Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 19

சென்றதும் வென்றதும்! - 19
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 19

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 19

உலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்

Published:Updated:
சென்றதும் வென்றதும்! - 19
பிரீமியம் ஸ்டோரி
சென்றதும் வென்றதும்! - 19
சென்றதும் வென்றதும்! - 19

பார்த்தலோமியா டயஸ்

புகழ்பெற்ற கடல் பயணியாக மாறுவதற்கு முன்பு போர்ச்சுகீசியரான பார்த்தலோமியா டயஸ் அரண்மனைக்குச் சொந்தமான பொருள்களைச் சேமித்துவைக்கும் அறையை நிர்வாகம் செய்யும் வேலையைச் செய்துவந்தார். போர்ச்சுகீசிய அரசர் இரண்டாம் ஜான், டயஸுக்கு இந்த வேலையை அளித்திருந்தார்.

‘எவ்வளவு காலத்துக்குதான் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது?’ இதெல்லாம் ஒரு வேலையா? என்னும் சலிப்பு வந்தபோது, வேறொரு வேலையை டயஸுக்கு அளித்தார் அரசர். கப்பலில் ஏறி தூர நாடுகளுக்குச் செல்ல வேண்டும்.

‘இதற்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சுறுசுறுப்பாக ஒப்புக்கொண்டார் டயஸ். ஆசியா செல்வதற்கு புதிய நீர் வழிப் பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு அளிக்கப்பட்ட பணி. உற்சாகம் கொப்புளிக்க கப்பலில் ஏறி அமர்ந்தார் டயஸ். அதற்கு முன்பு அவர் கப்பலில் ஏறி இருக்கிறாரா என்பதுகூட யாருக்கும் தெரியாது.

அது 1486-ம் ஆண்டு. இயற்கை வளங்கள் கொழிக்கும் ஆசியாவைத் தேடி 15 முதல் 17-ம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ‘நீங்கள் செல்ல விரும்பும் நாடு எது?’ என்று எந்த ஐரோப்பியரைக் கேட்டாலும், இந்தியா அல்லது ஆசியா என்றுதான் சொல்வார். அனைவருக்கும் அது ஒரு கனவுப் பிரதேசம்.

அப்போது... துருக்கி (அன்றைய கான்ஸ்டான்டினோபிள்), இரான், ஆப்கானிஸ்தான் வழியாக நிலம் மார்க்கமாக ஐரோப்பியர்கள் ஆசியாவை அடைவது வழக்கம். இந்த நிலைமை 1453-ம் ஆண்டு மாறியது. 1,500 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரோமப் பேரரசு முடிவுக்கு வந்து, ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம் வந்தது. புதிய ஆட்சியாளர்களோடு மோதல் ஏற்படாமல் துருக்கியைக் கடப்பது சாத்தியம் இல்லை என்பதால், ஐரோப்பியர்கள் நிலத்தை மறந்துவிட்டு, கடல் வழியாக துருக்கியைத் தொடாமல் வேறு புதிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று தேட ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவர்தான் பார்த்தலோமியா டயஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்றதும் வென்றதும்! - 19

புதிய நீர் வழியை டயஸ் கண்டுபிடித்துவிட்டால், வணிகர்களை அங்கே அனுப்பிவைக்க முடியும். நிறைய பண்ட பரிமாற்றங்கள் செய்யலாம், செல்வம் சேர்க்கலாம் என்று அரசர் நம்பினார். அதனால்தான் மூன்று கப்பல்களையும் தேவையான அளவுக்கு ஆட்களையும் அளித்தார். டயஸுக்கு அளிக்கப்பட்ட பணி, ஆப்பிரிக்காவைச் சுற்றிவருவது. ஆசியாவின் முனையை அடைந்து சுற்றிவர வேண்டும். இது சாத்தியப்பட்டால், அங்கிருந்து ஆசியா செல்வது சாத்தியமாகிவிடும். ஆப்பிரிக்கா வழியாக ஆசியா செல்வது சாத்தியம்தான் என்பதை டயஸ் நிரூபிக்க வேண்டும்.

அது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், டயஸ் உற்சாகமாக இருந்தார். கையில் அரசர் கொடுத்த வரைபடம் இருந்தது. ‘கவலைப்படாதீர்கள். போன வேகத்தில் பணியை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்’ என்று கப்பல் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்தார் டயஸ்.

ஒவ்வொரு ஆப்பிரிக்க துறைமுகமாகக் கடந்து சென்றார்கள். பெரும்பாலும் பழங்குடி மக்களே அங்கு வாழ்ந்துவந்தனர். அவர்களிடம் பழகினார் டயஸ். அவர்களிடம் இருந்து பரிசுகள் கிடைத்தன. ஆப்பிரிக்காவின் முனையை கண்டடைந்துவிட முடியும் என்று நம்பினார்.

ஜனவரி 1488-ல் டயஸின் கப்பல்கள் தென் ஆப்பிரிக்காவை அடைந்தன. ‘இதோ, இன்னும் கொஞ்சம் தூரம்தான்’ என்று டயஸ் படபடபடத்தார். அப்போது பார்த்து பெரும் மழையும் சூறாவளியும் தொடங்கின.  டயஸே மிரண்டுபோனார். நிலத்தில் பெய்யும் மழை வேறு, கடலில் பெய்யும் மழை வேறு. வீட்டுக்குள் ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டு சுகமாக தூங்கிவிட முடியாது. கடலில், சின்ன மழை பெய்தாலே உடல் நடுங்கிவிடும். சூறாவளி என்றால் கேட்கவே வேண்டாம். ‘உஸ், உஸ்’ என்று அடித்த பெரும் காற்றில் கப்பல்கள் தடுமாறின. அந்த நேரம் பார்த்து டயஸுக்கு இன்னொரு விஷயமும் தெரியவந்தது. அவரிடம் இருந்த வரைபடம் தவறானது. மலை என்று குறிப்பிட்ட இடத்தில் மலை இல்லை. நிலம் என்று குறிப்பிட்ட பகுதியில் கடல்தான் இருந்தது. இதென்ன சோதனை என்று வரைபடத்தை ஓரம் கட்டிவிட்டு, சுயமாக முடிவெடுக்க ஆரம்பித்தார்.

ஓரளவுக்கு வழியை யூகித்து, ‘தெற்கு நோக்கி கப்பலைத் திருப்புங்கள்’ என்று உத்தரவிட்டார். ஆனால், பணியாளர்களுக்கு நடுக்கம். தப்பான வரைபடத்தையும் தப்பான நபரையும் நம்பி வந்துவிட்டோமே என்று கவலைப்பட்டார்கள்.

‘‘நான் சொல்வதைக் கேட்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை. எப்படியாவது உங்களை மீண்டும் போர்ச்சுகல் அழைத்துச் சென்றுவிடுவேன்’’ என்று சமாதானம் செய்தார்.

சென்றதும் வென்றதும்! - 19

பிப்ரவரி 1488 வாக்கில் ஒரு நிலப் பகுதி தெரிந்தது. இங்கும் பழங்குடியினர் இருந்தனர்.  இவர்களும் வரவேற்று பரிசு தருவார்கள் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தார் டயஸ். ஆனால், எங்கிருந்து பாய்ந்து வருகின்றன என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கற்கள் அடுத்தடுத்து தாக்கின. மிரண்டுபோன டயஸ், பதிலுக்குத் தாக்குதல் நடத்தி பழங்குடிகளை வீழ்த்தினார்.

அடுத்த பிரச்னை, கப்பலில் உணவுப் பொருள்கள் குறைய ஆரம்பித்தன.  கப்பல் பணியாளர்கள் பலர் ஒன்றுதிரண்டு டயஸுக்கு எதிராகக் கொடிபிடித்தார்கள். ‘‘இனியும் உங்களோடு சேர்ந்திருக்க மாட்டோம். உங்கள் கட்டளைக்குக் கட்டுப்பட மாட்டோம். உதவாத வரைபடத்தை வைத்துக்கொண்டு இன்னும் எவ்வளவு ஆபத்தைதான் சந்திக்க முடியும்?’’ என்று  கோபம்கொண்டார்கள்.

ஒருவழியாக, ‘இன்னும் சில தினங்கள் பார்ப்போம். முடியாவிட்டால் திரும்பிவிடலாம்’ என்று உடன்படிக்கை செய்துகொண்டு முன்னேறினார் டயஸ். நல்லவேளையாக, சில தினங்களில் ஆப்பிரிக்காவின் முனையை வந்தடைந்தார்கள். அதுதான் ஆப்பிரிக்காவின் முனை என்று டயஸ் ஏற்றுக்கொண்டார். ‘நம் பயணம் முடிவடைந்துவிட்டது’ என்று அறிவித்து, கப்பலை போர்ச்சுகல்  நோக்கித் திருப்பினார். ‘நாம் உண்மையிலேயே சரியான இடத்தை வந்தடைந்துவிட்டோமா?’  என்ற குழப்பம் டயஸுக்கு இறுதிவரை இருந்தது.

15 மாதங்கள் கழித்து, போர்ச்சுகலின் தலைநகரம் லிஸ்பனை அடைந்தபோது, ஊரே திரண்டுவந்து டயஸை வரவேற்றது. ‘நீங்கள் உண்மையிலேயே பெரிய சாதனையாளர்தான்’ என்று வாழ்த்தினார்கள். கிட்டத்தட்ட 16,000 மைல்களை டயஸின் கப்பல்கள் கடந்திருந்தன. ஆனால், அரசரிடம் உரையாடும்போது, ‘நான் ஆப்பிரிக்கா சென்றது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிட்டேனா என்று தெரியவில்லை’ என்று டயஸ் நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

சென்றதும் வென்றதும்! - 19

அரசருக்கு வருத்தம்தான். ஆனால், கோபப்படவில்லை. ‘‘உங்கள் பயணம் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அடுத்தடுத்த பயணங்களில் நிச்சயம் ஆசியாவை இதே வழியில் சென்று அடைந்துவிட முடியும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியதால், நீங்கள் கண்டுபிடித்த நிலப் பகுதிக்கு நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்று பெயர் சூட்டுகிறேன்’’ என்று அறிவித்தார். அது,  அந்தப் பெயராலே இன்றும் அழைக்கப்படுகிறது.

டயஸுக்கு இன்னொரு வேலையும் கொடுக்கப்பட்டது. அடுத்த பயணத்துக்குச் செல்ல இருந்த வேறொரு பயணிக்காக, கப்பல்களை உருவாக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அதில் ஈடுபடுமாறு டயஸை அரசர் கேட்டுக்கொண்டார். உற்சாகமாக உதவிகள் செய்தார் டயஸ். அந்த இன்னொரு பயணி, டயஸ் ஆரம்பித்து வைத்த அதே வழித்தடத்தில் சென்று, இந்தியாவை வெற்றிகரமாக வந்தடைந்தார். அவர்தான் வாஸ்கோ ட காமா.

(பயணம் தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism