Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 18

சென்றதும் வென்றதும்! - 18
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 18

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 18

"ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?'’

-அமெரிகோ வெஸ்புகியை அறிந்தவர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை அவரிடம் ஒரு முறையாவது கேட்டிருப்பார்கள். ஒரு வேலையில் அப்போதுதான் சேர்ந்திருப்பார். அடுத்த முறை பார்க்கும்போது, இன்னொரு வேலையில் இருப்பார். “நகைக் கடையில் சேர்ந்திருக்கிறேன்'' என்பார். பிறகு, “அது சரியில்லை, இப்போது சொந்த பிசினஸ் செய்கிறேன்'' என்பார்.

இப்படி அங்கே இங்கே எனச் சுற்றித் திரிந்தவருக்கு 45 வயதில் கடல் மீது ஆர்வம் வந்தது. இனி கடல்தான் என் வாழ்க்கை என்று அவர் அறிவித்தபோது, நண்பர்கள் நம்பவில்லை. இன்னும் சில மாதங்களில் கப்பலை மறந்துவிட்டு வேறு  வேலையில் இருப்பார் என்றார்கள். அதைப்  பொய்யாக்கினார் அமெரிகோ. கடல் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமானது. வெகு சீக்கிரத்திலேயே முக்கியமான கடல் பயணியாக மக்களிடம் அங்கீகாரம் பெற்றார்.

கரீபியன் தீவுகள் அமெரிகோவைக் கவர்ந்தன. சுற்றிப் பார்க்க வேண்டும் என்று தொடங்கிய ஆர்வம், நாள்பட நாள்பட அதிகரித் தது. கிழக்கிந்தியத் தீவுகள் குறித்தும் இந்தியா குறித்தும் இதுவரை கண்டு பிடிக்கப்படாத பகுதிகள் குறித்தும் கனவு காண ஆரம்பித்தார்.

அமெரிகோ, கடலை நேசிக்க ஆரம்பித்தது    1499-ம் ஆண்டு. அதாவது, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தாகச் சொல்லப்படும் 1492-ம் ஆண்டுக்குப் பிறகு.  கொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்காவை அல்ல, பஹாமாஸ் தீவுகளைத்தான். அதையே அமெரிக்கா என்று நினைத்திருந்தார்.

கொலம்பஸின் தவறைச் சுட்டிக்காட்டியவர்களில் முதன்மையானவர், அமெரிகோ. 1501-ம் ஆண்டு,  தற்போதைய தென் அமெரிக்காவில் உள்ள ‘பேடகோனியா' என்னும் பகுதிக்கு அமெரிகோ வந்து சேர்ந்தார். ரியோ டி ஜெனிரோ பகுதியையும் பார்த்தார். இந்தப் பகுதிகள் ஆசியாவில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்ததைக் கண்டார். இந்தப் பகுதிகள், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இதுவரை அறிமுகமாகாதவை என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்.

‘கொலம்பஸ் கண்டடைந்தது இந்த அமெரிக்காவை அல்ல' என்று தன் கண்டுபிடிப்பை அமெரிகோ சொன்னபோது உலகம் திகைத்துப்போனது. ‘இப்போதுதான் கப்பலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஊர், பேர் தெரியாத ஒரு மாலுமி, கொலம்பஸையே தவறு என்று சொல்கிறாரே? கொலம்பஸைக் காட்டிலும் திறமையானவரா இவர்? அவரையே மறுத்துப் பேசும் அளவுக்கு இவர் வளர்ந்துவிட்டாரா?' என்று நினைத்தார்கள்.

சென்றதும் வென்றதும்! - 18

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமெரிகோ உறுதியாக இருந்தார். ‘என்னை நம்புங்கள், கொலம்பஸ் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவர் கிழக்கிந்தியத் தீவுகளுக்கு மட்டுமல்ல, ஆசியாவுக்கே சென்றது இல்லை’ என்று சாதித்தார்.‘அமெரிக்கா' என்று இன்று அழைக்கப்படும் பிரதேசம் தனி கண்டமல்ல; அது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது என்று அறிவித்தார் அமெரிகோ. வட அமெரிக்கா என்பது தனியொரு பிரதேசம். தென் அமெரிக்கா தனி. இது கொலம்பஸுக்குத் தெரியவில்லை. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற  நாட்டில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை என்பதை அமெரிகோ புரியவைத்தார்.

அமெரிகோ இத்தாலியில் பிறந்தவர். ஆனால், அவருடைய கடல் பயணங்களை ஆதரித்தவர், ஸ்பெயின் அரசரான ஃபெர்டினாண்ட். கொலம்பஸுக்கே சவால்விடும் அமெரிகோவால் நிச்சயம் சாதனைகளைப் படைக்க முடியும் என்று அரசர் நம்பினார். கப்பலைச் செலுத்த கற்றுத்தரும் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி, அமெரிகோவை அதற்கு பொறுப்பாக்கினார். அமெரிகோவின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்தது. தன்னுடைய கடல் பயணங்கள் மூலம், புதிய விஷயங்களைக் கற்று, மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அமெரிகோவை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பவும் மதிக்கவும் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அமெரிகோவை விட்டால், இந்த உலகைப் புரிந்துகொள்ள வேறு வழியே இல்லை என்னும் அளவுக்கு உயர்வான இடத்தை அளித்து மரியாதை செலுத்தினார்கள். அமெரிகோவும் புதிது புதிதாகப் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். வரைபடங்களைத் திருத்தினார். புதிய வரைபடங்களை உருவாக்கினார். கடல் பயணத்தை மேலும் துல்லியமாக, அறிவியல்பூர்வமாக மாற்றமுடியுமா என்று ஆராய்ந்தார்.

பயணம் மேற்கொள்ளும்போதே, தன்னுடைய ஐரோப்பிய நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதினார் அமெரிகோ. தான் கண்ட புதிய பிரதேசங்களை அதில் விவரித்திருந்தார். பழங்குடி மக்களின் நடை, உடை, உணவு வழக்கங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அவர்களுடைய கடவுள் யார், அந்தக் கடவுளை எப்படி வழிபடுகிறார்கள் என்பதையும் எழுதினார். அமெரிகோ எழுதிய கடிதங்களும் கட்டுரைகளும் திரட்டப்பட்டு புத்தகங்களாக வெளிவரத் தொடங்கின. அமெரிகோவின் புகழ் மேலும் பரவியது.

1507-ம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று வெளிவந்த வரைபடத்தில்தான் முதல் முறையாக அமெரிக்கா என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆம், கொலம்பஸ் அல்ல அமெரிகோவே புதிய கண்டத்தைக் கண்டுபிடித்தார் என்பதால், அவர் பெயரை அந்தக் கண்டத்துக்குச் சூட்டுவதுதான் சரியானது என்று இந்த வரைபடத்தை உருவாக்கிய ஜெர்மானியர் ஒருவர் நினைத்தார். அதுவரை அந்தப் பிரதேசங்களுக்கு ‘புதிய உலகம்' என்னும் பெயர்தான் இருந்தது. சிலர் வெவ்வேறு பெயர்களை வைத்திருந்தார்கள்.

சென்றதும் வென்றதும்! - 18

அந்தப் புதிய உலகத்தை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் விவரித்தவர், அமெரிகோ வெஸ்புகி என்பதை உலகம் ஏற்றுக்கொண்டது. அமெரிக்கா என்பது ஒரு கண்டமல்ல, இரண்டு கண்டங்கள் என்பதையும் அவரே கண்டுபிடித்தார். எனவே, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று இரு பெயர்களில் அந்தப் புதிய உலகம் பிரிக்கப்பட்டது.

கொலம்பஸின் தவறைக் கண்டறிந்தவர், அந்தத் தவறைச் சரிசெய்தவர் என்னும் பெயரும் அமெரிகோவுக்கு வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகும் அமெரிகோ தொடர்ந்து பல பயணங்களை மேற்கொண்டார் என்றாலும், அவை பற்றிய செய்திகள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ‘ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?’ என்று அதற்குப் பிறகு ஒருவரும் அமெரிகோவைப் பார்த்து கேட்டிருக்க மாட்டார்கள்.

(பயணம் தொடரும்)