FA பக்கங்கள்
Published:Updated:

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: ஆ.முத்துக்குமார்

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

வர்களின் கண்களில் அத்தனை தீர்க்கம்! கைகளில் துப்பாக்கி. கூர்மையான பார்வை இலக்கைத் தீர்மானிக்க, துப்பாக்கியில் இருந்து பாய்ந்து செல்லும் குண்டுகள், கணநேரத்தில் இலக்கை அடைகின்றன. துப்பாக்கியைத் தாழ்த்தி புன்னகைப் பூக்களைச் சிந்துகிறார்கள்.

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

சென்னை, அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள ‘மிஷன் அகாடமி ஆஃப் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ்’ மையத்தில் சின்ன கெளபாய்களும், சுட்டி வீராங்கனைகளும் பின்னி எடுக்கிறார்கள்.

இந்த ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் மையத்தை நடத்துவது மதனும் அவர் மனைவி ஷீபாவும்.  ‘‘ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ், ஆண்டாண்டு காலமாக பணக்காரர்களின் விளையாட்டாக மட்டுமே உள்ளது. பயிற்சியில் சேருவதற்கே லட்சங்களில் செலவு செய்ய வேண்டும். இதனால், நிறைய பேர் பங்கேற்க முடியாமல், சர்வதேச அளவில் பின்தங்கி இருக்கிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அகாடமியை ஆரம்பித்தோம். எங்களது அகாடமியில் மாதம் 2,000 ரூபாய் மட்டுமே பயிற்சிக் கட்டணம். 10 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும்  கற்றுக்கொள்ளலாம்’’ என்கிறார் மதன்.

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

‘‘பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றை அளித்து பயிற்சியில் சேரலாம். பேசிக் ரைஃபிள் ஷூட்டிங்கில் பயிற்சி தொடங்கும். ‘வார்ம் அப்’ பயிற்சிகள், பிரீத்திங் எக்சர்சைஸ், கண்கள், கைகளுக்கு என தனித்தனிப் பயிற்சிகள் அளிக்கப்படும். ரைஃபிள், பிஸ்டல் இரண்டிலும் ஷூட்டிங் கற்றுக்கொடுப்போம். பயிற்சிபெறும் காலத்தில் எங்களுடைய துப்பாக்கிகளையே கொடுப்போம். ஏனெனில், சொந்தமாக ஒரு துப்பாக்கியை வாங்க லட்சங்களில் செலவழிக்க வேண்டும். அது எல்லோராலும் முடியாது. நன்கு பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்கும்போது சொந்தமாக வாங்கலாம். அதற்குத் தேவையான வழிகாட்டுதலை செய்கிறோம்’’ என்கிறார் ஷீபா.

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் தமிழக அளவில் சுமார் 140 பள்ளி மாணவர்களே உள்ளனர். எனவே, இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் சர்வ தேசப் போட்டிகளில் இந்தியா ஜொலிக்கவும் பள்ளிகளில் இந்த விளையாட்டு சேர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

‘‘இங்கே பயிற்சி பெற்றவர்கள் இப்போது பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். அபிநவ் பிந்த்ரா ஒலிம்பிக் மெடலை வென்று, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயரச் செய்த பிறகு, இந்த விளையாட்டின் மீது நிறைய பேருக்கு ஆர்வம் உண்டாகி இருக்கிறது. இந்தியர்களால் இந்தத் துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும். இந்த விளையாட்டால், குழந்தைகளின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். எதையும் தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். இதனால், படிப்பு மட்டுமன்றி எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் வெற்றி இலக்கை சரியாக எட்டுவார்கள்’’ என்கிறார் மதன்.

 அவருடைய வார்த்தைகளுக்கு ‘ஆமாம்’ எனச் சொல்வது போல, துப்பாக்கிகளின் முழக்கமும் சுட்டிகளின் உற்சாகக் குரலும் கேட்கின்றன.

கில்லியாகச் சொல்கிறார்கள்...

காஷ்விகா, 7-ம் வகுப்பு

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

‘‘இந்த விளையாட்டில் ஈடுபடும்போது கவனம் ரொம்ப முக்கியம். ரைஃபிளை ரொம்ப பாதுகாப்பா, முறையா ஹேண்டில் பண்ணணும். இல்லைன்னா, ஷோல்டரில் அடிபடும். சரியா செய்தோம்னா ஷூட்டிங்கை ரொம்ப என்ஜாய் பண்ணலாம். நான், தென்மண்டல அளவில் நடந்த போட்டியில் தங்கம் ஜெயிச்சிருக்கேன். அடுத்தடுத்து பதக்கங்கள் குவிப்பேன்.’’

மோசஸ், 7-ம் வகுப்பு

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

‘‘நான் தென்மண்டல ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ்ல வெள்ளி மெடல் வாங்கியிருக்கேன். கடந்த ஒரு வருஷமா பிஸ்டல் ஷூட்டிங் கத்துக்கிறேன். என்னோட குறும்புத்தனம் எல்லாம் வெளியில மட்டும்தான். பிஸ்டலை கையில் பிடிச்சுட்டா மனசும் கண்ணும் டார்கெட்லதான் நிற்கும். தேசிய சாம்பியன் ஆகணும். இன்டர்நேஷனல் வரை போகணும்னு நிறைய பிளான் பண்ணி வெச்சிருக்கேன்.’’

ரியா, 5-ம் வகுப்பு

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

‘‘நான் ரொம்ப அமைதியான் டைப். ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் மூலம் எனக்குப் பெரிய நம்பிக்கை கிடைச்சு இருக்கு. இப்போ ரொம்ப சேஞ்ச் ஆயிருக்கேன். ஆக்டிவ்வா, ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்றேன். ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ்ல நிறைய நிறைய சாதிக்கணும்.’’

ஆதித்யா, 5-ம் வகுப்பு

பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்!

‘‘நான் நாலு மாசமாதான் இங்கே கத்துக்க ஆரம்பிச்சு இருக்கேன். ரைஃபிளைச் சரியாத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இன்னும் என்கிட்டே வலிமை வரலை. மாஸ்டரும் கூட இருக்கிறவங்களும் ரொம்ப என்கரேஜ் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிரமே கத்துப்பேன். போட்டிகளில் கலந்துகிட்டு மெடல் வாங்குவேன்.’’