Published:Updated:

குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை: அரசும் பெற்றோரும் செய்ய வேண்டியவை! #ChildAbuse

குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை: அரசும் பெற்றோரும் செய்ய வேண்டியவை! #ChildAbuse
குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை: அரசும் பெற்றோரும் செய்ய வேண்டியவை! #ChildAbuse

குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை: அரசும் பெற்றோரும் செய்ய வேண்டியவை! #ChildAbuse

சேலத்தில் ஒரு சிறுமி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி, தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுமியை அவளின் சித்தப்பா, பல நாள்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். குழந்தைகள் மீதான இந்தக் கொடூரம், நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் செய்தியைப் படித்ததும் மனம் கொந்தளித்து. சிறிது நேரத்தில் வேறு விஷயங்களுக்குத் தாவிவிடுகிறோம்.

 குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் செலுத்திய குற்றவாளிக்குச் சட்டம் வழியில் தண்டனை கொடுத்து பதில் அளிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தத் தவறுமே செய்யாத குழந்தைக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்? குறைந்தபட்சம் அதுபோல இன்னொரு குழந்தை பாதிக்கப்படாதிருக்க என்ன செய்யலாம் என்பதை நோக்கிப் பயணிக்கலாம். அதுகுறித்த ஆலோசனைகளை வழங்குகிறார், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர், `தோழமை' தேவநேயன்.

``குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் உடனடித் தீர்வுகள் முக்கியம். அதேபோல, நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியதும் அவசியம். அந்த வகையில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் நம்மை ஆளும் அரசு என இரண்டு தரப்பிலும் செய்யவேண்டியவை பற்றிப் பார்ப்போம்'' என்கிறார் தேவநேயன்.

பெற்றோர்:

1. குழந்தைகளை நம்ப வேண்டும்: `பக்கத்து வீட்டு மாமா இங்கே தொட்டார், இங்கே கிள்ளினார்' எனச் சொல்லும்போது, `அவர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார்' எனச் சொல்வது மிகவும் தவறு. குழந்தை சொல்வது உண்மையா, பொய்யா என விசாரித்துக் கண்டறிய வேண்டும். உண்மையாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக அதற்கான தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு நொடி தாமதமும் கூடாது.

2. குழந்தைகளோடு இயங்குங்கள்: குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். கண்காணிப்பதுபோல அல்ல, அவர்களோடு விளையாடி, உரையாடி, அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்... என்ன விளையாடுகிறார்கள்... யாரோடு விளையாடுகிறார்கள் எனக் கவனியுங்கள். சந்தேகம் ஏற்படும்படி ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றுங்கள்.

3. உரையாடும் முறை: குழந்தைகளோடு உரையாடுவது என்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் மாறக்கூடியது. அவர்களின் மனநிலையைக் கணித்து அதற்கேற்ப பேச்சைத் தொடங்க வேண்டும். பள்ளியிலிருந்து வந்த குழந்தையிடம், `இன்னிக்கு என்ன படிச்சே?' என்பதாக இல்லாமல், `இன்னிக்கு என்னென்ன நடந்துச்சு, உன் ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம் வந்திருந்தாங்க?' எனப் பேசத் தொடங்கலாம். அப்போதே நம் பேச்சுக்குள் குழந்தை வந்துவிடும்.

4. முன் எச்சரிக்கை: குழந்தைகளுக்கான பாதிப்புகள், அது நடந்து முடிந்ததும்தான் தெரியவருகின்றன. அதனால், அவர்களின் பேச்சில், முகபாவத்தில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தவறாதீர்கள்.

5. தயக்கம் உடை: குழந்தைகளுக்கு அவர்களின் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றம் குறித்து உடைத்துப் பேசவேண்டிய காலம் இது. ஏனெனில், இதுகுறித்து பள்ளியில் கற்றுக்கொடுப்பதில்லை. வீட்டிலும் சொல்லவில்லை என்றால், தவறான நபர்கள் மூலம்தான் தெரிந்துகொள்வார்கள். பல குழந்தைகளுக்கு, தங்கள் உடலைச் சுத்தமாக வைத்திருக்கவும் தெரியவில்லை. பிறகு எங்கிருந்து பருவ மாற்றம் பற்றித் தெரிந்துகொள்வது? அதனால், கலாசாரப் புனிதம் எனக் குழப்பிக்கொள்ளாமல் மனம் திறந்து உரையாடுங்கள்.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்: குழந்தைகளின் பெரும்பாலான நேரத்தைப் பிடித்துக்கொள்வது தொலைக்காட்சிகளே. அதில்வரும் நிகழ்ச்சிகள் பற்றி விவாதியுங்கள். பஸ் படிக்கட்டில் ஒருவன் தொங்கிக்கொண்டே போவதை ரசிக்கிறார்கள் என்றால், அதுகுறித்துப் பேசுங்கள். அதேபோல, காதல் காட்சிகள் குறித்தும். இது, அவர்களுக்குச் சோர்வாகத்தான் இருக்கும். ஆனாலும், நீங்கள் சொல்வது ஏதேனும் ஓரிடத்தில் அவர்களுக்கு நிச்சயம் பயன்தரும்.

7. ஆண் குழந்தைகள்: பெண் குழந்தைகள்போலவே ஆண் குழந்தைகள் மீது கவனம் அவசியம். அவர்கள் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் ஆரோக்கியமான பாதையைக் காட்டவேண்டிய பருவம் இது. ஆண் குழந்தைகளும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். அவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள பழக்க வேண்டும்.

8. எல்லை வகுத்துக்கொடுங்கள்: உங்கள் குழந்தைகள் பழகும் நபர்களில் யாரெல்லாம் நெருக்கமான நண்பர்கள் என்பதையும், அவர்களிடம் எதையெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும், சரியாக எல்லை வகுத்துத் தருவது நல்லது. ஏனெனில், தன்னுடைய தனிப்பட்ட ரகசியங்களைத் தவறான நபர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல, செல்போனைப் பயன்படுத்துவது பற்றியும் உரையாடவும் கவனிக்கவும் செய்ய வேண்டும்.

9. குழுவாக இருங்கள்: குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக நேரம் செலவிடுவது அரிதாகிவிட்டது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருவர் செல்போனில் மூழ்கிவிடுகின்றனர். இதைத் தவிர்த்து, குழுவாக அமர்ந்து பேசுங்கள்; விளையாடுங்கள்; சாப்பிடுங்கள். அதுவே பல விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தரும்.

11. நோ சொல்லப் பழகு: பல வீடுகளில் ஒரு பிள்ளை என்பதால், அது என்ன கேட்டாலும் ஓகே என்கிறார்கள். இந்தக் குணம், `நோ' சொல்லப்படும்போது சிதைக்கவைக்கிறது. அதனால், குழந்தைகளின் தவறான கோரிக்கைகளுக்கு `நோ' சொல்லத் தயக்கம் காட்டாதீர்கள்.

அரசு:

1. கல்வித் திட்டத்தில் உடல் சார்ந்த பாடங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். உடலில் ஏற்படும் மாற்றம், உடலை அனுமதியின்றி யாரும் தொடக் கூடாது எனும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். `ஆண் குழந்தைகள் அழக்கூடாது' என்பது போன்ற பழைய கற்பிதங்களை உடைக்கும் விதத்திலும் அவை அமைய வேண்டும். பாலியல் கல்வி என்பதாக இதைச் சுருக்காமல், பாலின நீதிக் கல்வியாகப் பார்க்க வேண்டும்.

2. பாடம் கற்பிப்பதோடு நல்ல ஆலோசகராகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். இதற்கான சிறப்புப் பயிற்சியை அவர்களுக்கு அரசு அளிக்க வேண்டும். 

3. வாழ்க்கை திறன் கல்வியும் மிக அவசியம். ஏனெனில், வீடு, சமூகம், பள்ளி உள்ளிட்டவற்றிலிருந்து தரப்படும் அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது, சுயமாகவும் சரியாகவும் எப்படி முடிவெடுப்பது என்பதைக் கற்றுத்தர வேண்டும்.

4. குழந்தைகளுக்கான உரிமைகள் என்னென்ன, அவை மீறப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும், `குழந்தைப் பாதுகாப்புக் கொள்கை'. பள்ளி அளவிலும் மாநில அளவிலும் இன்னும் விரிவான பார்வையுடன் வரையறுக்கப்பட வேண்டும். 

5. குழந்தைப் பாதுகாப்பு கொள்கைகளை வரையறுப்பதுடன், பாதிக்கப்பட்டால் அணுகுவதற்கு எளிமையானதாக அமைப்பின் தன்மைகளை மாற்ற வேண்டும். பாதிக்கப்படுவோம் எனும் அச்சம் வந்தவுடனே தங்கள் பிரச்னைகளைக் கூறும் விதத்தில் அது அமைய வேண்டும்.

இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி, குழந்தைகள் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் வாழத்தகுந்த சூழலை அரசும் பெற்றோரும் சமூகமும் இணைந்து உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு வரும்.

அடுத்த கட்டுரைக்கு