பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - மலபார் புணுகுப்பூனை

அழிய விடல் ஆகாது பாப்பா! - மலபார் புணுகுப்பூனை
பிரீமியம் ஸ்டோரி
News
அழிய விடல் ஆகாது பாப்பா! - மலபார் புணுகுப்பூனை

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - மலபார் புணுகுப்பூனை

ன்பு நண்பர்களே,

நான்தான் மலபார் புணுகுப்பூனை.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து எழுதுகிறேன். இது, எங்களது இனத்தின் இறுதிக் கடிதமாக இருக்கலாம் என்பதைப் பதறியபடியே உங்களிடம் முறையிட இதை எழுதுகிறேன்.

பெரிய புள்ளிகள் வைத்த மலபார் புணுகுப்பூனை (Malabar Large - Spotted Civet) எனும் எங்கள் இனம், பிராந்தியம் முழுவதுமே மருத்துவ முக்கியத்துவத்தோடு அணுகப்பட்டது. கேரளத்தில், எங்களுக்கு ‘வெறுக்குப் புணுகு’ என்று பெயர். வெறுக்குப்புணுகு என்கிற மை வாழ்நாளைக் கூட்டும் என்பது இந்திய மருத்துவ வரலாறு கண்டுபிடித்த விஷயம். இதற்காக, ஒரு காலத்தில் மலைவாழ் மக்களை வைத்து அதிக விலைபேசி, மன்னர்கள் எங்களைப் பிடித்துக் கொன்றதுண்டு.    

அழிய விடல் ஆகாது பாப்பா! - மலபார் புணுகுப்பூனை

கர்நாடகாவில் ‘கண்ணன் சாந்து’ என்றும் ‘மங்கள குர்தி’ என்றும் பெரிய யாகங்களின் முடிவில் ஆரத்தியாக அக்னிக்குண்டத்தில் போட்டு எங்கள் கறுத்த கறியைப் பொசுக்குவார்கள். எங்கள் உடல், தோல் பதம் செய்யப்பட்டு, வீட்டில் மாட்டி வைத்திருந்தாலே போதும், நோய்கள் அண்டாது என்பார்கள். எங்களது கழிவு கலக்கப்பட்ட லேகியம் 24 நோய்களை அண்டாமல் செய்யும் என்று இப்போதும் நம்புகிறார்கள்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் இரவு நேர வேட்டையர்கள் நாங்கள். திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட மலபார் கடற்கரைக் காடுகள் முழுவதும் ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். ரப்பர் தேயிலை மற்றும் முந்திரி மரங்கள் வளர்க்க, அந்தக் காடுகள் 1960-களில் மிக வேகமாக அழிக்கப்பட்டன. ஓடி ஒளியவோ, எதிர்த்துக் கடிக்கவோ தெரியாத வகை உயிரினம் என்பதால், எளிதில் ஆயிரக்கணக்கில் பிடித்து சீனா, ஜப்பான் முதல் ஐரோப்பா வரை அதிக விலைக்கு விற்று கடத்தல்காரர்கள் கொழித்தார்கள்.

1980-களில் அரசு விழித்துக்கொண்டது. எங்களை வேட்டையாடத் தடை விதித்தது. ஆனால், உலக உயிரியல் பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) சமீபத்தில் வெளியிட்ட கணக்கீட்டின்படி, நாங்கள் 250 பேர்தான் (வளர்ச்சியடைந்த மலபார் புணுகுப்பூனைகள்) மிச்சமிருக்கிறோம். எங்கள் குட்டிகள், ஒரு 30 இருக்கலாம் என்றும், எங்களைப் பேரழிவின் விளிம்பில் (critically endangered) உள்ள உயிரினம் என்றும் அறிவித்தார்கள்.

இனி உங்கள் சந்ததிகள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். நண்பர்களே, எங்களுடைய மாமிசம், தோல், கழிவு ஆகியவை மருந்து என்பது உண்மையாகவே இருந்தாலும், எங்களை அடைத்துவைத்து வளர்ப்பது முடியாத ஒன்றாக இருப்பதை உணர வேண்டும்.

அந்த மருந்தின் வேதித்தன்மைகளை ஆராய்ந்து, மாற்று வழிகளில் நவீன அறிவியல் உதவியோடு மருந்து தயாரித்தால், நாங்கள் அழிவிலிருந்து தப்புவோம்.

வனங்களை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள். எங்கள் வாழிடங்களை இயற்கையிடம் விட்டுவிடுங்கள். மருந்துக்கு என எங்களை அழிப்பதை நிறுத்த, பிரசாரம் செய்யுங்கள். உங்கள் வாழ்நாள் நீள்வதற்காக எங்கள் வாழ்நாளை அழிக்கலாமா? எல்லோரையும் சிந்திக்கச் சொல்லுங்கள்.

உங்களை நம்பி எங்களது இனமே இருக்கிறது. உதவி செய்வீர்களா?

இப்படிக்கு,

மலபார் புணுகுப்பூனை, மேற்குத்தொடர்ச்சி மலை