Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - எல்விரா - எலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அழிய விடல் ஆகாது பாப்பா! - எல்விரா - எலி
அழிய விடல் ஆகாது பாப்பா! - எல்விரா - எலி

ஆயிஷா இரா.நடராசன்

பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - எல்விரா - எலி

ன்புள்ள நண்பர்களே... நலமா.

நான்தான் எல்விரா - பழுப்பு எலி. கிழக்கு மலைத்தொடரிலிருந்து, அதாவது சேலம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறேன். நாங்கள், இங்கு நலமில்லை நண்பர்களே. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு நாள்களுக்கு எங்கள் இனம் உயிரோடு மிஞ்சுமோ... எனும் அச்சத்தில் இதைப் பதற்றத்தோடு எழுதுகிறேன்.

ராட்டஸ் எல்விரா எல்லர்மன் (Rattus elvira ellerman) என்னும் உயிரியல் பெயர்கொண்ட தனி இனமான எங்கள் எல்விரா  எலி இனம், உலகிலேயே கிழக்கு மலைத்தொடர்ப் பகுதியில் மட்டுமே காணப்படும் விசேஷ இனம். 230 முதல் 380 மீட்டர்கள் உயரத்தில் மலை எலி எனும் சிறப்பு அந்தஸ்தோடு ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்தோம்.

சுண்டெலிகளோடு எங்களைச் சேர்க்க முடியாது. ஏனெனில், அவற்றுக்கு மலைப் பாறைகளை எங்களைப்போலத் துள்ளிக்குதித்துத் தாவிடத் தெரியாது. ஆனால், எலி இனத்திலேயே மிகவும் சிறியவர்கள் நாங்கள்தாம் என்கிறது உயிரியல்.

எங்களது தலை நுனி முதல் உடல் முடிவு வரை வளர்ந்த எலியே 149 மில்லி மீட்டர் நீளம்தான். வாலையும் சேர்த்தால், 196 மில்லி மீட்டர். இரு நிறம்கொண்ட வாலும், பழுப்பும் சாம்பல் நிறமும் கலந்த உடலும், எலிகளிலேயே அழகு நாங்கள்தாம் என்பதைச் சொல்லும். ‘டாம் அண்டு ஜெர்ரி’ பார்த்திருப்பீர்கள். அதில் வரும் ஜெர்ரி எலி, எங்கள் நிறம்தான். இன்று நாங்கள் மொத்தமாக 176 பேர் மீதமிருப்பதாக உலக உயிரியல் பாதுகாப்பு நிறுவனம் IUCN அறிவித்துள்ளது.

அழிய விடல் ஆகாது பாப்பா! - எல்விரா - எலி

மலை எலி எனத் தமிழக மக்கள் அழைத்த இனம். விநாயகருக்குத் தோழமை வாகனமாய்த் தொழப்பட்டவர்கள், இன்று பேரழிவின் விளிம்பில் இருக்கிறோம். மலைகளை அழித்து வாழிடங்கள் ஆக்குவதுமுதல், சேலத்தில் கிடைக்கும் இரும்புத் தாதுக்கள் வெட்ட எடுக்கப்பட்ட பாறைச் சில்லுகளைக் கொட்டி நிரப்புவதுவரை, பல காரணங்களால் எங்கள் இனம் அழிந்துவிட்டது. நாங்கள் வயல்வெளிகளில் பயிர்களை அழிப்பவர்கள் அல்ல.

எந்த உணவுப் பண்டசாலைக்குள்ளும் நுழைந்து, எதையும் திருடி உண்பவர்களும் அல்ல.

மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நாங்கள் ஒருபோதும் சென்றதில்லை.

எங்களை ஆய்வுக்கூடங்களில் வளர்க்கவோ அல்லது ஆய்வுகளுக்கு உட்படுத்தவோ முடியாது.

மலைகளே எங்களுடைய வாழிடங்கள். அங்கே, மரப்பொந்துகளும் பாறை இடுக்குகளும், புதர் மண் துளைகளுமே எங்கள் வசிப்பிடங்கள். தாவர இனப்பெருக்கம் முதல் பாம்பு, பருந்து என ஒரு நீண்ட உயிரினத் தொகுப்பில் நாங்கள் ஓர் அங்கம் நண்பா.

‘எங்களின் அழிவு, மலைக்காடுகளின் அழிவையே பறைசாற்றுகிறது’ என்று அர்த்தம்.

எனவே, உங்கள் சந்ததிகள்தாம் எங்களைக் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னபடி, காடுகளை அழிக்கும் செயல்களை முற்றிலும் குறைக்க வேண்டும். இரும்புத்தாது எடுக்கும் பாறைப் புழுதிகளைக் கொட்ட வேறு வழிகளைத் தேட வேண்டும். கிழக்கு மலைத்தொடரைக் காப்பாற்றும் இயக்கத்தை ஆதரித்து, எங்களையும் காப்பாற்றுங்கள். உங்களை நம்பி இந்த வேலையை ஒப்படைக்கிறோம்.

இப்படிக்கு
எல்விரா - எலி
சேலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு