Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 16

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 16

இபின் பதூதா

மெக்கா, மதீனா இரண்டையும் தரிசித்து முடித்த பிறகும் இபின் பதூதாவுக்கு தாகம் அடங்கவில்லை. இந்த உலகம் பெரியது அல்லவா? நிலத்தில் மட்டுமே பயணம் செய்தால் போதுமா? கடல் கடந்து, தூர தேசங்களுக்குப் போக வேண்டாமா?

அதன் பிறகு, இபின் பதூதா ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கவில்லை. வழியில் ஒரு குழு தட்டுப்பட்டால் ஓடிப்போய், ‘ஐயா, நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்? நானும் உங்களுடன் வரலாமா?' எனக் கேட்டு அவர்களோடு சேர்ந்துகொள்வார். எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, ஈராக் என்று பதூதா சுற்றத் தொடங்கியது இப்படித்தான்.

ஆப்பிரிக்காவும் ஆசியாவும் பதூதாவைத் தூண்டில் போட்டு இழுத்தன. இந்த இரு கண்டங்களில் உள்ள எல்லா நாடுகளையும் பார்த்தே தீர்வது என்று சபதம் போட்டுக்கொண்டார். என்ன சாப்பிடுவது, எங்கே தங்குவது என்பதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை.  யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டார். வழிபாட்டு இடங்களில் கும்பலோடு கும்பலாகப் படுத்து உறங்கினார்.

அப்போதெல்லாம் பதூதா போன்ற பயணிகளுக்கு உணவும் இருப்பிடமும் அளிக்க ஊர் பெரிய மனிதர்கள் ஆர்வம் காட்டினார்கள். சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டு, ‘‘அப்புறம் எங்கே போய் வந்தாய் சொல்?'' என்று கதை கேட்பார்கள். பதூதாவுக்கும் கதைச் சொல்வதென்றால் கொள்ளைப் பிரியம்.

எளிய குடிசை வீட்டில் ஒருநாள் தங்குவார். மறுநாள், அந்த நாட்டின் அரண்மனையில் மன்னரிடம், தான் சென்ற இடங்கள் பற்றிச் சொல்லி, விருந்தாளியாகத் தங்குவார்.  அரண்மனை வாழ்க்கை சில நாட்கள் கிடைக்கும். பிறகு, மூட்டை முடிச்சோடு கப்பல் ஏறிவிடுவார்.

இந்தியாவுக்குப் போக வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்தார் இபின் பதூதா. ‘இந்து குஷ் மலைத்தொடர் பகுதியைக் கடந்தால்தான் இந்தியா போகமுடியும்' என்றார்கள். 13,000 அடிகள் உயரம்கொண்ட ‘காவாஸ் பாஸ்' எனப்படும் பகுதியைக் கடந்துசென்றார். அதைப் பற்றி அவர் எழுதிய குறிப்பு இது.

‘மிகவும் உயரமான மலை அது. முழுக்க பனியால் மூடப்பட்டிருந்தது. அதை, ‘இந்து குஷ்' என்று அழைக்கிறார்கள். இந்துக்களைக் கொல்லும் குளிர் என்பது இதன் அர்த்தம். இங்கு வரும் பலர் குளிர் தாங்காமல் இறந்துவிடுவார்களாம்.’

அங்கிருந்து ஆஃப்கானிஸ்தான் வழியாக, சிந்து நதிக்கரைக்கு செப்டம்பர், 1333-ம் ஆண்டு வந்து,  டெல்லி சென்றார். அப்போது, சுல்தானாக இருந்த முகமது பின் துக்ளக்கைச் சந்தித்தார். அவருக்குப் பதூதாவைப் பிடித்துவிட்டது. மெக்கா சென்றவர், இஸ்லாமியச் சட்டங்களைப் பயின்றவர் என்பதால், பதூதாவை அரசவை  நீதிபதியாக நியமித்தார்.

உல்லாசமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த பதூதா  ஓரிடத்தில் உட்காருவாரா?  இந்தியாவை வலம் வர ஆரம்பித்துவிட்டார். சிந்து நதிக்கரையில் சுற்றிக்கொண்டிருந்த காண்டாமிருகங்களைப் பற்றி  விரிவாக தன் டைரியில் எழுதினார். விரைவில் அவருக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. ‘‘சுல்தான், நான் இன்னொரு முறை மெக்கா போகலாம் என்று நினைக்கிறேன்'' என்றார். துக்ளக் ஒப்புக் கொள்ளவில்லை. பதூதாவும் பிடிவாதத்தை விடவில்லை.

‘‘சரி, ஒரு வேலை செய்யுங்கள். சீனா போய் வாருங்கள்'' என்று படை, பரிவாரங்களுடன் அனுப்பிவைத்தார் துக்ளக்.

சென்றதும் வென்றதும்! - 16

மகிழ்ச்சியோடு புறப்பட்டார்  பதூதா. ஆனால், பயணத்தில் தனியாக சுற்றிக்கொண்டிருந்த போது, கொள்ளைக்காரர்கள் அவரை மடக்கிவிட்டார்கள். அவரிடம் இருந்ததைத் திருடிவிட்டார்கள். இனி சீனாவுக்குப் போகமுடியாது என்பதால், கடல் வழியே கோழிக்கோடு போனார் பதூதா. (இரண்டு நூற்றாண்டுகள் கழித்து இதே இடத்துக்குதான்    வாஸ்கோ ட காமா வந்துசேர்ந்தார்.)

அங்கிருந்து கொல்லம் சென்றார். அங்கே ஒரு மசூதி இருப்பதை அறிந்து அதைப் பார்க்கப்போனார். அதற்குள் பெரும் சூறாவளி ஒன்று, பதூதாவின் கப்பலைக் கவிழ்த்துவிட்டது. கப்பல் மட்டுமா கவிழ்ந்தது? துக்ளக்கின் ஆட்சியும் கவிழ்ந்துவிட்டது என்னும் செய்தி வந்துசேர்ந்தது.

அடுத்து எங்கே போவது? புறப்பட்டது சீனாவுக்கு என்பதால், அங்கேயே போய்விட முடிவெடுத்தார். இடையில், மாலத்தீவுக்கு கடல் வழியாகவே சென்றார். குட்டித் தீவுதானே ஒரே நாளில் பார்த்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அங்கே ஒன்பது மாதங்கள் தங்கினார். காரணம், அங்கிருந்த ஓமர் என்னும் ராஜா. ஒரு பௌத்த நாடாக இருந்த மாலத்தீவு, இஸ்லாமிய நாடாக மாறியிருந்தது. இஸ்லாமிய சட்டம் தெரிந்த பதூதா, அங்கே இருப்பது நல்லது என்று ஓமர் நினைத்ததால், அவரைப் பிடித்து இழுத்து, நீதிபதி பதவியில் உட்காரவைத்துவிட்டார்.

இதென்ன, எங்கே போனாலும் வேலை செய்யச் சொல்கிறார்களே என்று பதூதா நினைத்திருக்க வேண்டும். அங்கிருந்து விடுவித்துக்கொண்டு, இலங்கை சென்றார். இலங்கையில் கால் பதிப்பதற்குள் அவருடைய கப்பல் கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கிவிட்டது. ‘அடடா, நாம் நினைத்ததைவிட ஒவ்வொரு நாளும் சாகசம் அதிகமாகிக்கொண்டே போகிறதே' என்று உற்சாகம் அடைந்தார் பதூதா. ஆம், அதுதான் இபின் பதூதாவின் சிறப்பம்சம். கப்பல், ஆட்சி எது கவிழ்ந்தாலும் அவருக்குக் கவலையில்லை. வழி தவறினால், கொள்ளைக்காரர்கள் வந்தால் கவலையில்லை. ‘என் லட்சியம் பயணம் செய்வது மட்டுமே' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்வார். சுமத்ரா, வியட்நாம், சீனா, ரஷ்யா என்று பல நாடுகளைச் சுற்றிவந்தார்.

சென்றதும் வென்றதும்! - 16

1348-ம் ஆண்டு டமாஸ்கஸ் வந்து சேர்ந்தார் இபின் பதூதா. இதுவரை எங்கெல்லாம் சென்று வந்தோம் என்று பட்டியல் போட்டுப் பார்த்தார். எல்லா இஸ்லாமிய நாடுகளையும் இபின் பதூதா வலம் வந்திருந்தார். அடுத்து எங்கே என்று சிலர் கேட்டார்கள். ‘‘நான் போயே தீரவேண்டிய ஓரிடம் இருக்கிறது, அங்கேதான் போகப்போகிறேன்'' என்றார் பதூதா.

அந்த இடம், மொராக்கோ. ஆம், அவருடைய வீடு.

(பயணம் தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு