Published:Updated:

சென்றதும் வென்றதும்! - 21

சென்றதும் வென்றதும்! - 21
பிரீமியம் ஸ்டோரி
News
சென்றதும் வென்றதும்! - 21

உலகை மாற்றிய கடல் பயணங்கள் - வில்லியம் பிபிமருதன், ஒவியங்கள் : ஷண்முகவேல்

சென்றதும் வென்றதும்! - 21

மார்கோ போலோ, வாஸ்கோ ட காமா, கொலம்பஸ் போல இதுவரை நாம் பார்த்த பயணிகள் எல்லோரும் தீவிரமான ஒரு தேடலுடன் கடல்களைத் தாண்டிச் சென்றவர்கள். அவர்கள் புதிய இடங்களைத் தேடினார்கள். அல்லது, பழைய இடங்களுக்குச் செல்ல புதிய வழிகளைத் தேடினார்கள். சிலர் தங்கம் தேடினார்கள். பலர் வாசனைப் பொருள்களைத் தேடினார்கள். சார்லஸ் டார்வின் போன்றவர்கள் புதிய உயிர்களைத் தேடும் ஆர்வத்துடன் கடல் கடந்து சென்றார்கள்.
வில்லியம் பிபி என்பவரும் ஒரு கடல் பயணிதான். ஆனால், இவரது தேடல் வேறுபட்டது.

சார்லஸ் வில்லியம் பிபி, பிறந்தது நியூயார்க்கில். பள்ளி, கல்லூரி, பாடம், பரீட்சை என்றுதான் இவரது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. திடீரென கல்லூரியைவிட்டு நின்றுவிட்டார். யார் சொல்லியும் கேட்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘படிக்காவிட்டால், பன்றிதான் மேய்க்க வேண்டும்’’ என்றதற்கு, ‘`ஆமாம்! அதற்காகத்தான் நான் படிப்பையே விட்டேன். பன்றி, பறவை, இன்ன பிற விலங்குகளை மேய்க்கப்போகிறேன்’’ என்றார் பிபி.

பாடப்புத்தகங்களைப் பரணில் ஏற்றிவிட்டு அவர் நேராக சென்றது, நியூயார்க் உயிரியல் பூங்காவுக்கு. அங்கே பறவைகளைப் பராமரிக்கும் வேலையில் சேர்ந்தார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கை மாறிவிட்டது. நாள் முழுக்க பறவைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ‘பறவைகளில்தான் எத்தனை எத்தனை வகைகள்! எத்தனை எத்தனை வண்ணங்கள்! அடடா, ஒரு கொக்கின் கண்ணை மட்டும் ஒரு நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டிருக்கலாமே’ எனப் பரவசமாக கவனிப்பார்.

காட்டுக்கோழிப் பறவை, பிபியை மிகவும் கவர்ந்துவிட்டது. இதில், எத்தனை பிரிவுகள் இருக்கும்..? எங்கெல்லாம் பரவியிருக்கும் என்று தேடத் தொடங்கினார். காட்டுக்கோழிகள் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

சென்றதும் வென்றதும்! - 21

அந்த வனவிலங்குப் பூங்காவில் சில புதுமையான மாற்றங்களையும் செய்தார் பிபி. பறவைகளைக் கம்பி  கூண்டுகளில் போட்டு மூடிவிடுவது சரியல்ல என்று நினைத்தார் பிபி. வனவிலங்குப் பூங்கா என்பது சிறைச்சாலை அல்ல. மக்கள் பறவைகளைக் காண்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு பறவைகள் இன்பமாக இருப்பதும் முக்கியம் என நினைத்தார். எனவே, அந்த இடத்தை ஒரு காடு போல மாற்றி அமைத்தார். மரங்கள், செடிகள், வண்ண மலர்கள் நிறைந்த பகுதிகளில் பறவைகளை இடம் மாற்றினார். முன்பு இருந்ததைக் காட்டிலும் சுதந்திரமாக இருக்கும் உணர்வுடனும் பறவைகள் வாழமுடியும் என்று அவர் நம்பினார்.

1900-ம் ஆண்டு நேரத்தில், பிபி தனது சுற்றுப் பயணங்களை ஆரம்பித்தார். அமெரிக்காவின் கிழக்கு பகுதி, கனடா என்று விரிவாகச் சுற்றிவர ஆரம்பித்தார். அவருக்கு உயிரியல் பூங்காவில் நல்ல பெயர் கிடைத்திருந்தது. எனவே, பிபியின் பயண ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார்கள். சிலர் மட்டும் முணுமுணுத்தனர். ‘இப்படி அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஒருவரை எதற்காக இங்கே பணியில் வைத்துக்கொள்ள வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினர்.

பிபி எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. உலகில் உள்ள பறவைகளை எல்லாவற்றையும்  பார்த்துவிடும் துடிப்பு அவரிடம் இருந்தது. முதலில், அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து லண்டன் சென்றார். தேவைப்படும் பொருள்களை எல்லாம் வாங்கி நிரப்பிக்கொண்டு மத்தியத் தரைக்கடலைக் கடந்து எகிப்து சென்றார். சூயஸ் கால்வாய் வழியாக இந்தப் பயணம் அமைந்தது. அங்கிருந்து இலங்கை. இந்தமுறை இந்தியப் பெருங்கடலைக் கடக்கவேண்டியிருந்தது.

சரி, இங்கெல்லாம் சென்று என்ன செய்தார்? கோழி, கொக்கு, கிளி என்று தேடித் திரிந்தார். பார்க்கும் பறவைகளைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டார். நிறைய குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.

இலங்கையில் இருந்து கொல்கத்தா வந்தார். இமயமலையில் மட்டுமே வாழும் சில அதிசய பறவைகளை ஆராய்ந்தார். அடுத்து, இந்தோனேஷியா. சின்னச்சின்ன தீவுகளை எல்லாம் கப்பலில் சென்று பார்த்தார். மெக்ஸிகோ சென்று லவ் பேர்ட்ஸ் வகை கிளிகள் எப்படி வாழ்கின்றன என்று ஆராய்ந்து ஒரு புத்தகத்தையும் எழுதினார். வகை வகையான பறவைகளை ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடமுடியுமா? எனவே, அடுத்தடுத்து எழுத ஆரம்பித்தார்.

காட்டில் வாழும் பிராணிகள் பற்றி ஒரு புத்தகம், கலாபகஸ் தீவுகள் பற்றி ஒரு புத்தகம், காட்டுக்கோழிகள் பற்றி ஒரு புத்தகம். காட்டில் வாழும் மற்ற விலங்குகள் பற்றி ஒரு புத்தகம், காடு பற்றியே ஒரு புத்தகம் எனச்  சொல்லிக்கொண்டே போகலாம்.  பறவையியல் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் புத்தகங்கள் தொடங்கி,  வேறு பொதுமக்களும் படிக்கக்கூடிய எளிய புத்தகங்கள் வரை எழுதினார்.

கலாபகஸ் தீவுகள் அவர் வாழ்வில் இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்தின. பசிஃபிக் கடலில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தீவுகளுக்குச் சென்றபோது, பிபிக்கு ஒரு யோசனை தோன்றியது. கடல் பயணங்கள் மூலமாக பலவிதமான உயிர்களைப் பார்க்க முடிந்தது. பலவிதமான புதிய விஷயங்களைக் கற்க முடிந்தது. ஆனால், கடலுக்குள் ஏராளமான உயிர்கள் வாழ்கின்றன. அவற்றை எப்படித் தெரிந்துகொள்வது? கண்களுக்குத் தெரியும் பறவைகள், விலங்குகள் போலவே கடலுக்குள் வசிக்கும் ஜீவராசிகளும் முக்கியம் அல்லவா?

ஒரு நாள் கடலுக்குள் குதித்துவிட்டார் பிபி. அடி ஆழம் வரை சென்று பார்த்தே தீருவேன் என்று அடம்பிடித்து உள்ளே பாய்ந்தவர், பிரமித்துவிட்டார். இதுவரை அவர் காணாத வித்தியாசமான உலகம் கடலுக்கு அடியில் விரிந்து கிடந்தது.

பூச்சியா, செடியா, மீனா என்றே வித்தியாசம் காணமுடியாத அளவுக்கு பல வகையான உயிர்கள் அடி ஆழத்தில் வாழ்ந்தன. பறவைகள், விலங்குகள்  போலவே கடல் உயிர்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்தார் பிபி.

இப்போது போன்று முதுகில் மாட்டிக்கொள்ளும் நவீன ஆக்ஸிஜன் சிலிண்டர் அப்போது இல்லை. எனவே, தண்ணீர் புகாத பெரிய கூண்டு செய்து, உள்ளே காற்றை நிரப்பி, வெளியில் பார்க்க கண்ணாடிவைத்து உள்ளே இறக்கிவிடுவார்கள்.
அந்தக் கூண்டு வழியே ஜீவராசிகளைப் பார்க்க வேண்டும். அவசரம் என்றால் வெளியில் இருப்பவர்களை அழைக்க ஒரு டெலிபோன் ஒயரும் இருக்கும்.

எதற்கு வேலை மெனக்கெட்டு இவ்வளவு ஆபத்தான காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று பலரும் தடுத்துப் பார்த்தார்கள். பிபி கேட்டால்தானே..!

கல்லூரி படிப்பையே முடிக்காத பிபி, இன்று ஒரு பல்கலைக்கழகம். முதல்முறையாக கடலின் ஆழத்துக்குச்  சென்று ஆய்வுசெய்தவராக புகழப்படுகிறார். அவருடைய பல ஆய்வுகள் சரியானவை என்று அறிவியல் உலகம் பாராட்டுகிறது.
கடலில் பயணம் செய்து சாதனை படைத்தவர்கள் மத்தியில், கடலுக்குள் குதித்து பயணம் செய்த வில்லியம் பிபி வித்தியாசமானவர்தானே!

(பயணம் தொடரும்...) 

சென்றதும் வென்றதும்! - 21

* மொத்தம் 800 கட்டுரைகளையும் 24 புத்தகங்களையும் பிபி எழுதி இருக்கிறார்.

 *காய்ச்சல், தொற்றுநோய் என்று ஏராளமான தொல்லைகளை பிபி தன்னுடைய    பயணங்களின்போது  அனுபவித்தார்.

* முதல் உலகப் போரின்போது, அமெரிக்க விமானிகளுக்குப் பயிற்சி அளித்தார்.

*80-வது வயது வரை சுறுசுறுப்பாக இருந்தார். உற்சாகமாக மரம்கூட ஏறுவார்.

*அறிவியல் கட்டுரைகளை எளிமையாக மக்களுக்குப் புரியும்படி எழுதியவர்களில் முதன்மையானவர் பிபி.