Published:Updated:

பசலைக்கீரை பாப்பாய்!

பசலைக்கீரை பாப்பாய்!
பிரீமியம் ஸ்டோரி
பசலைக்கீரை பாப்பாய்!

கிங் விஸ்வா

பசலைக்கீரை பாப்பாய்!

கிங் விஸ்வா

Published:Updated:
பசலைக்கீரை பாப்பாய்!
பிரீமியம் ஸ்டோரி
பசலைக்கீரை பாப்பாய்!

சிறுவர்களை விடுங்கள், வீட்டிலிருக்கும் பெரியவர்கள்கூடச் சமையலில் கீரை என்றால், அவ்வளவாக விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால், காய்கறி வகைகளில் மிகுந்த இயற்கை சத்துகொண்டது கீரைதான். இந்தியாவாகட்டும் அமெரிக்காவாகட்டும் உலகிலிருக்கும் அம்மாக்கள் அனைவருக்குமே, சமைக்கும்போது இதுதான் தலையாய பிரச்னை... நாம் சமைக்கும் கீரையை எப்படி வீட்டிலிருக்கும் அனைவரையும் சாப்பிட வைப்பது என்பதுதான்?

பசலைக்கீரை பாப்பாய்!

பாப்பாய்: பாப்பாய், ஒரு காமிக்ஸ் ஹீரோ. ஏறக்குறைய ஒரு சூப்பர் ஹீரோ. ஆனால், அவனுடைய சூப்பர் சக்தி எங்கிருந்து வருகிறது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். இதுவரை நாம் பல சூப்பர் ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். ஸ்பைடர் மேன் (கதிரியக்கச் சிலந்தி கடித்ததால் வந்த விசேஷ சக்தி கொண்டவன்), சூப்பர் மேன் (அயல் கிரகவாசி என்பதால் கிடைத்த விசேஷ சக்தி), எக்ஸ் மென் வோல்வரீன் (அவனுடைய பிறப்பு சார்ந்த ரகசியம்) என்று பல சூப்பர் ஹீரோக்களை உலகம் முழுவதும் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொண்டாடிவருகிறார்கள். ஆனால், நம்மைப்போல இருக்கும் ஒருவர், (சொல்லப் போனால், நம்மைவிட பலவீனமானவராக இருக்கும் ஒருவர்) கீரையைச் சாப்பிட்டு, அதனால் அசாதாரண சக்திபெற்று சூப்பர் ஹீரோபோலச் சண்டை போடுகிறார் என்றால், எப்படி இருக்கும்... சூப்பராக இருக்குமல்லவா? அவர்தான், நம்ம கட்டுரையின் நாயகன் பாப்பாய்.

கீரைச்சாமி: இப்படி ஒரு காட்சியைக் கற்பனைசெய்துபாருங்கள். ஓர் உணவகத்தில், பயங்கரமான அடிதடி மோதல் நடந்துகொண்டிருக்கிறது. ஹீரோவைப் பத்துப் பேர் சேர்ந்து அடித்து, துணியைத் துவைப்பதுபோலத் துவைத்தெடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் அனைவரும் சேர்ந்து நம்ம ஹீரோவை கிச்சன் பக்கமாகத் தூக்கிவீசுகின்றனர். கிச்சனிலிருக்கும் பசலைக் கீரையைச் சாப்பிட்டுவிட்டு, பயங்கரமான சக்தியைப் பெறுகிறார் நம்ம ஹீரோ. உடனே அவர் திரும்பவந்து, அவரை அடித்தவர்களையெல்லாம் பந்தாடுகிறார். கீரையைச் சாப்பிடுவதன்மூலமாக உடற்பலம் மட்டுமல்ல, அவருக்கு ஷெர்லாக் ஹோம்ஸ்போல அறிவுத்திறனும் உண்டாகிறது என்பதைப் பல காட்சிகளில் காட்டுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசலைக்கீரை பாப்பாய்!

2010 -ல் அமெரிக்காவில் ஒரு பரிசோதனையைச் செய்தார்கள். அந்த நிகழ்ச்சியில் சிறுவர்களை இரு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவுக்கு பாப்பாய் கார்ட்டூன் தொடரைத் தொடர்ச்சியாகப் போட்டுக் காட்டினார்கள். இன்னொரு குழுவுக்கு, அப்படி எதுவும் விசேஷமான கவனம் செலுத்தப்படவில்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, பாப்பாய் கார்ட்டூன் தொடரைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள், அவர்களது அன்றாட உணவில் அதிக அளவில் கீரையைச் சேர்க்கத் துவங்கினார்கள். அதுநாள்வரை கீரையே சாப்பிடாதவர்கள், கீரையின் மகத்துவத்தை உணர்ந்து, உணவில் கீரையை விரும்பிச் சேர்க்க ஆரம்பித்தனர் என்பது அறிவியல்பூர்வமாக உலகுக்கு நிரூபணம் ஆனது. அதனால்தான், இன்றளவும் அமெரிக்கா போன்ற நாடுகளில், தொலைக்காட்சியில் பாப்பாய் தொடர் வெளியாகும்போது, அதைக் குழந்தைகள் காணப் பெற்றோர்கள் எந்தத் தடையும் சொல்வதில்லை.

யார் இந்த பாப்பாய்? இப்படிப்பட்ட ஒரு மகத்தான ஹீரோ திட்டமிடப்பட்டு உருவாக்கப்படவில்லை. சொல்லப் போனால், முதன்முதலில் பாப்பாய் அறிமுகமானதே ஒரு கெஸ்ட் ரோலில்தான். அதுவும் ஏற்கனவே பத்தாண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்துகொண்டிருந்த ஒரு காமிக்ஸ் தொடரில், புதியதாக அறிமுகம் ஆகும் ஒரு கதாபாத்திரம், அதுவரையில் அந்தத் தொடர் பெற்றிருந்த மகத்தான வெற்றியையும் அடையாளத்தையும் முழுவதுமாக மாற்றி, அந்தத் தொடரையே தன்னுடைய அடையாளமாக மாற்றிக்காட்ட இயலும் என்று நிரூபித்தது பாப்பாய்.

பசலைக்கீரை பாப்பாய்!

1919, டிசம்பர் 19 -ல் தான் முதன்முதலில் ‘நியூயார்க் ஜர்னல்’ என்ற செய்தித்தாளில், ‘திம்பிள் தியேட்டர்’ என்ற காமிக்ஸ் தொடர் ஆரம்பித்தது.

எல்சீ க்ரைஸ்லர் சீகர் என்ற ஓவியர்தான் இந்த காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தவர். இது, இவருடைய மூன்றாவது காமிக்ஸ் தொடராகும். ‘ஆலிவ் ஆயில்’ என்ற பெயர்கொண்ட ஓர் ஒல்லியான இளம் பெண்தான் இந்த காமிக்ஸ் தொடரின் ஹீரோயின். இந்த காமிக்ஸ் தொடரின் இன்னுமொரு ஹைலைட்டான விஷயம், இதில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே சமையல், கிச்சன் சார்ந்த பெயர்கள்தான் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆலிவ் ஆயிலின் அண்ணன் பெயர், காஸ்டர் ஆயில் (விளக்கெண்ணய்). இவருடைய நண்பரின் பெயர், ஹோம் கிரேவி (குழம்பு). இப்படியாக, இவர்களைவைத்து ஜாலியாக நடக்கும் சம்பவங்களைக்கொண்டுதான் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

ஹீரோவின் வருகை: இப்படி நகைச்சுவையாகவே பத்தாண்டுகள் இந்தத் தொடர் சென்றது. பிறகு, ஜனவரி 17, 1929-ம் ஆண்டு வெளியான கதையில்தான், நம்ம ஹீரோ வருகிறார். ஒரு தீவில் புதையல் இருப்பதைத் தெரிந்துகொண்ட ஹோம் கிரேவி, அங்கே செல்ல ஒரு கப்பலோட்டுபவரை (மாலுமி) வாடகைக்கு நியமிக்கிறார். அந்த மாலுமிதான் நம்ம பாப்பாய். அந்தக் கதையில் சில பல சாகசங்களைச் செய்து, நமது நண்பர்களைக் காப்பாற்றுகிறார். அதன்பிறகு, கதை வழக்கம்போல ஆலிவ் ஆயில், காஸ்டர் ஆயில், ஹோம் கிரேவியின் காமெடி கலாட்டாக்களால் தொடர்கிறது. ஆனால், இதற்கு முந்தைய புதையல் தீவு சாகசத்தில் வந்த ஹீரோவைப் பல வாசகர்கள் விரும்பிக் கேட்க, கதாசிரியர் சீகர் பாப்பாயை மறுபடியும் கதையில் கொண்டுவருகிறார். அதன் பிறகு, ஒவ்வொரு கதையிலும் பாப்பாய் தொடர்ச்சியாக வர, அவரது கள்ளமில்லா குணமும் காமெடி சேட்டைகளும் மக்களுக்குப் பிடித்துப்போக, மெதுவாக பாப்பாய், இந்தத் தொடரின் நாயகனாக மாறிவிட்டார்.

பசலைக்கீரை பாப்பாய்!

சூப்பர் ஹீரோபோலப் பயங்கரமான உடல்வலிமைபெறும் பாப்பாய், ஒரு தேர்ந்த துப்பறியும் நிபுணர். புதிது புதிதாக இயந்திரங்களை வடிவமைப்பதில், கண்டுபிடிப்பதில், கப்பலோட்டுவதில், சண்டையில் எனப் பல விஷயங்களில் எக்ஸ்பர்ட். இவரிடம், புகை பிடிக்கும் குழாய் ஒன்று எப்போதுமே இருக்கும். ஆனால், அதை வைத்துச் சாகசங்களை மட்டுமே செய்வதால், மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. கைவிடப்பட்ட ஒரு குழந்தையை (இனிப்புப் பட்டாணி-ஸ்வீட்-பீ) இவர் எடுத்து வளர்க்கிறார். புகை பிடிக்காத, கீரையை விரும்பிச் சாப்பிடும் ஒரு ஹீரோவை, எந்தப் பெற்றோர்களுக்குத்தான் பிடிக்காது?

1994-ம் ஆண்டுடன் பாப்பாய்-யின் தினசரி காமிக்ஸ் தொடர் நின்று, இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அவரது புதிய காமிக்ஸ் வந்துகொண்டிருக்கிறது. IDW காமிக்ஸ் நிறுவனம், பாப்பாய்-யின் மிகச் சிறந்த கதைகளை இப்போது ஒவ்வொரு மாதமும் மறுபதிப்பு செய்துவருகின்றனர். அப்படியாக, இந்த மாதம் செப்டம்பரில் வந்துள்ளதுதான், இந்த ‘பயங்கரப் பாட்டி’ என்ற காமிக்ஸ்.

பசலைக்கீரை பாப்பாய்!

கதை: பயங்கரப் பாட்டி

கதாசிரியர் & ஓவியர்: பட் சேஜன்டோர்ஃப்

மொழி: ஆங்கிலம் (ஆரம்ப நிலை).

வயது: 8 வயது முதல் படிக்கலாம்

வெளியீடு: September 2017.

பதிப்பாளர்: IDW Comics

புத்தக அளவு: 22.2 x 28.6 CM

பக்கங்கள்: 40

விலை: 1.99 $

வாங்க: Amazon.in இணையதளம்

கதை: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதை அறிவிக்கிறார்கள். அந்த விருதைப் பெறுபவர்தான், பாப்பாய்-யின் பாட்டி என்று தெரியவர, அவரைத் தேடிச்செல்கிறார் பாப்பாய். அப்போது, பக்கத்து நாட்டு மன்னர் பாப்பாய்-யின் உதவி கேட்டு வருகிறார். அவரது நாட்டில் ஒரு பயங்கர பாட்டி வந்து, மன்னராட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, மாளிகைகளை அடித்துத் துவம்சம் செய்வதாகச் சொல்கிறார்.

பாப்பாய் தனது பாட்டியைத் தேடிக் கண்டுபிடித்தாரா?

பக்கத்து நாட்டுப் புரட்சிப் பெண்மணி யார்?

பயங்கர பாட்டியை பாப்பாய் எப்படிச் சமாளித்தார்? என்பதை ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கதை வரிசை: 61-வது இதழ்.

சிறப்பு அம்சம்: ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தில் ஊறிப்போன அமெரிக்க இளையதலைமுறையையே ஆரோக்கியமான உணவுப் பாதையில் நடத்திக்கொண்டிருப்பவர் பாப்பாய். ராபின் வில்லியம்ஸ் நடித்த ஹாலிவுட் சினிமா முதல் கீரை உணவகங்கள் இவருக்கு வைத்த சிலை வரை ஒரு வழிகாட்டியாகவே வாழ்கிறார் பாப்பாய்.