பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

வி.எஸ்.சரவணன் - மு.பார்த்தசாரதி - படங்கள்: அசோக்குமார்

ரவாரத்துடன் ஆரம்பித்த இந்த ஆண்டின் ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ஆம்! பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களைப் பத்திரிகையாளர்களாக, பல்துறை வித்தகர்களாக உயர்த்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, இது பத்தாம் ஆண்டு. அந்த ஸ்பெஷல், அன்றைய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. சென்னை, அண்ணா பல்கலைக்கழத்தின் அரங்கத்துக்கு வந்திருந்த 66 சுட்டி நட்சத்திரங்களின் முகங்களிலும் அத்தனை உற்சாகம். எதிர்காலக் கனவுகளோடும் அதுகுறித்த தேடலோடும் இருந்த அவர்களின் கண்களில் தன்னம்பிக்கை மின்னியது. 

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

                                                   சுட்டி ஸ்டார்களுடன் வேலு மாமா...
சிறப்பு விருந்தினர்களாக மூன்று சூப்பர் சுட்டி ஸ்டார்கள்  வந்திருந்தனர். அவர்களின் வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் பேசவந்த சூப்பர் சுட்டி ஸ்டார் எஸ்.என்.எஸ்.கோபாலன், இன்று ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality) எனப்படும் தொழில்நுட்பத்தில் பின்னியெடுத்துக்கொண்டிருப்பவர். AR தொழில்நுட்பத்தில் சுட்டி க்ரியேஷனில் கொடுத்துள்ள காரை, 360 டிகிரியில் காட்டியபோது, எல்லோரின் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தன.   

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

அடுத்து பேசவந்த சூப்பர் சுட்டி ஸ்டார் ஏ.ஆர்.ராஜகணேஷ், இன்று சிறந்த குறும்பட இயக்குநர். “சுட்டி விகடனில் நான் எழுத ஆரம்பித்த பிறகுதான், எனக்குள் இருக்கும் கற்பனைத்திறனை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அந்த ஓர் ஆண்டுப் பயிற்சி, எனக்குள் நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. குறும்படம் எடுக்கும் ஆர்வத்தையும் அதுதான் உண்டாக்கியது. உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, உங்கள் எதிர்காலத்துக்கான விதையைப் போடுங்கள்; சாதித்துக் காட்டுங்கள்” என்றார். அடுத்து, அவர் இயக்கிய ‘மனிதநேயம்’ குறும்படம் திரையிடப்பட்டது.      

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

பிறகு பேசவந்த சூப்பர் சுட்டி ஸ்டார், ரிஃபாத் ஷாருக், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’வின் தலைமை சயின்டிஸ்ட். நாசா நடத்திய போட்டியில் தேர்ச்சிபெற்று, சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட ‘கலாம் சாட்’ நானோ செயற்கைக்கோளை உருவாக்கியவரில் முக்கியமானவர். கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்ட நொடிகளைத் திரையில் காட்டினார். அதைப் பார்த்த சுட்டிகளை மகிழ்ச்சியும் பிரமிப்பும் சூழ்ந்துகொண்டது.

‘‘எனக்கும் உங்களுக்கும் முக்கியமான உறவு இருக்கு. இன்னிக்கு நீங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில், சில வருடங்களுக்கு முன், ‘என்ன செய்யப்போகிறோம்?’ என்கிற ஆர்வத்தோடு நானும் சுட்டி ஸ்டாரா உட்கார்ந்திருந்தேன். அந்த அனுபவம்தான் என் வாழ்க்கையையே மாத்துச்சு. நான் என்னவா ஆகணும் என்கிற தெளிவைக் கொடுத்துச்சு” என்ற ரிஃபாத், ‘கலாம் சாட்’ பற்றிய வெற்றிக் கதையைப் பகிர்ந்துகொண்டார்.  

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

அடுத்து, ‘பலன்கள் ஏராளம்’ என்ற தலைப்பில் பேசவந்தார், ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர், ஜி.செந்தில்குமார். ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, வழக்கமான படிப்பின்மீது ஆர்வமில்லாமல், தனக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கியதால், இன்று தனக்குப் பிடித்த வேலையைச் செய்வதாகச் சொன்னார். கட்டாயத்தால் ஒரு மாணவரைப் படிக்கவைக்க முடியாது. ஒரு மனிதரின் முதன்மையான திறமைகளை எட்டு விதங்களில் அடக்கிவிடலாம்” என்று ஒவ்வொன்றையும் எளிமையான உதாரணங்களால் விளக்கினார்.

தேநீர் நேரத்துக்குப் பிறகு, சுட்டிகளுக்குக் காத்திருந்தது விதவிதமான கதை விருந்து. நாவல்கள், பயணக் கட்டுரைகள், எண்ணற்ற சிறார் நூல்களை எழுதியிருக்கும் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘என்ன எழுதலாம்... எப்படி எழுதலாம்?’ என்ற தலைப்பில் கதை எழுதுவது குறித்துப் பேச ஆரம்பித்தார்.   

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

“கதை எழுதுவதற்கு அடிப்படையான ஒன்று, புதுப்புதுச் சொற்களைக் கற்றுக்கொண்டே இருப்பது. தினமும் குறைந்தது 10 புதிய சொற்களையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே படியுங்கள். புத்தக வாசிப்புதான் உங்கள் எழுத்தை உயிர்ப்பிக்கும். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் வாசிப்புக்குப் பஞ்சமே இருக்காது. ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்குவதற்காகவே என் அப்பா காசு கொடுப்பது வழக்கம். எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு குட்டி நூலகமும், எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய நூலகமும் இருக்கும். எங்கள் கதைகளில் ஒரு வாழ்வியலைக் கொடுக்க முடிகிறதென்றால், அதற்கு முக்கிய காரணம், கிராமம் சார்ந்த சூழலும் சிறுவயதில் ஏற்பட்ட வாசிப்புப் பழக்கமும்தான்.  

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

கதை எழுத எங்கே தகவலைத் தேடுவது என்று குழம்பாதீர்கள். கதை எழுதுவதற்கான கரு உங்களைச் சுற்றியே இருக்கின்றன. தினந்தோறும் நீங்கள் சாப்பிடும் இட்லி உங்களிடம் பேசுவதாகக் கற்பனைசெய்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டிலிருக்கும் பல்லியோ, கரப்பான்பூச்சியோ பேசுவதுபோல கற்பனைசெய்யுங்கள். அந்தக் கற்பனைதான் கதை. இந்த மொழி, நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பாரம்பர்யமிக்க நம் தமிழ் மொழியைக் காப்பாற்றுவது நமது கடமை. அதை மனதில் நிறுத்தி, உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை சரியாகப் பயன்படுத்துங்கள். முன்னேறிச் செல்லுங்கள்” என்றவர், அழகழகான கதைகளைச் சொல்லி, உற்சாக உலகத்துக்கு அழைத்துச்சென்றார்.   

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

அடுத்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார், சன் டிவி காமெடி ஜங்ஷனில் கலக்கிவரும் ஜெயச்சந்திரன். நகைச்சுவையின் பலவிதங்களைக் கூறி, வாழ்க்கையில் சிரிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரியவைத்தார். அவரிடம் சுட்டி ஸ்டார்களின் முதல் நிருபர் பணி ஆரம்பித்தது. கேள்விகளை பவுன்ஸர்களாக வீச, பதில்களால் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்தார் ஜெயச்சந்திரன். (இந்தப் பேட்டி  சுட்டி ஸ்டார்களின் எழுத்தில் அடுத்த இதழில் வெளியாகும்)
உணவு இடைவேளைக்குப் பிறகு, ‘கைகளில் கண்ணாமூச்சி’ விளையாட அழைத்தார், தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர், சுப்ரமணியன். கைகளைப் பயன்படுத்தி எத்தனை வகையான விஷயங்களைச் செய்யலாம்; அவை நமது மூளைக்குக் கொடுக்கும் வேலைகள், பலன்கள் பற்றி சுப்ரமணியன் சொல்லச் சொல்ல, சுட்டிகள் ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனார்கள்.  

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

திடீரென, ‘ஹோஓஓஒய்ய்ய்...’ சத்தம் கேட்டதும், சுட்டிகள் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தார்கள். உற்சாகத்துடன் துள்ளிக்கொண்டு வந்தார், வேலு மாமா எனச் சுட்டிகளால் அன்புடன் அழைக்கப்படும் வேலு சரவணன். கோமாளித் தொப்பி, முகமெல்லாம் வண்ணங்கள். அவற்றைக் கடந்து தெரியும் உற்சாகச் சிரிப்பு, கையில் வண்ணத் துணிகள் கட்டிய குச்சியுடன் வேலு மாமாவைப் பார்த்ததும், சுட்டிகளின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பின் பிரகாசம். வேலு மாமா என்ன செய்யப்போகிறார் என ஆவலோடு காத்திருந்தனர்.      

வாசிப்புதான் எழுத்தை உயிர்ப்பிக்கும்!

வேலு மாமா நிகழ்த்திய ‘புதையல் வேட்டை’ நிகழ்ச்சியில் தன் தொப்பியிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துப் படித்தார். அந்தக் குறிப்பு சொல்லும் இடத்தில் புதையல் இருக்கும் எனச் சுட்டிகள் ஓட, அங்கே வேறோர் இடத்துக்கான குறிப்புதான் இருந்தது. இப்படியே ஆறு இடங்களில் தேடி, ஏழாவது இடத்தில் புதையலைக் கண்டுபிடித்தார்கள். அந்த உற்சாகத்தோடு மீண்டும் அரங்கத்துக்குள் வந்தவர்களை, கடந்த ஆண்டு சுட்டி ஸ்டார்களாக இருந்து, சூப்பர் சுட்டி ஸ்டார்களாகத் தேர்வானவர்கள் வரவேற்றார்கள். அவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

“நான் லாஸ்ட் இயர் உங்க இடத்துல உட்கார்ந்திருந்தேன். இப்போ உங்க முன்னாடி நின்னு பேசிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. நான் சுட்டி ஸ்டாரா செலெக்ட் ஆனதுக்கு அப்பறம் என் எழுத்து நடையே மாறிடுச்சு. நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கேன். இதுதான்னு இல்லாம, நீங்க நினைக்கிற எல்லாத்தையும் எழுதுங்க. ஜெயிச்சுக் காட்டுங்க. வாழ்த்துகள்” என்றார் சீனியர் சுட்டி ஸ்டார் தனேஷ்.

மற்றொரு சீனியர் சுட்டி ஸ்டார் லலிதா ஸ்ரீநிதி, “நான் சுட்டி ஸ்டார் ஆனதும் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். அதற்குக் காரணம் எங்க அப்பாவும் அம்மாவும். நான் டிவி பார்த்திட்டு இருக்கிறப்ப, அவங்க புக்ஸ் படிச்சிட்டிருப்பாங்க. அதைப் பார்த்ததும் எனக்கும் புக்ஸ் படிக்கும் ஆசை வந்து, அதுவே பழக்கமாச்சு. என் அப்பா, என்னை நூலகத்துக்கு வாரம் ஒருமுறை அழைச்சிட்டுப் போனாங்க. அந்த வாசிப்புப் பழக்கம்தான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கு. பெற்றோர்கள் புத்தகங்கள் படிங்க, உங்களைப் பார்த்து  பிள்ளைகள் தானா படிப்பாங்க” என அழகாகப் பேசினார்.

கை நிறையப் பரிசு, மனம் நிறையத் தன்னம்பிக்கையுடன் இந்த ஆண்டின் சுட்டி ஸ்டார்கள் கிளம்பினார்கள். இந்த வருடம் முழுவதும் தங்கள் படைப்புகளால் நம்மை மகிழவைக்கப்போகும் அவர்களை வாழ்த்துவோம்!