Published:Updated:

கிராமத்து விளையாட்டு

காக்கா குஞ்சு பொன்.காசிராஜன் இரா.முத்துநாகு, யுவா

கிராமத்து விளையாட்டு

காக்கா குஞ்சு பொன்.காசிராஜன் இரா.முத்துநாகு, யுவா

Published:Updated:
##~##

ஒரு மரத்தால் மனிதனுக்குக் கிடைக்கும் பலன்கள் ஒண்ணா... ரெண்டா? சினிமாக்களில் பார்த்து இருப்பீங்க. ''கூட்டுடா பஞ்சாயத்தை!'' என்று சொன்னதும், அடுத்த காட்சியில் ஒரு பெரிய மரத்தைக் காட்டுவாங்க. அதுக்குக் கீழே எல்லோரும் கூடி இருப்பாங்க. ''அம்மா நான் கோயிலுக்குப் போய்ட்டு வரேன்''னு கதாநாயகி சொல்வாள். அடுத்த காட்சியில் ஒரு மரத்துக்குக் கீழே பிள்ளையாரோ, பாம்புப் புற்றோ இருக்கும். அதைக் கும்பிட்டு, சுற்றிச் சுற்றி வருவாங்க. நாயகன், தாயைப் பத்தி பாட்டுப் பாடுவான். இடையில் ஒரு மரத்தைக் காட்டுவாங்க. அதில் தூளியில் குழந்தையை 'ஆராரோ... ஆரிரரோ’ என்று தாலாட்டுப் பாடி, அம்மா தூங்க வைப்பாங்க.

இப்படி பெரியவங்களுக்குப் பலவிதங்களில் பயன்படும் மரங்கள், பிள்ளைகளுக்குப் பயன்படாமல் இருக்குமா? கிராமத்துச் சுட்டிகளுக்கு இரண்டு விஷயங்கள் கண்டிப்பாகத் தெரிஞ்சு இருக்கும். ஒண்ணு... நீச்சல் அடிக்கிறது. அடுத்து... மரம் ஏறுவது. எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு தவ்வு தவ்வி, கிளையைக் கைகளால் பிடிச்சு, கால்களைக் கொக்கி மாதிரி வெச்சு ஏறுவாங்க. அதே முறையில் மரத்தை, விளையாடவும் பயன்படுத்துறாங்க. அதில் ஒண்ணுதான் 'காக்கா குஞ்சு’ விளையாட்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விளையாட்டில் காக்காவாக ஒரு சுட்டி இருப்பான். ஒரு தலைவனும் இருப்பான். முதலில் வாட்டசாட்டமான மரத்தைச் சுட்டிகள் தேர்ந்தெடுத்து அங்கே கூடுவாங்க. பல விளையாட்டுகளைப் போல இதிலும் 'சாட்... பூட்... த்ரீ’ போடுவாங்க. அதில் அவுட்டாகிறவன்தான் காக்கா. மற்ற சுட்டிகள் (காக்கா குஞ்சுகள்) அருகில் உள்ள மரத்தில் ஏறிக் குதிப்பதற்கு ஏதுவாக கிளைகளில் உட்கார்ந்துப்பாங்க. தலைவனும் காக்கா சுட்டியும் மட்டும் கீழே இருப்பாங்க. மரத்துக்கு கீழே ஒரு வட்டம் போட்டு அதில் ஒரு குச்சியை வெச்சுடுவாங்க. 'ஜூட்’ சொன்னதும் தலைவனாக இருக்கும் காக்கா விரட்டி குச்சியை எடுத்து, ஒரு காலை உயர்த்தி, அந்த இடைவெளியில் குச்சியை 'விஷ்க்க்’னு வேகமா எறிவான். உடனே காக்கா சுட்டி, குச்சியை எடுத்து வர ஓடுவான். அப்போ தலைவனும் மரத்தில் ஏறிப்பான்.

கிராமத்து விளையாட்டு

குச்சியோடு திரும்பி வரும் சுட்டி, அதை வட்டத்தில் வெச்சுட்டு, வேகமா மரத்தில் ஏறி, யாராவது ஒரு சுட்டியைத் தொடுறதுக்கு முயற்சிப்பான். அவங்க இன்னும் மேலே... மேலே ஏறி காக்கா கையில் அகப்படாமல் போக்குக் காட்டுவாங்க. இதுக்குள்ளே வேற பக்கம் இருந்து ஒரு சுட்டி இறங்கிவந்து, வட்டத்தில் இருக்கும் குச்சியை எடுத்துத் தூர வீசுவான். காக்கா சுட்டி மறுபடியும் கீழே இறங்கி,  ஓடிப்போய் எடுத்துவந்து வட்டத்தில் வெச்சுட்டு தன் முயற்சியைத் தொடர்வான். வட்டத்தில் குச்சி இருக்கும் போது... மரத்தில் இருக்கிற யாரையாவது காக்கா சுட்டி தொட்டுட்டு, கீழே வந்து குச்சியை எடுத்துட்டா, தொடப்பட்டவன் அவுட். அவன் காக்காவாக மாற, ஆட்டம் ஜோரா நடக்கும்.

இப்படியே உடம்பு களைக்கும் வரைக்கும் விளையாடுவாங்க. மரம் கொடுக்கும் சிலுசிலு ஆக்ஸிஜனை சுவாசிச்சுக்கிட்டே வேகமாகவும் லாகவமாகவும் மரத்தில் ஏறி இறங்கி விளையாடுறது உடம்புக்கு சரியான உடற்பயிற்சியாக இருக்கும். அது மட்டுமா? காக்கா போன்ற சிறிய பறவைகள் தங்களின் குஞ்சுகளை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க எப்படி எல்லாம் பாடுபடுகிறது என்ற விஷயத்தை இந்த விளையாட்டு மறைமுகமாக எடுத்துச் சொல்லுது.

    (அடுத்த ஆட்டம்?)