Published:Updated:

டாக்டர் இராதாகிருஷ்ணன் 20

செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்ஆதலையூர் த.சூர்யகுமார், ஓவியம்: நடிகர் சிவகுமார்

பிரீமியம் ஸ்டோரி

டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, இந்தியாவின் உயர் பதவியான குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் (செப்டம்பர் 5-ம் தேதி), ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரைப் பற்றிய 20 சுவாரசியமான தகவல்கள்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் 20

ஹேப்பி பர்த்டே

பேச்சாற்றலால் உலகம் முழுவதும் தன் குரலை எதிரொலிக்கச் செய்த டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற ஊரில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் பிறந்தார். அப்பா வீராசுவாமி, அம்மா சீதாம்மா.

சீக்கிரமே டும் டும் டும்

இராதாகிருஷ்ணனுக்கு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, 16 வயதில் சிவகாமு என்ற தூரத்து உறவுப் பெண்ணுடன் கல்யாணம் நடந்துவிட்டது. மனைவி ஓரளவுதான் படித்திருந்தார். ஆனாலும், இராதாகிருஷ்ணன் அளவுக்குத் தன் தகுதியை வளர்த்துக்கொண்டார்.

 நினைவோ ஒரு பறவை

இராதாகிருஷ்ணன் படிக்கும் விதமே ஆர்வமூட்டுவதாக இருக்கும். படித்தவற்றைச் சிந்தித்து, சரியாக மனதில் பதியவைத்துக்கொள்வார். இந்தப் பழக்கம் இருந்ததால்தான், எந்தக் கூட்டத்திலும் எந்த நேரத்திலும், நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறி, பாடல்களைக் கூறி அவரால் பேசமுடிந்தது. அந்த அளவுக்கு அவரது நினைவுப் பெட்டகம் நிறைந்திருந்தது.

விவேகம்

சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் என்றால், இராதாகிருஷ்ணனுக்கு ரொம்பவே பிடிக்கும். விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், கடிதங்களையும் விரும்பிப் படிப்பார். அதே சமயம், மாக்ஸ் முல்லர் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் எழுதிய சமயம் சம்பந்தமான நூல்களையும் படித்தார். இதில், மிகவும் ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், இரு நாட்டு சாஸ்திரங்களைப் படித்ததோடு நின்றுவிடவில்லை. இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற ஆய்வையும் மேற்கொண்டார். இந்த விவேகமான ஆய்வுதான், அவரை பிற்காலத்தில் அறிஞராக்கியது.

 படிப்பது சுகமே

இன்றைக்கு இருப்பது மாதிரி அன்று, இன்டர்நெட் , இ-மெயில் கிடையாது. தகவல் தொடர்புச் சாதனங்களும் குறைவு. ஆனால், இராதாகிருஷ்ணன், உலகத்தையே உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் அளவுக்குப் படிப்பில் பேராற்றல் பெற்றிருந்தார்.

இராதாகிருஷ்ணன் 13 வயது வரை திருத்தணியிலும் திருப்பதியிலும் படித்தார். அதன்பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பி.ஏ. படிப்பில் முதல் மாணவராகத் தேறினார். பிறகு, எம்.ஏ. பட்டம் பெற்றார். சுதந்திரத்துக்கு முன்பு 10-ம் வகுப்பு படிப்பதே பெரிய விஷயம். ஆனால் இவர், எம்.ஏ.வரை படித்தது பெரிய சாதனைதான். 1906-ம் ஆண்டு, தத்துவவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1927-ம் ஆண்டு, ஆந்திரப் பல்கலைக்கழகம் சார்பாக அவருக்கு டி.லிட். என்னும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 வேலையுள்ள பட்டதாரி

இராதாகிருஷ்ணனின் படிப்புக்கும் திறமைக்கும் தகுதிக்கும் வேலை மேல் வேலை வந்துகொண்டே இருந்தன. எம்.ஏ.பட்டம் பெற்றவுடன், முதலில் சென்னை மாகாணக் கல்லூரியில் தத்துவத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறகு, மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். அதன்பிறகு, கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

பிறகு, ஆந்திரப் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவந்தார். 1931 முதல் 1936 வரை ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

 உலகம் சுற்றும் வாலிபன்

இராதாகிருஷ்ணனின் பெயர் உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவரை சொற்பொழிவாற்ற அழைத்தன. அவருடைய தத்துவ உரைகளுக்கு அப்போது ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. 1926-ம்  ஆண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு தன் உரைவீச்சால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

பின்னர் அமெரிக்கா சென்று, உலகப் புகழ்பெற்ற சிக்காகோ, ஹார்வர்டு, யேல் முதலிய பல்கலைக்கழகங்களில் பேசினார். விவேகானந்தருக்குப் பிறகு, சிக்காகோ மாநகரம், இராதாகிருஷ்ணனால் புகழ்பெற்றது.

 வேலையுள்ள பட்டதாரி-2

1936-ம் ஆண்டு, இராதாகிருஷ்ணனுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. அங்கு, கீழை நாட்டு சமயப் பேராசிரியர் பணிக்குத் தேவை ஏற்பட்டது. அதை, இராதாகிருஷ்ணனுக்கு அளிக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் முடிவுசெய்து, அவரை விரும்பி அழைத்தது. இந்தப் பொறுப்பான பணியை ஏற்ற முதல் இந்தியர்,  இராதாகிருஷ்ணன்.

 மல்டி கலர் மகத்துவம்

தர்க்கம் செய்வதிலும், எதிரில் நின்று பேசுபவர்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதிலும் இராதாகிருஷ்ணன் சளைக்க மாட்டார். ஒருமுறை வெள்ளைக்கார கவர்னர் தந்த விருந்தில் கலந்துகொண்டார். அப்போது ஓர் ஆங்கிலேயர், “நாங்கள் எல்லாம் ஒரே நிறம். ஆனால், இந்தியர்கள் பல நிறங்கள். இதிலிருந்தே தெரியவில்லையா நாங்கள் உயர்ந்தவர்கள் என்று” என இளக்காரமாகப் பேசினார்.

அதற்கு, சூடாக உடனே பதில் கொடுத்தார் இராதாகிருஷ்ணன். “கழுதைகள் ஒரே நிறம். ஆனால், குதிரைகள் பல்வேறு நிறம் கொண்டவை. குதிரைகளோடு கழுதையை ஒப்பிடவே முடியாது” என்றார்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் 20

தாகூர் தந்த பாராட்டு

நம்முடைய தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் நூல்களை விரும்பிப் படித்தார். அவருடைய கருத்துகள், தாகூரின் கருத்துகளோடு ஒத்துப்போனது ஆச்சர்யமாக இருக்கிறது.

பிறகு, ‘தாகூருடைய சமயக் கருத்துகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அப்போது, தாகூருக்கு மிக்க ஆச்சர்யம். “என்னிடம் நெருங்கிப் பழகாமலேயே, என் நூல்களை மட்டுமே படித்துவிட்டு, என்னைப் பற்றியும் என் கருத்துகள் பற்றியும் தெளிவாக எழுதிய உங்கள் அறிவு பாராட்டுக்குரியது. வேறு யாரும் இந்த அளவுக்கு என்னைப் புரிந்துகொள்ளவில்லை” என்று பாராட்டினார்.

 எங்கே போகிறது எதிர்காலம்?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, பல இடங்களில் சொற்பொழிவாற்றிப் பெயர்பெற்ற இவர்,‘நாகரிகத்தின் எதிர்காலம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
‘விஞ்ஞானம், மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது, நம் முன்னோரைவிட நம்மை உயர் நிலையில் வாழ வைத்துள்ளது. பொருள் குவிக்க  வழிகாட்டியுள்ளது. ஆனால், நமது உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் உணவு தரத் தவறிவிட்டது’ என்று அந்த நூலில் வருத்தப்பட்டு எழுதினார் இராதாகிருஷ்ணன்.

 இந்திய தேசம் இது!  வியர்வை சிந்திய தேசம் இது!

1927-ம் ஆண்டு, ஆந்திரப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்குக் கூறியவை இன்றைய மாணவர்களுக்கும் பொருந்தும். ‘இந்தியாவின் நன்மைக்காக நீங்கள் உழைக்க விரும்பினால், இந்தியாவின் கடந்தகால வரலாற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். வியர்வை சிந்தி உழைக்கும் கைத்தொழிலாளர்களையும், உழவர்களையும் ஆதரியுங்கள். கிராமங்களில் குடியேறி, உங்கள் சகோதரர்களாகிய கிராமவாசிகளுக்குக் கல்வி அறிவை ஊட்டுங்கள்’ என்று நெஞ்சம் நெகிழப் பேசினார்.

 தூய்மை இந்தியா திட்டம்

இன்று நாம் பெருமையாகப் பேசிக்கொள்ளும் தூய்மை இந்தியா திட்டம் பற்றி அன்றே பேசினார், இராதாகிருஷ்ணன். 1930-ம் ஆண்டு, மைசூர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, புதிதாகப் பட்டம் பெற்ற பட்டதாரிகளிடம் அவர் முதலில் சொன்ன அட்வைஸ், ‘தூய்மை இந்தியா’ என்பதுதான்.

“பட்டம் பெற்ற மாணவர்களே, எதிர்கால இந்தியாவை உங்கள் முயற்சியால் மேல்நிலைக்குக் கொண்டுவர வேண்டும். கிராமக் கைத்தொழில்களைப் பெருக்க உதவி செய்யுங்கள். கிராமங்களை சுகாதாரமாக வைத்திருக்க உதவி செய்யுங்கள்” என்றார். இப்படி தூய்மை இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டாரே தவிர, இதை இயக்கமாகவோ, திட்டமாகவோ அறிவிக்கவில்லை.

 இராதாகிருஷ்ணனுக்குப் பிடித்த  திருக்குறள்

இராதாகிருஷ்ணன் நிறைய படித்திருந்தாலும், டாக்டர், ‘சர்’ போன்ற பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர் எப்போதும் கர்வப்பட்டதே இல்லை. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று எல்லோரிடமும் அன்பாகப் பழகினார். யார் என்ன கருத்து சொன்னாலும், அதைக் கவனமாகக் கேட்டுக்கொள்வார்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”


என்ற திருக்குறளை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அதே திருக்குறள்படி வாழ்ந்தும் காட்டினார்.

 தாயைப்போல பிள்ளை,  ஆசிரியரைப்போல மாணவன்.

மிகச்சிறந்த தத்துவவியல் அறிஞராக இராதாகிருஷ்ணன் திகழ்வதைப் பார்த்த அவர் மாணவர்கள், தாங்களும் சிறந்த அறிஞர்களாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர். இராதாகிருஷ்ணன் இருந்தபோது, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கே இராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் பெரிய ஊக்கம் தந்தன. ஆந்திரப் பல்கலையில், புதிய எண்ண அலைகள் புறப்பட்டன.

 இராதாகிருஷ்ணன் விரும்பிய ஜங்ஷன்

இது, ரயில்வே ஜங்ஷன் இல்லை; சிந்திக்க விரும்புபவர்களின் சந்திப்பு. ‘உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அறிவையும், இந்தியாவின் சமய அறிவையும் பெற வேண்டும் என்று விரும்பினார். இதன்மூலம் ஒரு மனிதன் மாமனிதனாக மாறிவிட முடியும்’ என்று சொன்னார்.

இந்த யோசனையை அப்போதைய ஆங்கில அரசாங்கம் வெகுவாகப் பாராட்டியது. அதோடு மட்டுமல்லாமல், ‘ஜெனிவா’வில் அமைக்கப்பட்டிருந்த உலக அறிஞர்களின் சங்கத்துக்கு, இந்தியாவின் உறுப்பினராகவும் இவரை நியமித்தது. 

 உலக (அரசியல்) நாயகன்

இராதாகிருஷ்ணன், தனது அரசியல் வாழ்க்கையை மிகவும் தாமதமாகவே தொடங்கினார். காங்கிரஸ் பின்னணி இல்லாதவர். இந்து மத தத்துவத்தில் இவர் காட்டிய ஆர்வமும், அதை மேலைநாடுகளில் எடுத்துச்சொன்ன விதமும்தாம் மிகப்பெரிய அறிஞராக உயர்த்தின. 1931-ம் ஆண்டு, சர்வதேச சங்கத்தின் (ஐ.நா.வின் பழைய வடிவம்) அறிவுசார் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதனாலேயே, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாமல் கவனம் பெற்றார். பாரத ரத்னா உட்பட (1954), எண்ணிக்கையில் அடக்க முடியாத விருதுகளை வாங்கிக் குவித்த இவர், 15 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகவும், 11 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார்.

 எஸ்கலேட்டராக இருந்தவர்

தத்துவப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய இராதாகிருஷ்ணன், பலரது வாழ்க்கையை ஏணியாக அல்ல, எஸ்கலேட்டராக இருந்து உயர்த்தியவர். லிஃப்டாகத் தானும் உயர்ந்தவர்.

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் பணியாற்றினார். 1962 முதல் 1967 வரை குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தார்.

 ‘ஆசிரியர்கள்தாம் தேசத்தின் மூளையாக இருக்க வேண்டும்’ என்று கூறியவர். ஆசிரியப் பணிமீது அவர் காட்டிய தீராத அன்பால், 1962 முதல் அவரது பிறந்தநாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 உத்தமர்களைக் கொண்டாடுமா உலகம்?

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் சுடப்பட்ட நிகழ்வு, அவரை ரொம்பவே பாதித்தது. ஆற்றாமையில் சொன்ன வார்த்தைகள் இவை: “தூய்மையான மக்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட உத்தமர் காந்தி சுடப்பட்டார் என்பது ‘சாக்ரடீஸ் விஷம் ஊட்டப்பட்ட கொடுமையிலிருந்தும் நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை’ என்பதையே காட்டுகிறது.

உலகம், மகாத்மாக்களை மதிக்கும் காலம் எப்போது வரும்? காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதையும் அன்புக்காகவே அர்ப்பணம் செய்தவர். அந்த அன்புக்கு மதிப்பு தரும்போதுதான், உலகத்தில் அமைதி நிலவும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு