பிரீமியம் ஸ்டோரி

மரமும் உயிர்களும்!

அணில் வளர்க்க ஆசைப்பட்டு
எங்கிருந்தோ பிடித்து வந்தேன்
எல்லாம் கொடுத்துக் கொஞ்சியும்
சொல்லாமல் ஓடிச்சென்றது

கிளி வளர்க்க விருப்பப்பட்டு
கூண்டினிலே பூட்டிவைத்து
பழங்கள் பலவும் தந்தும்
மறந்தவேளை பறந்துசென்றது

சுட்டி ஸ்டார் நியூஸ்

வீட்டின் பின்னால் இடத்திலே
விதையைப் போட்டேன்
மரம் வளர்ந்தது, பின்னாள்
அணில், கிளி அனைத்தும் வந்தன!

கூண்டுக்குள்ளே அடைக்க வேண்டாம்
இயற்கையைச் சுருக்க வேண்டாம்
எல்லாம் கொடுக்கும் இயற்கையை
இருகரம் விரித்து அணைத்திடலாம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

சைக்கிள் ரேஸ்... அரசுக்கு லாஸ்!

‘Tour de France’ என்பது பிரெஞ்சு நாட்டில் நடக்கும் மிகவும் பிரபலமான சைக்கிள் பந்தயம்.    1903-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கோடையிலும் மூன்று வாரங்கள் நடத்தப்படும் இந்தப் பந்தயத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. நம்ம ஊரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தால், மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி முன்பு குவிந்து, சாலைகளையும் வேலைகளையும் வெறுமையாக்கிவிடுவார்கள். அதுபோல இந்தப் போட்டி நடக்கும் மூன்று வாரங்களும் அங்கே பல்வேறு துறைகளில் வேலையே ஓடுவதில்லை. இதனால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாக அரசு சொல்கிறது. ஆனாலும், இந்தப் போட்டி கொண்டாட்டமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சு.லலிதா ஸ்ரீநிதி,
இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி,
புதுக்கோட்டை.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒயிட் ஸ்ட்ராபெர்ரி!

ஸ்ட்ராபெர்ரி என்றதும் சுண்டியிழுக்கும் சிவப்பு நிறம் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளை ஸ்ட்ராபெர்ரியும் இருக்கிறது. ஜப்பானின் விலையுயர்ந்த பழங்களில் இதுவும் ஒன்று. ஒயிட் ஜுவல் ஸ்ட்ராபெர்ரி எனப்படும் இந்தப் பழத்தை நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து உருவாக்கியிருக்கிறார்கள். பழத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வெள்ளையாக இருக்கும். சாதாரண ஸ்ட்ராபெர்ரிகளைவிட உருவத்தில் பெரியது. நிழலிலேயே விளைவிக்கப்படும் இந்தப் பழம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் சுமார் 650 ரூபாய்.

அ.ஜாவித் அஹ்மத்,
மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

தலைகீழ் அதிசயம்!

நதி, அருவி என்றாலே தரையோடு தரையாக தவழ்ந்து செல்வதையும், மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாய்வதையும்தானே பார்த்திருப்பீர்கள்? ஆனால், கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் நதிகளும் அருவிகளும் உண்டு. அதில் ஒன்று நம் இந்தியாவில் இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் சிங்கஹாட் என்ற மலைப்பகுதியில் இந்த அதிசயத்தைப் பார்க்கலாம். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கு சென்றால், கீழிருந்து மேல் நோக்கி  தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுவதைக் கண்டு ரசிக்கலாம். இதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள். இதுபோல உலகம் முழுக்க பல இடங்களில் உண்டு. இதற்குக் காரணம் காற்றின் அதிக அழுத்தமே. கீழிருந்து மேல் நோக்கி அதிக அழுத்தத்துடன் வீசும் காற்று கொட்டும் அருவியை அப்படி ரிவர்ஸ் கியர் போடவைக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

அணில் சரணாலயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும், தமிழக அரசின் சின்னமான கோபுரமும் கோயிலும் நினைவுக்கு வரும். அங்கே மற்றொரு அழகான முக்கியமான விஷயமும் இருக்கிறது. அதுதான் சாம்பல் நிற அணில்களுக்கான வனவிலங்கு சரணாலயம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகத் தோப்பு வனப்பகுதியில் 480 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தச் சரணாலயம் உள்ளது. சாம்பல்நிற அணில்களை ‘நரை அணில்’ (Grizzled Squirrel) என்றும் சொல்வார்கள். சாம்பல் நிற முதுகுப் பகுதி, இளஞ்சிவப்பு மூக்கு, அடர்த்தியான முடியுடன் நீண்ட வால் எனப் பார்க்கும்போதே மனதைச் சுண்டி இழுக்கும் அணில்களை இங்கே பார்க்கலாம். மலையடிவாரங்களில் உள்ள காடுகளில் உள்ள புளிய மரங்களில் வாழும் இவை, பெரும்பாலும் மரங்களின் உச்சியிலே வாசம் செய்யும். மிக அரிதாகவே தரைக்கு வரும். ஒரே தாவலில் 20 அடி தூரம் தாண்டும் இவை, 14 ஆண்டுகள் வாழும். அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான இவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்தச் சரணாலயம் 1989-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பறக்கும் அணில், புலி, சிங்கவால் குரங்கு, புள்ளிமான் உள்பட பல விலங்குகளையும் இங்கே காணலாம். ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பக்கம் வந்தால், இங்கே ஒரு விசிட் செல்ல மறக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

தங்க மீன்

தகதகவென மின்னியவாறு வாலை ஆட்டி நீந்திவரும் தங்கமீனைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது? உலக அளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுள் முக்கியமானது தங்கமீன். சீனாதான் தங்கமீன்களின் தாயகம். அங்கிருந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கு வந்தன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, சீனர்களின் செல்லமாக இருந்த தங்கமீன்கள் மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும் ஆற்றல் உடையது. நல்ல சூழலும் பராமரிப்பும் இருந்தால், ஏழு ஆண்டுகள் வரை வாழும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

ட்ரின் ட்ரின் மிதிவண்டி

போக்குவரத்து அதிகரிப்பால் ஏற்படும் மாசு குறைபாட்டைத் தடுக்க, இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், மைசூரில் ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது கர்நாடக அரசு. அதன் பெயர், ‘ட்ரின் ட்ரின்’. உலக வங்கி உதவியுடன் நகர்ப்புற நிலப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் மைசூர் மாநகராட்சியும் இணைந்து இந்தத் திட்டத்தைத் செயல்படுத்துகிறது. அதன்படி, மைசூர் முழுவதும் 45 மிதிவண்டி நிலையங்களில் 450 மிதிவண்டிகள் இருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறவர்களிடம் 350 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பதிவுச் செலவு மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் போக, மீதி 250 ரூபாய் பாதுகாப்பு வைப்புத்தொகையாகத் திரும்பிச் செலுத்தப்படும். மைசூரில் இருக்கும் ஆறு பதிவு மையங்களில் எதிலாவது உறுப்பினராகச் சேரலாம். அவர்களுக்கு அடையாள அட்டை தரப்படும். அந்த அட்டையை மிதிவண்டி நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி மிதிவண்டியை எடுத்துக்கொள்ளலாம். அங்கே எடுத்த மிதிவண்டியை நீங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அருகில் இருக்கும் மிதிவண்டி நிலையத்தில் விட்டுவிடலாம். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இவை கண்காணிக்கப்படும். இத்திட்டத்தினால் காற்று மாசுபடுவது குறைவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும். இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்

சபாஷ் சார்லி!

அன்று சார்லியின் பத்தாவது பிறந்தநாள். லண்டன் தேசிய அருங்காட்சியகத்துக்கு அம்மாவுடன் சென்றான். அங்கிருந்த டைனோசர் மாதிரிகளையும் தகவல்களையும் ஆவலுடன் கவனித்த சார்லி, ‘‘இங்கே ஒரு டைனோசரின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது’’ என்றான். அம்மாவோ, ‘சிறந்த நிபுணர்களால் அமைக்கப்பட்ட லண்டன் அருங்காட்சியகத்தில் இப்படி ஒரு தவறு நடக்க வாய்ப்பே இல்லை’ என்றார். சார்லி விடுவதாக இல்லை. ‘‘எனக்கு நன்றாகத் தெரியும். ஓவிராப்டர், அசைவ உண்ணி என்று எழுதப்பட்டுள்ளது. இது, புரோட்டோசெராடாப்ஸ் (Protoceratops) தாவர உண்ணி” என்ற சார்லி, அந்த அருங்காட்சியக ஊழியரிடம் சொன்னான். அவர் சொன்னபடி, புகாரை இமெயில் செய்தான் சார்லி. ஒரு சில நாளில் பதில் மெயில் வந்தது. ‘தவற்றைச் சுட்டிக்காட்டிய சார்லிக்கு வாழ்த்துகள். உடனடியாகத் திருத்திவிடுகிறோம். சார்லிக்கு நன்றி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சார்லி பற்றிய செய்தி உலகம் முழுவதும் பரவி, பாராட்டுகளைக் குவித்துவருகிறது. ஒரு முக்கியமான விஷயம், Asperger syndrome என்ற கற்றல் குறைபாடு உடையவன் இந்த சார்லி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு