Published:Updated:

இந்த குட்டி நாடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா சுட்டீஸ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்த குட்டி நாடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா சுட்டீஸ்?
இந்த குட்டி நாடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா சுட்டீஸ்?

ர.சீனிவாசன்

பிரீமியம் ஸ்டோரி

ங்ககிட்ட அட்லஸ் இருக்கா? சீக்கிரம் ஓடிப் போய்க் கொண்டு வாங்க, ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடலாம். யாருக்கும் தெரியாத குட்டி குட்டி நாடுகள் பத்தி சொல்றேன். அது உங்க அட்லஸில் எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியுமா? உதவிக்கு வேணும்னா உங்க பக்கத்துல மொபைல் போன்ல வீடியோ கேம்ஸ் ஆடிட்டிருக்கிற உங்க தம்பி, தங்கை, ஃபிரண்ட்ஸ்னு யாரை வேணும்னாலும் கூப்பிட்டுக்கோங்க. யாரும் கிடைக்கலைனா, இருக்கவே இருக்காங்க அப்பா அம்மா!

இந்த குட்டி நாடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா சுட்டீஸ்?

உலகில் மொத்தம் எத்தனை நாடுகள்?

பரந்துவிரிந்த இப்பேருலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மொத்தம் 196. அவற்றில் நமக்குத்  தெரிந்தவை என்னவோ அளவில் பெரியதாகவும், புகழ்பெற்ற வரலாற்றுடனும் இருக்கும் நாடுகள்தாம். உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் பல நாடுகளை நாம் தெரிந்துவைத்திருப்போம். இதே தென்னமெரிக்காவில் கேட்டால், ஒன்றிரண்டுக்கு மேல் தாண்டாது. நமக்குத் தெரியாத பல நாடுகளில்தாம் மிகவும் சுவாரசியமான விஷயங்கள் பல இருக்கின்றன. ஒரு நகரத்தைவிடச் சிறிய நாடு, ஒரு சிறிய கிராமத்தளவே மக்கள் தொகை கொண்ட நாடு, ஒரு வீடு கொண்ட நாடு என்று இங்கே ஆச்சர்யங்கள் ஏராளம். அப்படி அளவிலும், மக்கள் தொகையிலும் சிறியதாக இருக்கும் ஒரு 10 நாடுகளின் பட்டியல்தான் இது.

பலாவ் (Palau) மழைக்காடுகள் நிறைந்த சொர்க்கம்

மொத்தப் பரப்பு: 459 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 21,347


பலாவ் குடியரசு என்பது 300க்கும் மேற்பட்ட குட்டி குட்டித் தீவுகளை உள்ளடக்கியது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இது மழைக்காடுகள், அரியவகை தாவரங்கள், பறவைகள் என... வருவோரை வெகுவாகக் கவர்கிறது.

இதன் பிராந்திய எல்லையில் இருக்கும் கடலில் அச்சமூட்டும் சுறாக்கள் இருக்கின்றன. இதுபோக, இந்த நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற ஏரியில் 2 மில்லியன் ஜெல்லி மீன்கள். இருக்கின்றன. ஆனால், யாரையும் கடிப்பது இல்லையாம்.

நியுவே (Niue) - 1000 பேருக்கு ஒரு ஏர்போர்ட்

மொத்தப் பரப்பு: 261.46 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 1,190

ஓஷானியா நிலப்பரப்பில் அமைந்து இருக்கிறது நியுவே என்று அழைக்கப்படும் இந்தக் குட்டித் தீவு. மீன்பிடி தொழிலும், விவசாயமும் தாம் இங்கே முக்கியமான தொழில்கள். இங்கே காண்பதற்கரிய இயற்கைக் காட்சிகள் இருந்தாலும், ஏனோ சுற்றுலாப் பயணிகள் மட்டும் அதிகம் வருவதில்லை. இதனால் வாழ்வு ஆதாரத்துகாக கிட்டத்தட்ட 3000 கி.மீ. தூரத்திலிருக்கும் நியூசிலாந்திடம் கை ஏந்த வேண்டிய நிலை. இந்த நாட்டின் தலைநகரமோ ஒரு குட்டி கிராமம். அங்கு வசிப்பது வெறும் 600 பேர்.

செயிண்ட் கிட்ஸ் மற்றும் நீவிஸ் (Saint Kitts and Nevis)  இரட்டைத் தீவு

மொத்தப் பரப்பு: 261 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 52,329


மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இந்நாட்டில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நீவிஸ் என இரண்டு முக்கிய தீவுகள் உண்டு. பணக்காரர்களின் நாடாக இருக்கும் இதில் குடியுரிமை பெற இரண்டே வழிகள் தாம். ஒன்று இங்கிருக்கும் சர்க்கரை ஆலையில் $250,000 வரை முதலீடு செய்ய வேண்டும். இரண்டு, இந்த இரண்டு தீவுகளில் ஏதேனும் ஒரு இடத்தில் சொத்து வாங்க வேண்டும். அதற்கான ஆரம்ப விலையே $400,000 என்று அதிர வைக்கிறார்கள்.

தி ப்ரின்சிபாலிட்டி ஆஃப் ஹட் ரிவர் (The Principality of Hutt River)
 
50 பேர்கூட இல்லாத மைக்ரோ நாடு

மொத்தப் பரப்பு: 75 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 30


நுண்ணாடு என அழைக்கப்படும் இது ஆஸ்திரேலியக் கண்டத்தில் அமைந்துள்ளது. ராஜ குடும்பத்தைச் சேர்ந்த லியோனார்ட் காஸ்லி தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தைத் தனி நாடாக, சுதந்திர அரசாக அறிவித்தார். அவரால் நிறுவப்பட்ட இது இன்னமும் ஒரு தனி நாடாக ஏற்கப்படவில்லை என்றாலும், இந்த நாட்டுக்கு என நாணயம், முத்திரைகள், பாஸ்போர்ட் எல்லாம் உண்டு. இந்த நாட்டில் ஆங்காங்கே லியோனார்ட் காஸ்லியின் சிலைகளும் உண்டு. 

துவாலு (Tuvalu)  9 தீவுகளின் கூடாரம்

மொத்தப் பரப்பு: 26 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 10,959


இந்தப் பட்டியலில் மட்டுமல்ல, உலக  அரங்கிலும் இது ஒரு ஏழ்மையான நாடாகக் கருதப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் சிறப்பான முறையில் கோலோச்சிய நாடு, 2002க்குப் பிறகு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியது. ‘tv’ என்ற இணையதள டொமைன் இந்த நாட்டின் பெயரில் இருப்பதால், இப்போது அதன்மூலமாக ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர் இந்த நாட்டுக்குக் கிடைக்கிறது. இங்கே இருக்கும் 9 தீவுகளில் 8 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கிறார்கள். தென்னை மரங்கள் இங்கே ஏராளம்!

நவ்ரூ (Nauru)

குண்டு மனிதர்களின் தீவு

மொத்தப் பரப்பு: 21 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 9,591


இதுதான் உலகின் மிகவும் சிறிய சுதந்திரக் குடியரசு மற்றும் மிகச் சிறிய தீவு நாடு. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நாட்டில் பொதுப் போக்குவரத்து என்று ஒன்று இல்லை.இங்கு வாழும் அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்து கிறார்கள். சுற்றுப்புறச் சூழ்நிலைகள் சரியில்லாததால் சுற்றுலாப் பயணிகள் இங்கே எட்டிப் பார்ப்பதே இல்லை. இங்கு இருக்கும் மக்களில் 71.7 சதவிகிதம் பேர் குண்டாக இருக்கிறார்கள். இந்தத் தீவு நீள்வட்ட வடிவத்தில் இருக்கும்.பல்கலைக் கழகங்கள் போன்றவை உண்டு.

தி ப்ரின்சிபாலிட்டி ஆஃப் செபோர்கா (The Principality of Seborga)

3 பேர் கொண்ட இராணுவம்

மொத்தப் பரப்பு: 4.91 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 312


மொனாக்கோவில் இருந்து 35 கி.மீ தொலைவில் இத்தாலிக்கு அருகில் பிரான்சின் எல்லையில் அமைந்துள்ளது  இந்தச் சிறு நாடு. முடியரசாகத் திகழும் இதை இளவரசர் முதலாம் மார்ஸல்லோ ஆண்டு வருகிறார். அங்கீகரிக்கப் படாத இதற்கு  என 3 இராணுவ வீரர்கள், 2 எல்லைப் பாதுகாவலர்கள் மற்றும் ஒரு பாதுகாப்புத்துறை அமைச்சரும் உண்டு. அங்கீகரிக்கப்படா விட்டாலும், இங்கே ஒரு பிரத்யேக ஒலிம்பிக் குழு மற்றும் ஒரு கால்பந்தாட்ட சங்கம் செயல்படுகிறது.

மொலாசியா குடியரசு (The Republic of Molossia) 

ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கும் நாடு

மொத்தப் பரப்பு: 0.055 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 7


கெவின் பிராக்ஹ் என்பவரால் குடியரசு என சுய பிரகடனம் செய்யப்பட்ட இந்த மொலாசியா குடியரசு அமெரிக்காவில் உள்ள நெவாடாவில் அமைந்துள்ளது.பிராக்ஹ் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர், அவர்களின் செல்லப் பிராணிகளான 3 நாய்கள், 1 பூனை மற்றும் 1 முயல் அவ்வளவுதான். ஆனால், தவறு செய்தால் மரண தண்டனை, விண்வெளி திட்டங்கள், தனி பாஸ்போர்ட், சுங்கவரி நிலையம், வங்கி என அனைத்தும் உண்டு.

சாவ்ரின் மிலிட்டரி ஆர்டர் ஆஃப் மால்டா (Sovereign Military Order of Malta)

 மூன்றே கட்டடங்கள் கொண்ட நாடு

மொத்தப் பரப்பு: 0.012 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 1,13,500 (குடியுரிமை)


வாடிகன் நகரைப் போலவே ரோமின் மற்றுமொரு சிறிய தனிப் பிரதேசம் இந்த சாவ்ரின் மிலிட்டரி ஆர்டர் ஆஃப் மால்டா. இதில் மொத்தம் 3 கட்டடங்கள் மட்டுமே உண்டு, அதிலும் இரண்டு ரோமின் எல்லையில் முட்டி நிற்கின்றன, ஒன்று மால்டா தீவின் மேல் இருக்கிறது. இதற்கெனத் தனி நாணயங்கள், ஸ்டாம்ப்கள், மற்றும் பாஸ்போர்ட் உண்டு. ஐரோப்பா நாடுகளின் நிதியுதவியுடன் நல்லாட்சி நடைபெறுகிறது.

தி ப்ரின்சிபாலிட்டி ஆஃப் சீலாந்து (The Principality of Sealand)  கடல் மேல் இருக்கும் மேடை

மொத்தப் பரப்பு: 0.004 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 27


வடக்குக் கடலில் இருக்கும் ரஃப்ஸ் டவர் என்ற ஒரு மேடை தான் இந்த நாடு. அங்கீகரிக் கப்படாத இது இங்கிலாந்தில் இருந்து 6 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ராஜ வம்சத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரின் ஆட்சியில் இருக்கும் இதில், யார் வேண்டு மானாலும், கோமானாவோ, பிரபுவாகவோ, ஆகிவிடலாம். இந்த அரசுக்குச் சொந்தமான இணையதளத்தில் ஒரு சில பிரிட்டிஷ் பவுண்டுகளைக் காட்டினால் போதும், உங்களை அந்த நாட்டில் ஒருவராக ஏற்றுக் கொள்வார்கள். இதற்கென்று ஒரு தனி கால்பந்தாட்ட டீமே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு