Published:Updated:

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!
பிரீமியம் ஸ்டோரி
காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

Published:Updated:
காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!
பிரீமியம் ஸ்டோரி
காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!
காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

ந்திய தேசத்தந்தை என்று புகழப்படும் மகாத்மா காந்தி இந்திய நாட்டின் விடுதலைக்காகக் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் மனிதர். உண்மை, நேர்மை, அகிம்சை, சத்தியம் ஆகியவற்றை ஆயுதங்களாகக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்து அறப்போர் புரிந்தவர். இறுதியில் தேச ஒற்றுமைக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தவர். அவருடைய பிறந்தநாள் அக்டோபர் 2. அதையொட்டி காந்திஜி பற்றி மறக்க முடியாத நினைவுகளில் சில...

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. காந்தி ஜெயந்தி

 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்து இதோ 150 வருடங்கள் ஆகப்போகின்றன. இன்றிலிருந்து சரியாக 148 வருடங்களுக்கு முன்பு 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘2’ ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார். அப்பா கரம் சந்த் காந்தி போர்பந்தரில் திவானாக இருந்தார். அம்மா புத்திலிபாய் ரொம்பவே கடவுள் பக்தி உடையவர். தன் குழந்தைகளையும் அதுபோலவே வளர்க்க வேண்டும் என்பதில் படு ஸ்ட்ரிக்ட்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

2. எளிமையைக் கற்றது, அன்னை வளர்ப்பினிலே

காந்திஜி அமைதியை விரும்பினார் என்பதும், சாந்தியையும் சமாதானத்தையும் விரும்பினார் என்பதும் நமக்குத் தெரியும். இதற்கெல்லாம் காரணம், காந்தியின் அம்மாதான். மிகவும் எளிமையான வாழ்க்கையையே விரும்பினார். நகைகளுக்கோ ஆடை அலங்காரத்துக்கோ புத்திலிபாய் ஆசைப்பட்டதே இல்லை.

3. பள்ளியில் படிக்காத பாடங்கள்

 காந்திஜி பள்ளிக்கூடத்தில் வரலாறு, புவியியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் மொழிப்பாடமாக குஜராத்தியைப் படித்தார். ப்ராக்ரஸ் கார்ட் எப்போதுமே ஆவரேஜ்தான் காட்டும். ஆனால் அவர் பள்ளிக்காலத்தில் வகுப்பறையைத் தாண்டிக் கற்றுக்கொண்டது ஏராளம். நிறைய புத்தகங்கள் படிப்பார். புராணக்கதைகளும் கதை மாந்தர்களும் காந்தியை அதிகம் கவர்ந்தனர். அந்தக் கதை மாந்தர்கள் போலவே தானும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் படித்த புத்தகங்களே அவருக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

4. இசைஞானி

இங்கிலாந்துக்குச் சென்று சட்டம் பயின்றபோது, பாடப்புத்தகங்களைத் தாண்டி வேறு நுண்கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நுண்கலைகள்தான் மனச்சோர்வைப் போக்கும் என்பது அவர் எண்ணம். முதலில் டான்ஸ் க்ளாஸில் சேர்ந்தார். அந்த ஆட்டம் நமக்கு ஒத்துவராது என்று தெரிந்து கொண்டபின், வயலின் வகுப்பில் சேர்ந்து வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால் தன் படிப்புக்காக வீட்டில் கொடுத்த பணத்தில் சிக்கனம் செய்து வயலின் வகுப்புக்கு ஃபீஸ் கட்டினார். இப்படித்தான் படிக்கிற காலத்தில் காந்தி வெரிகுட் பாய்.

5. வேலை கிடைச்சிடுச்சு

 லண்டனில் படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பியவுடன் பல மாதங்கள் வி.ஐ.பி-யாகத்தான் இருந்தார் (ஆமாம். வேலை இல்லா பட்டதாரி). குஜராத்தில் தங்கி வேலை தேடினார். வேலை கிடைக்கவில்லை. பம்பாய்க்குச் சென்று பல நாள்கள் வேலை தேடி அலைந்தார். படித்த காலங்களை விட வேலைதேடி அலைந்த காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார் காந்திஜி. அப்போது தான் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ‘அப்துல்லா அண்ட் கோ’ என்ற ஒரு வணிக நிறுவனத்தில்   வேலைக்கு ஆஃபர் கிடைத்தது. அந்த வேலையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை காந்திஜிக்கு. 1893-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார்.

6. கருப்புதான் காந்திக்குப் பிடிச்ச கலரு

 தென் ஆப்பிரிக்காவுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது, அங்கு நிறவெறி தலை விரித்தாடியது. கருப்பினத்தவர் களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. இந்தியர்கள் பிரிட்டிஷ்காரர்களின் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காகத் தென் ஆப்பிரிக்காவுக்குக் குடி பெயர்ந்திருந்தார்கள். அங்கு தோட்டத் தொழில் பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்கள் நிற வெறியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியர்களையும்  கருப்பினத்தவர்களையும் ஆங்கிலேயர்கள் ‘கூலி’ என்று அழைத்து அசிங்கப்படுத்திக் கொணடிருந்தார்கள். காந்திஜி இந்தியர்களுக்கு ஆதரவாகப் பணி புரிய ஆரம்பித்தார். `கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு' என்று இநதியர்களைக் கட்டிக்கொண்டார்.

7. நேட்டால் இந்திய காங்கிரஸ்

 காந்தி தென் ஆப்பிரிக்காவில் வசித்த இடம் நேட்டால். இந்தியர்களின் உரிமைக்காக ‘நேட்டால் இந்திய காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார் காந்தி. இது பெயர் அளவுக்கான அமைப்பு இல்லை. பேரளவு அமைப்பாக வேலைசெய்தது. அமைப்பின் செயலாளராக இருந்த காந்தி மிகவும் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்தார். இந்தியர்களின் அவல நிலையைப் பற்றி அரசாங்கத்துக்கும் மற்ற அலுவலர்களுக்கும் கடிதம் எழுதினார். அதிகாரிகளைச் சென்று பார்த்தார். இவரது தீவிரச் செயல்பாடுகளால் பத்திரிகை உலகம் பரபரப்பானது. `டைம்ஸ் ஆப் லண்டன்', ‘இங்கிலீஷ் மேன்'போன்ற பத்திரிகைகள் காந்தியின் செயல்பாடுகள் பற்றிச் செய்தி வெளியிட்டு, இந்தியர்களின் நிலைமையை வெளி உலகுக்குக் காட்டின.

8. ஏன் சத்யாகிரகத்தை  நம்பினார்?

காந்திஜியின் சத்யாகிரக சாதனம்தான் இந்தியாவின் போராட்ட முகத்தை முழுவதுமாக மாற்றிப்போட்டது. சத்யாகிரகம் என்பது அடுத்தவர்களைக் காயப்படுத்தும் வேலை அல்ல. மாறாக மற்றவர்களின் மனதை இளக வைப்பது என்றார் காந்திஜி. இதன்மூலம் எதிரிகளை எளிமையாக வென்று விடலாம் என்பது அவரின் நம்பிக்கை. சத்யாகிரக கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கறாராக இருந்தார் காந்தி. தன் உடைகளைத் தானே துவைப்பது, தானே நகம் வெட்டிக்கொள்வது, முடி திருத்திக்கொள்வது என்று தன்னைத்தானே சார்ந்து சத்யாகிரகிகள் இயங்க வேண்டும் என்றார்.

9. காந்தி ரிட்டர்ன்ஸ்

1915-ஆம் ஆண்டு தன் குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார் காந்தி. வரும் போதே ஒரு ஹீரோ மாதிரிதான் என்ட்ரி ஆனார். (உண்மையில் ஹீரோதானே). வெளிநாட்டில் சாதித்துக் காட்டியவர் அல்லவா? அதனால் இந்தியாவில் அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் நிலை பற்றி அவருக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் உடனடியாக அவர் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கிவிடவில்லை. குஜராத்தில் உள்ள சபர்மதியில் ஆஸ்ரமம் ஒன்று அமைத்து 200 சத்யாகிரகிகளுடன் தங்கினார். எளிமையான வாழ்க்கையுடன் சமூக சேவை ஆற்றியது ஆஸ்ரமம். ஆஸ்ரம வாசிகளுக்கு நெசவுதான் முக்கியப் பணி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

10. குரு - கோபால கிருஷ்ண கோகலே

 தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கோகலே பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார் காந்தி. கோபால கிருஷ்ண கோகலேயின் எளிமையும் நடவடிக்கைகளும் காந்திக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவுக்கு வந்தவுடன் கோகலேயை நேரில் சென்று பார்த்தார் காந்தி. இந்தியாவின் நிலைமை குறித்துக் காந்தியிடம் விவரித்தார் கோகலே. மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சத்யாகிரக முறையைப் புகுத்தி உடனேயே போராட்டத்தில் இறங்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டார் கோகலே. பின்னாளில் கோகலே பற்றி காந்திஜி குறிப்பிடும்போது, “கோகலே எனக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்து ஆதரித்தார்” என்று எழுதுகிறார்.

11. சாம்பரன் சாதனை

 1918-ஆம் ஆண்டு பீகார் மாநிலம் சாம்பரன் என்ற இடத்தில் நடந்த போராட்டம்தான் காந்திஜியின் முதல் இந்தியப் போராட்டம். முதல் போராட்டமே முத்தாய்ப்பாக அமைந்துவிட்டது. சாம்பரன் பகுதியில் ‘அவுரி’ என்கிற நீலச்சாய செடியைப் பயிரிடச் சொல்லி விவசாயிகளை ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லை, அவ்வாறு பயிரிடப்பட்ட செடியைக் குறைந்த விலைக்கே தங்களிடம் விற்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இது பகல் கொள்ளை அல்லவா? களத்தில் இறங்கினார் காந்தி. சத்யாகிரக சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார் காந்தி. காந்தி யுத்தம் வென்றது. ஆங்கிலப் பண்ணையார்களை அடக்கி வாசிக்கச்சொல்லி அரசு உத்தரவு போட்டது. சாம்பரன் வெற்றி காந்திஜிக்குப் பெயரையும் புகழையும் தேடித் தந்தது.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

12. கிலாபத் கிளர்ச்சி

 முதல் உலகப் போரின்போது துருக்கி தோற்கடிக்கப்பட்டது. துருக்கியிலிருந்த `முஸ்லீம் உதுமானிய துருக்கிய அரசு' வீழ்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலிருந்த முஸ்லீம்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். துருக்கிய முஸ்லீம்களுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார்கள். இந்தியாவில் அப்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மதச் சகிப்பின்மை நிலவியது. எப்போதும் ஒற்றுமையை வேண்டும் காந்திஜி கிலாபத் இயக்கத்தை ஆதரிப்பதன்மூலம் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று நினைத்து, பல எதிர்ப்புகளுக்கிடையே கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார். இதனால் முஸ்லீம்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார் காந்திஜி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

13. “உங்களுடன் சேர மாட்டோம்”

 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப்பிறகு 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்த போராட்டம், இது. வெளிநாட்டுப் பொருட்களை மறுத்து உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆங்கில அரசு கொடுத்த வேலைகளை உதறித் தள்ளுவது, ஆங்கிலேயரின் பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிப்பது என்று போராட்டத்தின் முகங்கள் பெரும்பாலான மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

14. இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்

 இளைஞர்களுக்கு சத்யாகிரகப் போராட்டம் பற்றிக் கற்பிக்க விரும்பிய காந்திஜி `யங் இந்தியா' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அகிம்சை பற்றியும் வன்முறையற்ற போராட்டங்களை நடத்தும் வழிமுறைகள் பற்றியும் `யங் இந்தியா'வில் எழுதி வந்தார் காந்திஜி. அதுமட்டுமல்லாமல் ‘நவஜீவன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். 1933-ஆம் ஆண்டு கடவுளின் குழந்தைகள் என்று பொருள்படும் `ஹரிஜன்' என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

15. சௌரி சௌரா சம்பவம்

 ஒத்துழையாமை இயக்கம் நன்றாக நடந்து கொண்டிருந்தபோது காந்திஜி எதிர்பாராத விதமாக அந்தச் சம்பவம் நடந்துவிட்டது. 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் சௌரி சௌரா என்ற இடத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைத்ததுடன் 22 போலீஸ்காரர்களைக் கொன்றுவிட்டார்கள். காந்தி மிகுந்த மன வேதனைப்பட்டார். இப்படி வன்முறை வழியில் போராடுவது சரியில்லை என்று கூறி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டார்.

16. கைதானார் காந்தி

 ஒத்துழையாமை இயக்கத்தில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து 1922-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார் காந்தி. ஆங்கில அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் என்று கூறி ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜியின் கைது என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆங்கில அரசு யோசிக்கவே செய்தது. இருந்த போதும் காந்தியைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தது ஆங்கில அரசாங்கம். சிறையிலிருந்த நாட்களை அதிகமான புத்தகங்கள் படிப்பதற்கும் கை ராட்டினத்தை வைத்து நூல் நூற்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார் காந்தி. 1924-ஆம் ஆண்டு, ‘குடல் வால்’ அறுவை சிகிச்சைக்காக விடுதலை செய்யப்பட்டார் காந்தி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

17. வைரக்கல் ஆன உப்புக்கல்

காந்திஜியின்  போராட்டங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம் உப்புச் சத்யாகிரகம். ஐரோப்பிய நாடுகளில் ஒரு காலத்தில் மீசை வைத்தால் வரி, தாடி வைத்தால் வரி என்றெல்லாம் சட்டம் இருந்தது. அதுபோல அனைத்து மக்களும் பயன்படுத்தி வரும் உப்பு மீது ஆங்கில அரசு வரி விதித்தது. இதனை எதிர்த்து காந்தியடிகள் 1930-ஆம் ஆண்டு சட்ட மறுப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து பாதயாத்திரையாக 400 கி.மீ தூரம் நடந்து தண்டிக் கடற்கரையை அடைந்தார். வழி நெடுக வந்து வரவேற்ற மக்கள் உப்புச் சத்யாகிரகத்தை வெற்றிபெறச் செய்தனர்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

18. காந்தி - இர்வின் ஒப்பந்தம்

பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராயாக இருந்த இர்வின் 1931-ஆம் ஆண்டு காந்திஜியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1930-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த முதல் வட்ட மேஜை மாநாட்டில் காந்திஜி கலந்து கொள்ளவில்லை. 1931-ஆம் ஆண்டு இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்திஜியைப் பங்கேற்க வைக்க வேண்டும். சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட வைக்க வேண்டும். இதுதான் இர்வின் பேச்சுவார்த்தையின் நோக்கம். இதைப் பயன்படுத்தி உப்பு வரியை நீக்குவது, உப்புக்காய்ச்ச அனுமதி, தலைவர்கள் விடுதலை, இந்தியர் உரிமைகள் பாதுகாப்பு என்று நிறைய விஷயங்களை நிறைவேற்றிக்கொண்ட பின்னரே இர்வினுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் காந்தி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

19. சிறகு விரித்த சிறைப்பறவை

 இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் இந்திய நன்மைக்காக எதுவுமே நடக்காத நிலையில் வெறும் கையுடன் திரும்பி வந்தார் காந்திஜி. இந்தியா திரும்பியவுடன் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் “நான் வெறும் கையுடன் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால் இந்தியர் நலன்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை”என்றார் உணர்ச்சிபூர்வமாக. மீண்டும் போராட்டம் வெடிக்கலாம் என்று நினைத்த ஆங்கில அரசு காந்திஜியைக் கைதுசெய்து ‘எரவாடா’ ஜெயிலில் அடைத்தது. அதற்கு முன்பே, நேரு உள்ளிட்ட தலைவர்களை முன் எச்சரிக்கையாகக் கைது செய்துவிட்டது.

20. கிரிப் கொடுக்காத கிரிப்ஸ்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்துக்கு எதிராகத் தீவிரத்தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் எப்படியாவது இந்தியாவின் உதவியைப் பெறத் துடித்த இங்கிலாந்து, 1942-ஆம் ஆண்டு சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. அப்போதும்கூட கிரிப்ஸ் சுதந்திரத்தைப் பற்றிப் பேசாமல், போருக்குப்பிறகு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று கூறினார். எனவே காந்தியடிகள் கிரிப்ஸ் சலுகையை “திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று சொல்லி நிராகரித்தார்.

21. வெள்ளையனே வெளியேறு

கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி காந்தியடிகளின் போக்கில் மாற்றத்தைக்கொண்டு வந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே போனது. இதே நிலைமை நீடித்தால் இந்தியாவை ஜப்பான் கைப்பற்றக் கூடும் என்று நினைத்தார் காந்தி. எனவே 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-இல் காங்கிரஸ் செயற்குழு கூடியது. ஆங்கிலேயர்கள் உடனடியாக இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தையும் அறிவித்தது. காந்திஜி சொன்ன `செய் அல்லது செத்து மடி' என்ற ஸ்லோகம் இந்தியாவெங்கும் மோதி எதிரொலித்தது. அடுத்தநாளே காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத் போன்ற முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் கலவரம் வெடித்தது.

22. கஸ்தூர்பா காலமானார்

1883-இல் காந்திஜியோடு இணைந்த கஸ்தூர்பா 1944-இல் மறைந்துவிட்டார். எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்த கஸ்தூர்பாவுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தார் காந்திஜி. தன் மனைவியை ‘பா’ என்று செல்லமாக அழைப்பார் காந்திஜி. காந்திஜியின் எல்லாப் போராட்டங்களிலும் உறுதுணையாக இருந்தவர் கஸ்தூர்பா. போராட்டங்களில் தன்னை விருப்பத்துடன் இணைத்துக் கொண்டு போராடினார். காந்தி கைது செய்யப்படும் போதெல்லாம், வெளியே இருந்து காந்தியின் பணிகளை மேற்கொண்டவர். 1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டதால் சிறை வைக்கப்பட்ட கஸ்தூர்பா 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி காந்தியின் மடியில் உயிர் துறந்தார். இது காந்தியின் சொந்த வாழ்க்கையை அதிகம் பாதித்து விட்டது. கஸ்தூர்பா இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை என்று உருகினார் காந்திஜி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

23. சுதந்திர தின விழாவில் காந்தி ஏன் கலந்து கொள்ளவில்லை?

 1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரமடைந்தது. சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டன. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் அப்போது காந்திஜி இந்தியப் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த கல்கத்தாவில் தங்கியிருந்தார். மக்களிடையே வகுப்பு வாதக் கலவரங்களை முடிவுக்குக்கொண்டு வருவதற்காக வழிபாட்டுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அதனால் அவர் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

24. காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம்

 அது 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி காந்திஜி தன்னுடைய உண்ணா விரதத்தைத் தொடங்கினார். அதுவே அவரது வாழ்நாளின் கடைசிப் போராட்டமாக அமைந்தது. மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்களைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர் இந்தச் சாகும் வரையிலான உண்ணா விரதத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 78. இதனால் அவரது உடல் சீக்கிரமே உருக்குலைந்து போனது. பல தலைவர்களும் காந்தியிடம் சமாதானம் பேசினர். அரசியல் தலைவர்களும் மதத்தலைவர்களும் கலவரங்களைக் கட்டுப்படுத்த உறுதியளித்த பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் காந்திஜி.

25. காற்றில் கலந்த காந்திஜி

 அந்தத் துயரமான சம்பவம் நடந்தது, 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மாலை ஐந்தே கால் மணி. பிரார்த்தனை மைதானத்துக்கு வந்து கொண்டிருந்தார். நடப்பதில் அவருக்குச் சிரமம் இருந்ததால் உதவிக்கு வரும் பெண்களுடன் வந்து கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் வழிபாட்டுக்காகக் கூடியிருந்தனர். காந்தி மேடையில் ஏறி மக்களைப் பார்த்து வணங்கினார். திடீரென்று கூட்டத்தில் நுழைந்த நாதுராம் கோட்சே என்கின்ற இளைஞன் காந்திமுன் மண்டியிட்டு துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டான். ‘ஹேராம்’ என்று உச்சரித்தபடியே காந்திஜி மயங்கிச் சரிந்தார். எல்லாம் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. காற்றில் கரைந்து விட்டார் மகாத்மா காந்திஜி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

26. இருள் சூழ்ந்தது

“நம்மை விட்டு ஒளி மறைந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து நிற்கிறது” - காந்திஜி மறைந்தவுடன் கண்ணீர் மல்க நேரு குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. ஜனவரி மாதம் 31-ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடந்தன. தான் இறந்த பிறகு தன் உடலைப் பாதுகாக்கக் கூடாது, குடும்ப வழக்கப்படி எரியூட்ட வேண்டும் என்று காந்தி சொல்லியிருந்தார். அவர் விருப்பப்படியே யமுனைக் கரையில் காந்திஜியின் உடல் எரியூட்டப்பட்டது.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

27. எட்டுக் கிலோ மீட்டர் - நான்கரை மணி நேரப் பயணம்

 காந்திஜியின் பூதவுடல் பொது மக்களின் அஞ்சலிக்காகப் `பிர்லா ஹவுஸில்' வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து யமுனைக் கரை எட்டு கிலோ மீட்டர். காந்தியின் இறுதிப் பயணம் முப்படை மரியாதையுடன், இருநூறு வீரர்கள் சூழத் தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க “மகாத்மா காந்திக்கு ஜே'' என்று முழங்கினார்கள். மக்கள் வெள்ளத்தில் நகர்ந்து நகர்ந்து எட்டுக் கிலோ மீட்டர் தூரத்தை அடைய நான்கரை மணி நேரம் எடுத்துக் கொண்டது. காந்திஜியின் மூன்றாவது மகன் ராம் தாஸ் காந்தி சிதைக்குத் தீ மூட்டினார்.

28. காப்பி அடிக்க வேண்டிய ‘காப்பி அடிக்காத பண்பு’

 இந்தச் சம்பவம் பெரும்பாலும் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கலாம். காந்தி படிப்பில் படுசுட்டி இல்லை. சராசரி மாணவர்தான். படிப்பில்தான் சராசரி. ஆனால், பண்பில் அபவ் ஆவரேஜ். 1887-ஆம் ஆண்டு பாம்பே பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மெட்ரிக் படிப்பபை முடித்தார். பள்ளிக்கூடத்தில் ஒருமுறை தேர்வெழுதிக்கொண்டிருக்கும்போது பள்ளி ஆய்வாளர் வந்துவிட்டார். அந்தச் சமயம் பார்த்து காந்தி ஒரு ஆங்கில வார்த்தையைத் தவறாக எழுதியிருந்தார். அப்போது ஆசிரியர் காந்தியைப் பக்கத்திலிருக்கும் மாணவனைப் பார்த்துத் தவற்றைத் திருத்துமாறு சைகை செய்தார். காந்தி மறுத்துவிட்டார். மதிப்பெண் குறைந்தாலும் காப்பி அடிக்க மாட்டேன் என்ற பண்பைக் காந்தியடிகளிடமிருந்து நாம் காப்பி அடிக்கலாம் அல்லவா?

29. காந்தி கல்யாண வைபோகமே

 அப்போதெல்லாம் சிறு வயதுத் திருமணங்கள்தான் வழக்கத்தில் இருந்தன. இப்போது நினைத்துப் பார்த்தால் அது அதிசயமாக இருக்கும். இந்த சிறுவயதுத் திருமண வழக்கத்துக்குக் காந்தியும் ஆளானார். 13-வது வயதில் திருமணம் நடந்தது. விளையாடுவதற்கு ஏதோ ஒரு புதுத் தோழி கிடைத்திருக்கிறாள் என்பதுபோல காந்தியும் கஸ்தூர்பாவும் சேர்ந்து சிறுபிள்ளைகளாய் விளையாடத் தொடங்கிவிட்டனர்.
 
30. லண்டனில் மிரண்ட காந்தி

 சட்டம் படிப்பதற்காக லண்டனுக்குச் சென்ற காந்தி ரொம்பவே கஷ்டப்பட்டார். முதல் சிரமம் சாப்பாடுதான். காந்தி தீவிர சைவம். ஆனால் லண்டனில் அவருக்குச் சைவச் சாப்பாடு கிடைப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன. அதனால் பல நாட்கள் அவர் பட்டினியாகவே கிடந்தார். அந்நிய மொழியான ஆங்கிலமும் ஆங்கிலேயரின் நடை, உடை, பாவனைகளும் காந்தியை அதிகம் மிரளச்செய்தன. இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருந்த வெஜிடேரியன் கிளப்பில் உறுப்பினர் ஆனார். அதற்குப் பிறகுதான் ஓரளவு நிம்மதி பிறந்தது.

31. நாடகம் காட்டிய வழி..!

 ஒரு நாடகக் கம்பெனி, அரிச்சந்திர நாடகத்தை நடத்தியது. சிறு வயதில் காந்தி இந்த நாடகத்தைப் பார்ப்பதற்குச் சென்றார். அரிச்சந்திரனின் சத்தியம் தவறாத வாழ்க்கை, அதனால் அவர் பட்ட துன்பங்கள் எல்லாம் காந்தியின் மனதில் அழுத்தமாகப் பதிந்தன. பலமுறை இந்த நாடகத்தைப் பார்த்தார். ஏன் நாமும் அரிச்சந்திரன் போலச் சத்தியத்தைக் கடைப் பிடிக்கக் கூடாது? என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்டார். அரிச்சந்திரன் மாதிரியே வாழ்ந்துகாட்டினார்.

32. பயமா இருக்கு

 காந்திஜிக்குப் பயம் அதிகம். பாம்புப் பயமும் திருடர் பயமும் அதிகம். அதைவிட இருட்டைப் பார்த்தால் நடுங்கிப் போய்விடுவார். இரவு தூங்கும் போதெல்லாம் விளக்கு வெளிச்சத்திலேயே தூங்குவார். காந்தியை வளர்த்த செவிலித் தாயாக இருந்தவர் அரம்பை. இவர் காந்தியிடம் இருந்த பயத்தைப் போக்க நினைத்தார். ஒருமுறை இருட்டு அறைக்குள்போகப் பயந்த போது, அரம்பை காந்தியிடம், உனக்குப் பயம் வரும் போதெல்லாம் “ராம் ராம்” என்று சொல். அந்த ராம நாமம் உன் பயத்தைப் போக்கிவிடும் என்றார். ராம நாமத்தை உச்சரிக்கும் பழக்கம் காந்திக்கு இப்படித்தான் தொடங்கியது.

33. ரீ சைக்கிள்..!

 எந்த ஒரு பொருளையும் வீணடிக்க காந்திஜிக்கு மனசே வராது. அவருக்கு வரும் கடிதங்களின்மேல் உறைகளை அழகாகப் பிரித்து எடுத்து வைத்துக் கொள்வார். கடித உறைகளின் உட்பக்கத்தில் எழுதாமல் இருக்கும் இடங்களில் குறிப்புகளை எழுதி நண்பர்களுக்கு அனுப்புவார். நண்பர்களுக்கோ பெரிய வருத்தம். “உங்கள் கடிதங்களை நாங்கள் பத்திரமாகப் பாதுகாக்கிறோம். ஆனால் நீங்களோ இப்படி ‘ஒன் சைட்’ உறையில் எழுதி அனுப்புகிறீர்களே” என்று கேட்பார்கள். கடிதத்தில் உள்ள செய்திதானே முக்கியமே தவிர, காகித உறையா முக்கியம்? என்று பதில் சொல்வார் காந்திஜி. இப்போது சொல்லுங்கள் இனிமேல் நீங்கள் எந்தப் பொருளையாவது வீணடிப்பீர்களா?

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

34. மூன்று சத்தியங்கள்!

 இந்தச் செய்தியும் நீங்கள் அறிந்திருக்கலாம். ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்பது நமக்கு நன்றாகத் தெரிந்த பழமொழி. காந்திஜி சட்டம் படிக்க இங்கிலாந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். “வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் உன்னை வெளி நாட்டுக்கு அனுப்பத் தயக்கமாக இருக்கிறது” என்றார். உடனே காந்திஜி அம்மாவுக்கு மூன்று சத்தியங்களைச் செய்துகொடுத்தார். அந்த மூன்று சத்தியங்களையும் கடைசி வரை தவறாமல் கடைப்பிடித்தார். அந்த மூன்று சத்தியங்கள் இவைதான்

1. மது அருந்த மாட்டேன்
2. மாமிசம் உண்ண மாட்டேன்
3. பெண்களைத் தீண்ட மாட்டேன்.

35. தூய்மை பாரதம்

 காந்திஜி இந்தியா வந்த போது காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் கல்கத்தாவில் நடந்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் எல்லாம் பல ஊர்களிலும் இருந்து வந்து சேர்ந்தார்கள். மாநாடு நடக்கும் இடம் ஒரே குப்பையாக இருந்தது. அங்கே கிடந்த குப்பைகளை அள்ளுமாறு ஒரு காங்கிரஸ் தொண்டரிடம் கூறினார் காந்தி. நான் ஒன்றும் அந்த வேலை பார்க்க வரவில்லை என்று சொல்லி விட்டு அந்தத் தொண்டர் அங்கிருந்து போய்விட்டார். பிறகு காந்திஜி தானே அந்தக் குப்பைகளை அள்ளத் தொடங்கினார். இதைப் பார்த்த அந்தத் தொண்டர் ஓடிவந்து தானும் சேர்ந்து குப்பைகளை அள்ளினார். தான் இருக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் காந்திஜி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

36. சத்யாகிரகம் ஆரம்பம்..!

 தென் ஆப்பிரிக்காவின் டிரான்ஸ் வால் மாகாணத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அதிக உரிமை வழங்கினால் வெள்ளையர்களின் உரிமை பறிபோய்விடும் என்று பதறியது அரசாங்கம். உடனே இந்தியர்களின் உரிமையைப் பறிக்க அந்த மாகாணத்துக்கு மட்டும் ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். இதனைக் `கறுப்புச் சட்டம்' என்று சொன்னார் காந்திஜி. மேலும் காந்திஜியின் அறிவுரைப்படி “நாம் எல்லோரும் கடவுள் சாட்சியாக இந்தச் சட்டத்துக்கு உட்படுவதில்லை, அதனால் ஏற்படும் துன்பங்களையும் பொறுத்துக்கொள்வோம்” என்று உறுதியெடுத்துக் கொண்டார்கள். உலக வரலாற்றின் முக்கியமான இந்த நிகழ்வை `பாஸிவ் ரெஸிஸ்டன்ஸ்' என்று குறிப்பிட்டனர். இதையே ‘சத்யாகிரகம்’ என்று காந்தி அழைத்தார்.

37. ஸ்வீட்டான ட்ரீட்

 தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் சத்யாகிரகப் போராட்டத்தில் அதிக ஆர்வத்துடன் கலந்துகொண்டவர்கள் தமிழர்கள். எனவே காந்திஜிக்குத் தமிழர்கள் மீது தனி அன்பு. சென்னையில் சீனிவாச அய்யங்கார் பிரபலமானவர். அவர் காந்தியைப் பாராட்டி ஒரு விருந்து கொடுத்தார். காந்தியைத் தவிர மேலும் சில பிரபலமானவர்களையும் அழைத்திருந்தார் அய்யங்கார். பிரபலங்கள் எல்லாம் ஜிலேபி, பேடா, ஐஸ்க்ரீம் கிடைக்கும் என்று நம்பி வந்தார்கள். ஆனால் விருந்தில் பரிமாறப்பட்டிருந்தவை.. தேங்காய்க் கீற்று, வேர்க்கடலை, உரித்த ஆரஞ்சுச் சுளைகள், ஆப்பிள் துண்டுகள், பேரீச்சம்பழம், பிறகு அருந்துவதற்கு இளநீர், மோர், இவை எல்லாமே காந்திஜியின் தினசரி உணவு. இது தான் அன்று அனைவருக்கும்  ஸ்வீட் ட்ரீட்டாக அமைந்தது. 

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

38. மாம்பழ ஜூஸு?   எத்தனை காசு?

காந்திஜி தங்கியிருந்த ஹரிஜன விடுதிக்கு நண்பர் ஒருவர் கூடை நிறைய மாம்பழங்களை அனுப்பியிருந்தார். அதில் சில பழங்களை எடுத்து ஜூஸ் போட்டு வந்து கொடுத்தார் ஒரு சீடர். ``ஒரு மாம்பழத்தின் விலை என்ன? இவ்வளவு ஜூஸ் தயாரிக்க எத்தனை ரூபாய் செலவாகியிருக்கும்? இவ்வளவு காஸ்ட்லியான ஜூஸ் எனக்குத் தேவையா? பல மக்கள் பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இப்படி மாம்பழ ஜூஸ் குடிப்பது நியாயமா? என்று கேள்வி மேல் கேட்டார்'' காந்திஜி. அப்போது ஓர் ஏழைப் பெண் குழந்தையுடன் வருவதைப் பார்த்து, மாம்பழச் சாற்றினை இரண்டு கோப்பைகளில் பிரித்து, ஒரு கோப்பையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு “கடவுளே என் மன வேதனையைக் குறைக்க ஓர் ஏழைப் பெண்ணை அனுப்பியதற்கு நன்றி” என்றார். எத்தனை தங்கமான மனசு…!

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

39. தாய்மொழியே என் வழி!

 ஒருமுறை பம்பாயில் வசித்து வந்த ‘ஜகாங்கீர் பெடிட்’ என்ற கோடீஸ்வரர் காந்திஜிக்கு விருந்து அளித்தார். கோடீஸ்வரரின் மாளிகையைப் பார்த்து வியந்து போனார் காந்திஜி. விருந்தில் குஜராத் மாநிலத்திலிருந்து பலர் கலந்துகொண்டார்கள். காந்திஜியைப் பேச அழைத்தார்கள். மற்றவர்கள் எல்லாம் அதற்குமுன் ஆங்கிலத்தில் பேசி அமர்ந்திருந்தார்கள். காந்திஜி பேசும்போது நான் குஜராத்தி, எனவே நான் என்  தாய்மொழியில் பேச விரும்புகிறேன். தாய் மொழியை நாம் புறக்கணிக்கலாமா? என்று கேட்டுவிட்டுத் தாய் மொழியான குஜராத்தியிலேயே பேசினார்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

40. பால் மனசுக்காரர்! 

 காந்தி வெள்ளாட்டுப்பாலை விரும்பி உண்டதாகச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். பால் கறப்பதற்காகப் பசுக்களையும் எருமைகளையும் மக்கள் துன்பப் படுத்துவதைப்பார்த்து காந்தியடிகள் மனம் நொந்து பால் சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார் காந்திஜி. ஒருமுறை காந்திஜிக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. சங்கர் லால் பாஸ்கர் என்ற நண்பர், டாக்டர் தலால் என்பவரை அழைத்துவந்து காந்திஜியின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் சொன்னார். டாக்டர் காந்திஜியின் தினமும் பால் அருந்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நான் சத்தியம் செய்திருக்கிறேன். அதை மீற மாட்டேன் என்று காந்திஜி சொல்லிவிட்டார். சரி பசும்பால், எருமைப்பால் அருந்த வேண்டாம், வெள்ளாட்டுப்பாலைச் சாப்பிடுங்கள் என்று ஒருவழியாகக் காந்தியை மற்றவர்கள் சமாதானப்படுத்தி வெள்ளாட்டுப்பாலை அருந்த வைத்தனர்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

41. கதருக்காகப் போராடியவர்!

 கதர்ப் பணியில் காந்திஜி தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 1927-ஆம் ஆண்டு பண்டித மதன் மோகன் மாளவியா, காந்திஜியைத் தன்னுடைய ‘இந்து’ பல்கலைக் கழகத்தில் வந்து உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜி பேசினார். அப்போது சில பத்திரிகை நிருபர்கள் கதராடையைப் பற்றியே எப்போதும் பேசுகிறீர்கள். ஆனால் அதனை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லையே என்று கேட்டனர். இதற்கு காந்திஜி சொன்ன பதிலுக்கு ஆயிரம் ‘லைக்’ போடலாம். “பிரகலாதானை எவ்வளவோ சித்திரவதைகள் செய்தார்கள். விஷம் கொடுத்தார்கள். ஆனாலும் அவன் நாராயண நாமம் சொல்வதை நிறுத்தினானா? இல்லையே! பிரகாலாதனையே நான் உதாரணமாகப் பயன்படுத்துகிறேன்'' என்றார்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

42. ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது

 `மனுபென்' என்ற பெண்மணி காந்திஜியுடன் இருந்தர். காந்தியிடம் பக்தியும் அன்பும் உடையவர். அவருக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு காந்திஜியுடன் ஆசிரமத்தில் வாழ்ந்தார். தினமும் காந்திஜிக்கு வரும் கடிதங்களைப் பிரித்து வைப்பார். “சக்கரர்த்திக்கு நீங்கள் பணிந்து பணிந்து கடிதம் எழுதுகிறீர்கள், ஆனால் அவர் உங்களுக்கு எப்படிப் பதில் எழுதியிருக்கிறார் என்று பாருங்கள், சிலபேர், திருந்தவே மாட்டார்கள்” என்றார் மனுபென். காந்திஜிக்கு உடனே கோபம் வந்து விட்டது. மனு, சக்கரர்த்தி பற்றிப் பேசும்போது நீ வெறுமனே சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டாய். திரு, உயர்திரு போன்ற மரியாதை மொழிகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆங்கிலேர்கள் யாரைக் கூப்பிட்டாலும் மிஸ்டர் என்று அழைக்கிறார்கள். ப்ளீஸ், தேங்க்ஸ் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

43. கோடுபோட்டு ரோடுபோட்ட காந்தி!

 வார்தாவில் இருந்த 'காந்தி ஆசிரம'த்துக்கு ரோடு அமைக்க வேண்டியிருந்தது. காந்திஜியிடம் ``ரோடுபோட வேண்டி இரண்டு மூன்று வண்டிக் கற்கள் தேவைப்படும், செலவும் ஆகும்'' என்றார் காந்தியின் உதவியாளர் மகாதேவ் தேசாய். கோடுபோட்டால் ரோடுபோடுவார் அல்லவா காந்தி. சிக்கனமாக ஒரு யோசனை சொன்னார். எல்லோரும் காலையில் நடைபயிற்சி போகிறோம், அங்கு வயல்வெளிகளில் நிறைய கூழாங்கற்கள் கிடக்கின்றன. அந்தக் கற்களை ஆளுக்குக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துவந்தால் சாலை அமைத்துவிடலாம் என்றார். மறுநாள் எல்லோரும் ‘வாக்கிங்’ போகும்போது ஆளுக்கொரு கதர்ப் பையுடன் சென்றார்கள். ஒரேநாளில் தேவையான கற்கள் சேர்ந்துவிட்டன. சத்தமே இல்லாமல் சாலை அமைந்துவிட்டது.

44. அகிம்சையின் ஆயுதம்

 முதல் உலகப் போர் தொடங்கியபோது பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் காந்திஜியை அழைத்துப் போரில் ஆங்கிலேயருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். காந்திஜியும் வல்லபபாய் படேலுடன் ஊர் ஊராகச்சென்று போருக்கு ஆள் சேர்க்க முயற்சி செய்தார். “அகிம்சை வழியைப் பின்பற்றும் நீங்கள் யுத்தத்திற்கு ஆள்சேர்ப்பது தங்கள் கொள்கைக்கு விரோதமாக இருக்கிறதே” என்று சிலர் கேட்டார்கள். காந்திஜி மிகவும் தெளிவாக இருந்தார். “இதில் என்ன விரோதம் இருக்கிறது. எந்தவிதமான ஆயுதப் பயிற்சியும் பெறாமல் இருக்கிற நமக்கு இது ஒரு வாய்ப்பு, ஆயுதப் பயிற்சிபெற முடியும். இச்சமயத்தில் நாம் செய்யும் உதவியால் ஆங்கிலேய அரசின் நம்பிக்கையைப் பெறமுடியும், முக்கியமாகத் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதும், அகிம்சையின் ஓர் அங்கம்” தான் என்றார் காந்தி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

45. காந்திஜி நடத்தி வைத்த காதல் கல்யாணம்

 காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தியும் ராஜாஜியின் மகள் லட்சுமியும் சேர்ந்து பழகி வந்தார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். இவர்களுக்கு இடையே இருப்பது உண்மையான அன்புதானா? என்று தெரிந்துகொள்ள காந்தி ஒரு டெஸ்ட் வைத்தார். ரொம்பவும், கடினடமான டெஸ்ட் அது. ஐந்து ஆண்டுகளுக்கு இருவரும் சந்திக்கவோ பேசவோ கூடாது. கடிதத் தொடர்புகூட வைத்துக் கொள்ளக்கூடாது. அதற்குப் பிறகும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக இருந்தால் திருமணம் செய்து வைப்பதாகக் காந்திஜி கூறினார். இந்த நிபந்தனையை இருவரும் ஏற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்கள். 1933 ஆம் ஆண்டு ஜீன் 16 ஆம் தேதி காந்திஜி இருவருக்கும் திருமணத்தை மிக எளிமையாக நடத்திவைத்து ஆசி வழங்கினார்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

46. தொலைந்த பேனா

 ஃபவுண்டன் பேனா ஒன்றைக் காந்தி சில ஆண்டுகள் வைத்திருந்தார். அது ஒருநாள் தொலைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாகக் காந்திக்கு வேறு ஒரு ஃபவுண்டன் பேனாவை வாங்கிக்கொடுத்தார்கள். அன்பர்கள் அழகாக இருந்தால்தானே காணாமல்போகிறது. இனிமேல் அழகான எந்தப் பொருளையும் பயன்படுத்த மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இறகுகளையே எழுதுவதற்குப் பயன்படுத்தினார். பேனா வாங்கும் செலவும் மிச்சம். யாரும் திருட மாட்டார்கள். பேனாவைத் தேடும் நேரமும் மிச்சம். எல்லாம் சரி இறகுப் பேனாவைப் பயன்படுத்தி முதலில் யாருக்குக் கடிதம் அனுப்பினார் தெரியுமா, மௌண்ட் பேட்டன் பிரபுவுக்குத்தான்.

47. றெக்க கட்டிப் பறந்த காந்திஜி சைக்கிள்

குஜராத்தி சபையில் ஒருமுறை காந்தியைப் பேச அழைத்து இருந்தார்கள். மாலை நேரம் கடந்துகொண்டிருந்தது. இடையில் தொங்கிய  கடிகாரத்தில் மணி பார்த்தார் காந்தி ஆறு மணியாகியிருந்தது. ஆறரை மணிக்குக் கூட்டம். மோட்டார் காரில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி இருந்தார்கள் இன்னும் வரவில்லை. இரண்டரை மைல் தொலைவில் இருக்கும் குஜராத்தி சபைக்கு உடனே நடக்கத் தொடங்கிவிட்டார். அந்தநேரம் பார்த்து எதிரே ‘கலேல்கர்’ என்ற இளைஞர்; சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு வேகமாக ஓட்டிச்சென்றார் காந்தி. சைக்கிளில் சென்றதால் சரியான நேரத்துக்குச் செல்ல முடிந்தது. ஏற்றுக்கொண்ட செயலில் தாமதம் ஆகாமல் செய்து முடித்தவர் காந்தி.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

48. நடைக்கு ஏது தடை?

தினமும் ஏறத்தாழ 18 கிலோ மீட்டர் தூரம் நடப்பதை வழக்கமாக வைத்திருந்தார் காந்தி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரச்சாரத்துக்காகவும் மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்காகவும் இவ்வாறு தினமும் நடந்துகொண்டிருந்தார். இப்படி 1913-ஆம் ஆண்டு முதல் 1948-ஆம் ஆண்டு வரை அவர் நடந்த தூரம் எவ்வளவு தெரியுமா? 79,000 கிலோ மீட்டர்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

49. முப்பெருங்கோயில்கள்

சாமிக்குக் கோயில் கட்டுவது மாதிரி, சாமியாக வாழ்ந்தவர்களுக்கும் கோயில் கட்டுவதுதானே முறை. இந்தியா முழுவதும் சிறியதும், பெரியதுமாகப் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் மூன்று கோயில்கள் முக்கியமானவை. ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் உள்ள கோயில். கர்னாடக மாநிலம், நிட கட்டாவில்  உள்ள கோயில். தெலுங்கான மாநிலம், சைத்யாலில் உள்ள கோயில். வாருங்கள், மாணவர்களே காந்தியை வணங்கி அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுவோம்.

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

50. வாசிப்பதற்கல்ல… வாழ்வதற்கு

1921 முதல் 1948 வரையுள்ள இந்திய வரலாறு மகாத்மா காந்தியடிகளின் வரலாறே ஆகும். அரசியல் போராட்டத்தில் சாந்தமும் சத்தியமும் தவறாமல் மிக உயர்ந்த ஆன்மீகத் துணிவைப் புகுத்தி வெற்றி கண்டவர்  உலக வரலாற்றில் காந்தி ஒருவர்தான். இவரது செயல்கள் எல்லாம், இவருக்குக் கடவுளைக் காணும் முயற்சிகளாகவும் பிறருக்குக் கடவுளை நினைவூட்டும் முயற்சிகளாகவும் அமைந்தன. தான் உபதேசம் செய்ததைவிட அதிகம் வாழ்ந்துகாட்டினார். அவரைப் பற்றிய வரலாறு, வெறுமனே வாசிப்பதற்கல்ல... பின்பற்றி வாழ்வதற்கு.

- ஆதலையூர் த. சூரியகுமார்

அட்டை ஓவியம் : மார்த்தாண்டம் ராஜசேகர்