பொது அறிவு
Published:Updated:

அறிவியல் ரயில்..!

அறிவியல் ரயில்..!
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவியல் ரயில்..!

லோ.பிரபுகுமார் - படங்கள்: க.மணிவண்ணன்

சுற்றுச்சூழல், அறிவியல், தட்பவெப்ப மாற்ற நிலை, நீர்ப்பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானம் போன்றவற்றை மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பிலான சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (science express) எனப்படும் சிறப்பு ரயில் உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு இதைத் தொடங்கியது. இந்த ரயில் இதுவரையில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து நானூற்று ஐம்பது ரயில் நிலையங்களுக்கும் மேல் காட்சிக்காக நின்று சென்றிருக்கிறது. ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் பொதுமக்களும் இதில் அமைந்திருக்கும்  அரங்குகளைக் கண்டு களித்துள்ளனர்.     

அறிவியல் ரயில்..!

ஜூன் மாதம் 15 - 16 ஆம் தேதிகளில் பாண்டிச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்திருந்தது. அடுத்து 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் வந்து இருந்தது. மூன்று நாள்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி,  கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

சயின்ஸ் எக்ஸ்பிரஸ் வடிவமைப்பும் வசதிகளும்:

வெண்மை நிறத்தில் பளிச்சிடும் வெளிப்புறத் தோற்றம், ரயிலின் பக்கவாட்டில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், சுற்றுச்சூழல் தட்பவெப்ப மாற்ற நிலை விழிப்பு உணர்வு வாசகங்கள், சோலார் தகடுகள் போர்த்தப்பட்ட ரயிலின் மேற்கூரைகள், ரயில் பெட்டிகள் முழுதும் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமராக்கள் என ஏராளமான ஆச்சர்யங்கள் இந்த ரயிலில் இருந்தன. ரயில் உட்புற வடிவமைப்பு மிகப்பெரிய அறிவியல் ஆய்வகத்தில் நுழைந்த பிரமிப்பைத் தந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வழிகாட்டி உதவியாளர் உள்ளார். மொத்தமுள்ள பதினாறு பெட்டிகளில், எட்டுப் பெட்டிகள் உயிரினங்கள் தொடர்பானவை. மற்ற பெட்டிகளில் நீர்ப்பாதுகாப்பு மற்றும் சிக்கன மேலாண்மை, தட்பவெப்ப மாற்ற நிலை, தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் பிற அறிவியல் துறைகள் உள்ளன. மேலும், மாணவர்கள் விளையாடி மகிழ கணக்குப்புதிர், அறிவியல் விளையாட்டுகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரைகளில் துறை சம்பந்தமான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மேலும், எளிமையாக அறிவியல் கணிதத்தை விளக்கும் வகையில் மாணவர்களுக்கு செய்முறையாகச் சிறப்பு வகுப்புகளையும் நடத்துகின்றனர்.   

அறிவியல் ரயில்..!

அமைந்துள்ள அரங்குகள்:

உயர் தொழில்நுட்பத் துறை, புவி வெப்பமயமாதல், சூரிய மின்னொளிப் பயன்பாடு மற்றும் அதன் மேலாண்மை, நீர் மேலாண்மை, இந்தியாவின் கலாசாரத்தைப் பறைசாற்றும் கங்கைச் சமவெளி, வடகிழக்கு இந்தியா, பாலைவனம், மேற்குத்தொடர்ச்சி மலைகள், கடல் பகுதிகள் மற்றும் சமவெளிகள், கார்பன் வெளியீடு, போக்குவரத்து, பாரம்பர்ய விளையாட்டு போன்றவற்றை விளக்கும்படியான அரங்குகள், கண்களைக் கவரும் வகையில் வண்ண விளக்குகள், கார்ட்டூன் படங்கள், 3டி படங்கள் எனப் பல விதங்களில் அனைத்துத் துறைகளும் நம்மைக் கவர்ந்தன.   

அறிவியல் ரயில்..!

பள்ளி மாணவர்களிடம் பேசியபோது ‘‘இப்போதுதான் நாங்க இந்த மாதிரி ரயிலை முதல்முறையா பார்க்கிறோம். ரொம்ப நல்லா இருக்கு. சயின்ஸ் பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டோம். சயின்ஸ் கிளாஸ்ல இனி இது மாதிரி நிறைய ஆக்டிவிட்டி செய்யப்போறோம். அடுத்து எப்போ இந்த டிரெய்ன் வரும்னு வெயிட் பன்றோம்” என்றனர்.

சயின்ஸ் எக்ஸ்பிரஸ் ஆத்தூர் ரயில் நிலையத்திலிருந்து விடைபெறும் நேரத்துக்குச் சற்று முன்பாகவே நாம் அங்கிருந்து விடைபெற்றோம்.