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்' பயிற்சித் திட்டத்தில், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய படையின் அழகு சங்கமம் அது.

"யாருக்கெல்லாம் கதை தெரியும்?" எனக் கேட்டதும், துள்ளி வந்து கதைகள் சொல்லி, அதையே வரவேற்பு உரையாக மாற்றினார்கள்.

பலன்கள் ஏராளம்!

"தயக்கம் இல்லாமல் முன்வந்து, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் இந்தக் குணம்தான், வெற்றிக்கான அடிப்படை. இன்று வெற்றியாளராக இருக்கும் பலர், தயக்கத்தை உடைத்தவர்களே" என்று ஆரம்பித்தார் செந்தில்குமார்.

மேரு கழுகும் மெகா புதையலும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான இவர், ‘பலன்கள் ஏராளம்' என்ற தலைப்பில் பேசினார். "உங்க எல்லோருக்கும் ஜாலியான டெஸ்ட். உங்க டேபிளில் இருக்கிற புத்தகம், பேனா, பென்சில் எல்லாத்தையும் எடுத்து கீழே வெச்சிருங்க. டேபிள் மேலே விரித்திருக்கும் வெள்ளைத் துணியையே ரெண்டு நிமிஷம் உற்றுப்பாருங்க" என்றதும், த்ரில் சினிமாவின் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியைப் பார்ப்பது போல கண்களை அசைக்காமல் பார்த்தார்கள். டிக்... டிக்... டிக்...

"இப்போது, பேப்பரும் பேனாவும் எடுங்க. இந்த வெள்ளைத் துணியில், நீங்கள் எதையெல்லாம் பார்த்தீங்க, என்னவெல்லாம் தெரிஞ்சதுனு  எழுதுங்க" என்றார். மறுபடியும் டிக்... டிக்... டிக்...  அப்புறம், எழுதியதைப் படிக்கச் சொன்னார்.

சின்னப் புள்ளி, மடிப்பு, தூசு, மேகம், வெள்ளை யானை, வெனிலா ஐஸ்க்ரீம், சோட்டா பீம், க்ளாஸ் ரூம் என ஒவ்வொருத்தரும் 10, 20 பெயர்களைச் சொன்னார்கள். இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்தால் செஞ்சுரி அடிப்பார்கள் போல.

மேரு கழுகும் மெகா புதையலும்!

"அது எப்படி ஒரு வெள்ளைத் துணியில் இவ்வளவும் தெரியும்? இது, லாஜிக் பார்க்கும் விஷயம் இல்லை. ஒரு விஷயத்தை ஒரே கண்ணோட்டத்திலேயே பார்த்து, ஒரே மாதிரியே செஞ்சுட்டு இருக்கக் கூடாது. நமது சிந்தனை எல்லையற்றது. அதை, ஒரு வட்டத்துக்குள் அடைச்சுடாதீங்க. வட்டத்தைவிட்டு வெளியே வரும்போதுதான் புதுப்புது படைப்புகள் உருவாகும். இது, எழுத்துத் துறைக்கு மட்டும் இல்லை. எந்தத் துறைக்கும் பொருந்தும்'' என்ற செந்தில்குமார், அதற்காக நம்மை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சின்னச்சின்ன உதாரணங்கள் மூலம் விளக்கினார்.

என்ன எழுதலாம்... எப்படி எழுதலாம்?

"உங்க எல்லோருக்குள்ளேயும் கதைகள் இருக்கு. நீங்க எல்லோருமே எழுத்தாளர் ஆக முடியும்" என, அடுத்து பேச வந்தார், விழியன்.

மேரு கழுகும் மெகா புதையலும்!

‘மாகடிகாரம்', 'பென்சில்களின் அட்டகாசம்', ‘அந்தரத்தில் நடந்த அதிசயக் கதை' எனப் பல கதைப் புத்தகங்களை எழுதிய சிறார் எழுத்தாளர். ஒரு கதையை எப்படி எழுதுவது? மற்றவர்களிடம் இருந்து நம் கதைகள் தனித்துத் தெரியும் வகையில் எழுதுவது எப்படி எனச் சில கதைகளின் மூலம் அட்டகாசமாகச் சொன்னார்.

"இப்போ, உங்களுக்கு ரொம்பத் தெரிஞ்ச, பாட்டி வடை சுட்ட கதையை எடுத்துப்போம். ஒரு கதைக்கு தலைப்பு ரொம்ப முக்கியம். தலைப்பே கதையைச் சொல்லணும். இந்தக் கதைக்கு தலைப்பு சொல்லுங்க பார்ப்போம்" என்றார்.

‘காக்கா சுட்ட வடை', ‘ஒரு வடை ரெண்டு திருடர்கள்', ‘வடை போச்சே' என விதவிதமாகத்  தலைப்புகள் வைத்தார்கள் சுட்டி ஸ்டார்கள்.

"அடுத்து, கதையின் ஆரம்பம். ‘ஒரு ஊருல ஒரு பாட்டி' என்றுதான் ஆரம்பிக்கணுமா? நடுவில் இருந்து ஆரம்பித்தும் பின்னால் போகலாம். நரிகிட்டே இருந்தும் ஆரம்பிக்கலாம். ஆரம்ப வரிகளே, கதையைப் படிக்கத் தூண்டணும். நீங்க  ஆரம்ப வரிகளைச் சொல்லுங்க" என்றார் விழியன்.

‘அந்தக் காகம் பறந்து வந்தது', ‘நரி நிமிர்ந்து பார்த்தது', ‘தீ எரிந்துகொண்டிருந்தது' என ஆரம்பம் கொடுத்து அசத்தினார்கள் சுட்டி ஸ்டார்கள்.

கேட்டுக்கோ... தெரிஞ்சுக்கோ!

அடுத்த சிறப்பு விருந்தினர், பாரதி கிருஷ்ணகுமார். 10 மணி நேரம்கூட கூட்டத்தைத் தன் பேச்சாற்றலால் கட்டிப்போடும் அற்புதப் பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர். தனது கலகல பேச்சால், சுட்டிகளைச் சுண்டி இழுத்தார்.

மேரு கழுகும் மெகா புதையலும்!

"உங்களில் எத்தனை பேருக்கு மரம் ஏறத் தெரியும்? சின்ன வயசுல, பள்ளிக்கூடம் விட்டதும் நான் மரத்துலதான் இருப்பேன். கள்ளன்-போலீஸ் விளையாட்டு எனக்குப் பிடித்த விளையாட்டு. கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தாலே, ‘உள்ளேயே உட்கார்ந்து என்ன பண்றே? போய் விளையாடுடா' என்பார் அப்பா. இப்போது, சிறுவர்கள் வெளியே கால் வைத்தாலே பெற்றோர் பதறுகிறார்கள். வகுப்பறையிலும் பாடப் புத்தகத்திலும் மட்டுமே உலகம் இல்லை" என்றார்.

‘ஒரு சிங்கமும் துறவியும்' என்ற கதையை அவர் சொன்னபோது, நிஜமாகவே காட்டுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. மொழியை  வெளிப்படுத்தும் விதம், பிழையின்றிப் பேசுவது, வாசிப்புத்திறனை வளர்த்துக்கொள்வது எனப் பல விஷயங்களைச் சுவாரஸ்யமாகச் சொன்னார். பிறகு, நம் சுட்டி ஸ்டார்கள், நிருபர்களாக மாறிக் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சிக்ஸர்களை அடித்தார்.
கைகளில் கண்ணாமூச்சி!

உணவு இடைவேளைக்குப் பிறகு, கலகலப்பு இரட்டிப்பானது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் சுப்ரமணியன், “வெறுங்கை என்பது மூடத்தனம். பத்து விரல்களிலும் இருக்கு விஞ்ஞானம்" என்று சுட்டிகளைக் கைகள் மூலம் விளையாட்டுக்கு அழைத்தார்.

நினைவாற்றல், மூளையின் இரு பக்கங்களையும்   முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கைகளின் பயிற்சிகள் மூலம் செய்வதற்குக் கற்றுக்கொடுத்தார்.

வேட்டையாடு விளையாடு!

அதற்கு அடுத்த அதிரடி, ‘வேட்டையாடு விளையாடு' என்கிற புதையல் வேட்டை. ‘கனவு வெளி நாடகக் குழு'வை நடத்திவரும் ஆழி. வெங்கடேசன், சிந்துபாத்தாக அரங்கத்துக்குள் ஆர்பாட்டமாகக் குதித்தார்.

மேரு கழுகும் மெகா புதையலும்!

"நான்தான் சிந்துபாத். கடல் தாண்டிப்      பல்வேறு தீவுகள் மற்றும் நாடுகளுக்குச் சென்று, பொன்னையும் வைரத்தையும் பல்வேறு நவரத்தினங்களையும் கொண்டுவருவேன். இப்போ, ஒரு புதையல் வேட்டைக்குக் கிளம்புறேன். உங்களுக்கு மேரு பறவையைத் தெரியுமா? உலகத்திலேயே பெரிய கழுகு. அது இறக்கையை விரிச்சா, மலையே இறக்கைக்குள் மறைஞ்சுடும். அதோட குஞ்சுகளுக்கு, இரையாக யானைக் குட்டிகளைத் தூக்கிட்டு வந்து கொடுக்கும். அந்த மேரு கழுகுக்குத்தான் புதையல் இருக்கும் இடம் தெரியும். அந்தக் கழுகைப் பிடிச்சு, புதையலை எடுக்கப்போறேன். என்னோடு நீங்களும் வர்றீங்களா?' எனக் கேட்டார்.

சுட்டிகள் தயாராகவே, கப்பல் புறப்பட்டது. புயலில் சிக்கிய அந்தக் கப்பல் உடைந்தது. போராடி கரைக்கு வந்த அவர்கள், மலை மீது ஓய்வெடுக்க வந்த மேரு கழுகைப் பார்த்தார்கள். சிந்துபாத், அதன் ஒரு காலைப் பிடித்துக்கொள்ள, மற்றவர்கள் சிந்துபாத்தைப் பிடித்துக்கொள்ள, பறந்தது கழுகு. கழுகுடன் பயணம் செய்து, குறிப்புகளைவைத்து  புதையல் வேட்டை நடத்திவிட்டு, அரங்கத்துக்கு வந்தார்கள்.

மேரு கழுகும் மெகா புதையலும்!

அவர்களை வரவேற்றார்கள் சீனியர் சுட்டி ஸ்டார்ஸ். சென்ற ஆண்டு பேனா பிடித்து, தங்களின் பல்வேறு திறமையால் சுட்டி விகடனில் பின்னி எடுத்து, சூப்பர் சுட்டி ஸ்டார்களாகத் தேர்வான அவர்கள், இந்த ஆண்டு சுட்டி ஸ்டார்களுக்கு, டிப்ஸ் விருந்து அளித்து, மேலும் உற்சாகம் கொடுத்தார்கள். அவர்களுக்குச் சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டன.

"இந்த வருஷம், உங்களைவிட அதிகமா நாங்கள் சுட்டி விகடனில் எழுதி, அறிவுப் புதையலை அள்ளிக் காட்டுறோம்" என்று சவால்விட்டார்கள் ஜூனியர் சுட்டி ஸ்டார்ஸ்.

பின்னி எடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

- தா.நந்திதா, படங்கள்: பா.காளிமுத்து, சு.ஷரண் சந்தர், பா.அபிரக்‌ஷன்

மேரு கழுகும் மெகா புதையலும்!

உலகை அறிய, நிறைய வாசியுங்கள்!

பாரதி கிருஷ்ணகுமாரிடம் சுட்டி ஸ்டார்ஸ்  நிகழ்த்திய நேர்காணலில் சில...

"உங்களோட சொந்த ஊர் எது?"

"சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்தவன். என் பெற்றோர் பாலசந்தர், பத்மாவதி அம்மாள். என் இளம் வயதிலேயே இருவரையும் இழந்துவிட்டேன்.''

"இந்தப் பேச்சுத் திறமை எப்படி வந்தது?"

"சிறு வயது முதலே தமிழ் ஆளுமைகொண்ட மேடைப் பேச்சாளர்கள் கூட்டம் எங்கு நடந்தாலும், என் அம்மா அழைத்துச் செல்வார். அவர்களின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கச் சொல்லுவார். அதுதான் இன்று, யார் காலையும் பிடிக்காமல் வாழும் வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. நான் படித்த சிஎஸ்ஐ கிறிஸ்துவப் பள்ளியின் ஜோசப் வாத்தியாரும் முக்கியக் காரணம்.''

"உங்கள் முதல் மேடை அனுபவம் பற்றி..."

"10 வயதாக இருக்கும்போது, எங்கள் ஜோசப் வாத்தியார், தாஜ்மகாலைப் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்ற என்னைத் தயார்படுத்தினார். அன்று உலக அதிசயத்தைப் பற்றி உரையாடியதுதான், பிற்பாடு உலகில் உள்ள எல்லா அதிசயங்களையும் உரையாடுகிறேன். என் படிப்பு, அறிவு, ஆற்றல் அனைத்தையும் ஒருவருக்கு அர்ப்பணிக்கச் சொன்னால், ஜோசப் வாத்தியாருக்குத்தான் அர்ப்பணிப்பேன்."

"எந்தத் தலைப்பாக இருந்தாலும் எப்படி இவ்வளவு ஆழமாகப் பேசுகிறீர்கள்?"

"வாசிப்புதான் காரணம். இந்த உலகை அறிய, நிறைய வாசியுங்கள். பாடப் புத்தகங்கள், யானைப் பசிக்கு சோளப் பொரி. என்னுடைய 19 வயதில், என் தாய் இறந்துவிட்டார். என் சகோதரி வருவதற்காக மயானத்தில் காத்திருந்த நேரத்திலும், நண்பரிடம் 'ஆண்டன் செகாவ்' எழுதிய கதையைச் சொன்னேன். அது, எனக்கு மன ஆறுதலை அளித்தது."

"ஆவணப் படங்களுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?"

மேரு கழுகும் மெகா புதையலும்!

"ஆவணப்படம் என்பது, நிஜத்தை ஆவணமாக்குவது. ஒரு சம்பவம் ஏன், எப்படி, யாரால், எதற்காக நடந்தது என்ற தகவல்களை முழுமையாகச் சேகரித்து, உலகுக்குச் சொல்ல வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் பயந்து பின்வாங்கக் கூடாது. 2004-ம் ஆண்டு, கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் கருகிப் பலியானார்கள். பள்ளி நிர்வாகம், "ஆடி மாதம் என்பதால், ஆசிரியர்கள் அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள்" என்று சொன்னது. ஒரு பள்ளியில் அத்தனை ஆசிரியர்களுமே கோயிலுக்குச் செல்வார்களா என்ற கேள்வியோடு சென்றேன். உண்மைக்கு அருகில் செல்லும் பயணம் எளிதானது அல்ல. அதற்காக, பல இன்னல்களைச் சந்திக்க வேண்டும்."

"உங்களின் அடுத்த ஆவணப்படம் என்ன?"

"1968-ம் ஆண்டு கீழ்வெண்மணி கிராமத்தில் நடந்த படுகொலைகளை மையமாகவைத்து, 'ராமையாவின் குடிசை' என்ற ஆவணப்படம் எடுத்திருந்தேன். அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறேன்."

"நாங்கள் படிக்க எந்த மாதிரியான புத்தகங்களைப் பரிந்துரைசெய்வீங்க?"

"பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் புத்தகங்களை வாசியுங்கள்."

"நீங்கள் சிறுவர்களுக்காக கதை எழுதுவீர்களா?"

"என் மகனை சாப்பிடவைப்பதற்காகச் சொன்ன கதைகளைத் தொகுத்து எழுதப்போகிறேன்."

"எங்களுக்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம்?"

"தவறானவர்களை, தவறான வழியில் பணம் சேர்த்து உயர்ந்தவர்களைப் பார்த்து மயங்காதீர்கள். அவர்களை அழுக்கான குப்பையாக நினைத்து உதறுங்கள். என்றும் நேர்வழியிலேயே பயணித்து உயரத்தை எட்டுங்கள்."

- சுட்டி ஸ்டார்ஸ்