Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 15

சென்றதும் வென்றதும்! - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 15

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 15

இபின் பதூதா

மார்கோபோலோவுக்கும் இபின் பதூதாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. போலோவைப் போலவே பதூதாவும் இளம் வயதிலேயே தனது பயணங்களைத் தொடங்கிவிட்டார். 1325-ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது பதூதாவின் வயது 20 என்கிறார்கள். போலோவின் பயணத்தில், மூத்தவர்களும் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். ஆனால், பதூதா தனியாகத்தான் கிளம்பினார்.

பதூதா பிறந்தது, வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ‘மொராக்கோ' நாட்டின், டான்ஜியர் என்னும் இடத்தில். அவர்  குடும்பத்தில் பலர், இஸ்லாமியச் சட்டங்களைக் கற்றறிந்த மேதைகள். ஒவ்வோர் இஸ்லாமியரும் மெக்காவுக்கும் மதீனாவுக்கும் புனிதப் பயணம் (ஹஜ்) செல்வது, வாழ்நாள் கனவு. இபின் பதூதாவும் அப்படித்தான் கிளம்பினார். அதுவே, அவரது வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது.

மார்கோபோலோவின் பயணக் குறிப்புகளில், தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி எதுவும் இருக்காது. தான் பார்த்த புதிய நாடுகளையும், புதிய மனிதர்களையும், புதிய விலங்குகளையும் பற்றியே மாய்ந்து மாய்ந்து எழுதியிருப்பார். தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்க மாட்டார். மிகவும் அபூர்வமாக ஒரே ஓர் இடத்தில், ‘நான் கொஞ்சம் குண்டு என்பதால், என் எடையைத் தாங்கும் கனமான குதிரையைக் கொடுத்தார்கள்’ எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால், பதூதாவின் பயணத்தில் தன்னைப் பற்றியும் எழுதுகிறார். அவருடைய முதல் பயணத்தின் குறிப்பே இப்படித்தான் ஆரம்பிக்கிறது... ‘நான் தனியாகத்தான் கிளம்பினேன். வழித்துணையோ, பெரிய பயணக் குழுவோ இல்லை. நான் நேசிக்கும் நபர்களை விட்டுப் பிரிவது வருத்தமாக இருந்தாலும் பிரிந்துசெல்லவே முடிவெடுத்தேன். என் அப்பா, அம்மாவிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அந்தத் துயரத்தையும் கடந்துதான் வீட்டைவிட்டு வெளியேறினேன், கூட்டைவிட்டு வெளியேறும் பறவையைப்போல’ என தனது உணர்வுகளையும் குறிப்பிடுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்றதும் வென்றதும்! - 15

இந்த ஹஜ் பயணம் மேற்கொள்ள, எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது தெரிந்தால்தான், பதூதா ஏன் இந்த அளவுக்கு வருந்தினார் என்பது புரியும். மொராக்கோவில் பெரும்பாலும் நடந்தும், சில சமயம் ஒட்டகம் மூலமாகவும் மெக்கா, மதீனா சென்று திரும்ப 16 மாதங்கள் பிடிக்கும். பதூதா ஊருக்குத் திரும்ப 24 ஆண்டுகள் ஆனது. ஏன்?

தன் முதல் பயணத்தைத் தொடங்கியபோது, பதூதாவிடம் இருந்தது ஒரு கழுதை மட்டுமே. உணவு, துணிமணிகள் மற்றும் தண்ணீர்கொண்ட ஒரு பெரிய மூட்டை. ஆடி அசைந்து நடக்கத் தொடங்கியது கழுதை. பதூதா பொறுமையாகப் பின்தொடர்ந்தார். ஆரம்பத்தில் சுதந்திரப் பறவையாக உணர்ந்தாலும், பெற்றோர் நினைவு வாட்டியது.  உடல்நிலையும் படுத்த ஆரம்பித்தது. பயணத்தைத்  தொடரலாமா, வீடு திரும்பிவிடலாமா எனத் தடுமாறியவருக்கு, வழிபோக்கர்கள் ஆலோசனை சொன்னார்கள். ‘இவ்வளவு தூரம் கிளம்பி வந்துவிட்டாய். எதற்காகப் பாதியில் விடவேண்டும்? இரண்டு பயணக்குழு இப்போதுதான் இங்கிருந்து கிளம்பியிருக்கிறது. அவர்களுடன் சேர்ந்துகொள்’ என்றார்கள்.

பதூதா அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்னும் உத்வேகம் பிறந்தது. இடையில், காய்ச்சல் வாட்டியெடுத்தது. கொள்ளையர்கள் கூட்டத்தையும் சந்திக்க நேரிட்டது. பதூதா அசரவேயில்லை. ‘கடவுள் என்னை என்ன செய்ய நினைக்கிறாரோ, செய்துகொள்ளட்டும். என் வழியில் சென்றுகொண்டிருப்பேன்' எனச் சொல்லிக்கொண்டார்.

‘உன் கழுதையையும் பெரிய மூட்டையையும் விற்றுவிடு. யாராவது திருடிக்கொள்வார்கள். எந்தவித கனமும் இல்லாமல் சென்றால்தான், விரைவாகப் பயணத்தை முடிக்கலாம்’ என்று சொன்னார்கள். பதூதா அதையும் செய்தார். வழியில் கிடைத்த உணவை உட்கொண்டார். போகும் வழியிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இது எப்படி நடந்தது என்ற  விரிவான குறிப்புகள் இல்லை.

1326-ம் ஆண்டு, அலெக்சாண்ட்ரியா நகரில் உள்ள துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார் பதூதா. இதுவரை 3,500 கிலோமீட்டர் தொலைவு  வந்திருந்தார். இனி, மெக்காவையும் மதீனாவையும் தொட்டுப் பிடித்துவிடலாம் என்னும் நம்பிக்கை அவருக்குள் பிறந்தது.

‘சரி, இரண்டு இடங்களையும் தரிசித்து முடித்த பிறகு வீடு திரும்பிவிடலாமா... மிச்ச வாழ்க்கையை என்ன செய்வது?' என்ற கேள்விகள் எழுந்தன.

சென்றதும் வென்றதும்! - 15

அப்போது, ஷேக் ஃபர்ஹானுதின் என்பவரைச் சந்தித்தார். ‘‘எனக்கு ஓர் உதவி செய்யமுடியுமா? இந்தியாவில் என் சகோதரர் இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது, நான் விசாரித்தேன் என்று சொல்லுங்கள். சிந்து பிரதேசத்தில் என்னுடைய இன்னோர் உறவினர் இருக்கிறார். அவரிடமும் பேசுங்கள். சீனா போகும்போது அங்கு ஒருவரையும் நான் விசாரித்த தகவலைச் சொல்லுங்கள்’' என்று பட்டியலிட்டார்.

பதூதா குழம்பிவிட்டார். ‘‘ஐயா, நான் அங்கெல்லாம் போகப்போவது இல்லை. நான் மொராக்கோவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள வந்தவன். திரும்ப ஊருக்குத்தான் போகப்போகிறேன்'’ என்றார்.

அந்த முதியவர் புன்னகைத்து, ‘‘உன்னைப் பார்த்தால் மேலும் பல பயணங்களை மேற்கொள்வாய் எனத் தெரிகிறது. கடல் பயணம் மேற்கொள்ளப்போகிறாய். இப்படி ஊர் சுற்றுவதுதானே பிடித்திருக்கிறது... பிறகு ஏன் வீட்டுக்குப் போகவேண்டும்?'’ என்று கேட்டார்.

இபின் பதூதாவுக்கு சட்டென்று ஒரு மின்னல் வெட்டியதுபோல இருந்தது.

(பயணம் தொடரும்...)