Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 17

சென்றதும் வென்றதும்! - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 17

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 17

ல்டர் ராலே

ல்டர் ராலேவுக்கு கவிதை எழுதத் தெரியும். கத்தி பிடித்துச் சண்டை போடத் தெரியும். அரசியலில் ஈடுபாடு உண்டு. உளவு வேலையும் பார்ப்பார். அயர்லாந்தில் நிறைய நிலங்கள்  இருந்தன. ஆனால், ராலேவின் விருப்பம் ஒன்றுதான். சாகசங்கள் நிறைந்த கடல் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும், இதுவரை யாரும் கண்டிராத புதிய இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் அது.

அவருடைய கனவு 1584-ம் ஆண்டு நிறைவேறியது. ஒருநாள் எலிசபெத் மகாராணியிடம் இருந்து கடிதம் வந்தது. ‘இதுவரை ஆக்கிரமிக்கப்படாத எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம். கிடைப்பதில் ஐந்தில் ஒரு பகுதியை ராலே வைத்துக்கொள்ளலாம்’ என்றது அந்த அரசாங்க உத்தரவு. கப்பல்கள், ஆட்கள் என அனைத்தும் ராணியிடம் இருந்து வந்துவிடும். பிறகென்ன கவலை?

உற்சாகமாகக் கிளம்பினார் ராலே. அவரின் கனவு, தென் அமெரிக்கா. குறிப்பாக, எல் டொராடோ. அதிலும் குறிப்பாக ஆண்டிஸ் மலைத்தொடர்தான் அவருடைய இலக்கு. இந்த மலைப்பகுதியில் சில பழங்குடிகள் வசிந்துவந்தார்கள். அவர்களுக்கு வெளியுலகம் தெரியாது. நீண்ட மலைத்தொடர் என்பதால், அதைக் கடந்து வருவது கஷ்டம். இந்தப் பழங்குடிகள், மலை மலையாகத் தங்கம் வைத்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது, எங்கிருந்து வந்துசேர்ந்தது? ஒருவருக்கும் தெரியாது. ஆனால், மலை அளவுக்கு தங்கம் அவர்களிடம் இருக்கிறது.

இந்தப் பழங்குடிகள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது ஆற்றங்கரைக்கு வருவார்கள். தங்கத்தைப் பொடியாக்கி, புதிய தலைவரின் தலை முதல் பாதம் வரை பூசிவிடுவார்கள். அவர் உடல் முழுக்க தங்கம் மினுமினுக்கும். தங்களிடம் உள்ள தங்கக் கட்டிகளை ஆற்றில் வீசுவார்கள். இப்படி வீசினால், அது ஆற்றில் உள்ள கடவுளுக்குப் போய்ச்சேரும் என்பது அவர்கள் நம்பிக்கை.

ஆற்றில் போடும் அளவுக்கு தங்கம் இருக்கிறதென்றால், அதைப் பொடியாக்கி உடல் முழுக்க பூசிக்கொள்ள முடிகிறதென்றால், எவ்வளவு தங்கம் அவர்களிடம் இருக்க வேண்டும்! ராலேவின் திட்டம் தென் அமெரிக்காவுக்குச் செல்வது; அங்கே ஒரு காலனியை பிரிட்டனுக்காக உருவாக்குவது; அப்படியே தங்கமலையைக் கண்டுபிடித்து, முடிந்த அளவுக்கு பெயர்த்துக் கையோடு கொண்டுவருவது. பிறகு, என்னை மிஞ்ச இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?

கடல் அவரை மயக்கியது. உற்சாகமாகத் தன் குழுவினருடன் கப்பலில் ஏறிக்கொண்டார். வரும்போது தங்கத்தைக் கொண்டுவர இந்தக் கப்பல்கள் போதுமா என்ற கவலை மட்டும்தான் அவருக்கு. இதோ, கப்பல் கரையைத் தொட்டதும் ‘சரித்திரம் படைத்துவிடுவேன்' என்றுதான் நம்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்றதும் வென்றதும்! - 17

கப்பல் கரையைத் தொட்டது. ஒருமுறை அல்ல, இரண்டு முறை. மீண்டும் ஒருமுறை போனார். வட கரோலினா என இன்று அழைக்கப்படும் பகுதியை ஆர்வத்துடன் சுற்றிவந்து பார்வையிட்டார். ஃபுளோரிடா வரை வந்தார். இந்தப் பகுதிக்கு இதுவரை யாரும் வந்தது இல்லை என்பதைக் கேள்விப்பட்ட ராலே, வர்ஜீனியா என்று அதற்குப் பெயர்வைத்தார். ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்து, அதற்குப்பெயரும் சூட்டிவிட்டோம். அதுவும் மகாராணியின் பெயரையே (விர்ஜின் ராணி என்று எலிசபெத்தை அழைப்பார்கள்) வைத்துவிட்டோம் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி.

அமெரிக்காவை பிரிட்டனின் காலனியாக மாற்றிவிடலாம் என அப்போதே அவருக்கு தோன்றிவிட்டது. காலி இடங்களையும் பழங்குடிகள் வசிக்கும் இடங்களையும் ஆக்கிரமித்துக்கொள்வது தவறில்லை என்பது அவர் நம்பிக்கை. எல் டொராடோவை அவர் தேடியதும் இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஆனால் என்ன செய்வது? எல் டொராடோ கிடைத்தால்தானே...

தொடர்ந்து கப்பலில் மிதந்துகொண்டே இருந்தார் ராலே. எப்படியாவது கண்ணில் தங்கமலை பட்டுவிடாதா எனத் தேடி அலைந்தார். வெனிசுலாவில் எல் டொராடோ இருக்கிறது என்று யாரோ சொல்ல, அங்கே போனார். ஓரினோகோ என்னும் ஆற்றைச் சுற்றிச் சுற்றி வந்தார். 400 மைல் தொலைவு பாயும் நீளமான ஆறு அது. கடலையும் மழையையும் புயலையும்தான் பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் மகாராணியும் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘என்ன ஆச்சு வால்டர் ராலே? தங்கம் கிடைத்ததா இல்லையா? உனக்காக கப்பல்களையும் ஆட்களையும் அனுப்பி என்ன பலன்?' எனக் கேட்டார்.

‘‘இதோ கிடைத்துவிடும்... அதோ இருக்கிறது' என்று சாக்குப்போக்கு சொல்ல ஆரம்பித்தார் ராலே. ஆனால், அவருக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை போக ஆரம்பித்துவிட்டது.

பலர் கூட்டாகச் சேர்ந்து தேடினார்கள். சிலர் கடல் வழியாகவும், சிலர் நிலம் வழியாகவும் சென்றார்கள். ‘கிடைத்தால்  எனக்குத்தான்' எனச்  சண்டையிட்டுக்கொண்டார்கள். மற்றவர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே பலரைக் கொல்லவும் செய்தார்கள். வாழ்நாள் முழுக்க தேடித் தேடி அலுத்துப்போனார்கள்.

‘எல் டொராடோ' கிடைக்காமல் போனதில் ராலேவுக்கு வருத்தம்.  அவர் இறுதி வரை நம்பிக்கை இழக்கவேயில்லை. இன்னும் பல கடல்களைக் கடந்துபோனால் ஒருவேளை கிடைக்குமோ?  இப்படியே பயணம் மேல் பயணம் சென்றுகொண்டிருந்தால், ஒருநாள் அகப்படும் எனச் சமாதானமும் செய்துகொண்டார். அவர் எதிர்பார்ப்பு இறுதிவரை நிறைவேறவில்லை

சென்றதும் வென்றதும்! - 17

ஆனால், எதிர்பாராவிதமாகப் பல விஷயங்கள் நடந்துவிட்டன. ராலேவை ஆதரித்துவந்த எலிசபெத் ராணி, அவருக்கு எதிராகத் திரும்பினார். எலிசபெத்தின் மரணத்துக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த முதலாம் ஜேம்ஸ் ராலேவை வெறுத்ததோடு, அவரைச் சிறையிலும் தள்ளினார். இத்துடன் விட்டிருந்தாலும் பரவாயில்லை. மரண தண்டனையும் விதித்துவிட்டார். 29 அக்டோபர், 1618 அன்று ராலே இறந்துபோனார்.

வால்டர் ராலே இன்று எதற்காக நினைவுகொள்ளப்படுகிறார் தெரியுமா? எங்கெங்கோ சென்று அவர் இங்கிலாந்துக்குக் கொண்டுவந்து சேர்த்த அல்லது அறிமுகப்படுத்திய இரண்டு விஷயங்களுக்காக. அவை, புகையிலை மற்றும் உருளைக்கிழங்கு.

ஒரு முக்கியமான விஷயத்தைக் கடைசி வரை ராலே தெரிந்துகொள்ளவே இல்லை. அது, எல் டொராடோ என்பது முழுக்க முழுக்க ஒரு கற்பனை. ‘தங்கமலை, என்று ஒன்று இல்லவே இல்லை, என்பதைத்தான்.

(பயணம் தொடரும்...)