Published:Updated:

ராணுவ அதிகாரி ஆகலாம் !

பா.பிரவீன்குமார்

ராணுவ அதிகாரி ஆகலாம் !

பா.பிரவீன்குமார்

Published:Updated:
##~##

ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் விளம்பரம் பார்த்துக் கூடும் கூட்டத்தைப் பார்த்து இருக்கீங்களா? ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடுவார்கள்.

ஆம், இந்திய ராணுவத்துக்குப் போதுமான அளவுக்கு வீரர்கள் கிடைக்கிறார்கள். ஆனால், அவர்களை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் பதவிகளுக்குத்தான் நிறையவே தட்டுப்பாடு. அரசு எவ்வளவோ முயற்சி செய்தும், தகுதியான அதிகாரிகள் தட்டுப்பாடு மட்டும் இன்னும் தீரவில்லை. இத்தனைக்கும் இந்தப் பதவிக்குப் பெரிய படிப்பு அவசியம் இல்லை. ப்ளஸ் டூ பாஸ் செய்தாலே போதும், ராணுவக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராணுவத்தில் அதிகாரியாகச் சேர பல தேர்வுகள் இருக்கின்றன. ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நடக்கும். வருடத்துக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படும். யுபிஎஸ்சி இணையதளத்துக்குப் போய், நேரடியாக இதற்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யலாம். இதற்கான தகுதி ஒவ்வொரு பிரிவுக்கும் வேறுபடும்.

நீங்கள் தரைப் படையில் சேர விரும்பினால், ப்ளஸ் டூ தான் தகுதி. பிளஸ் 2 எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் படித்து இருக்கலாம். அதுவே, கப்பல் மற்றும் விமானப் படைப் பிரிவில் சேர விரும்பினால் ப்ளஸ் டூ-வில் இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். விமானப் படையில் பைலட் ஆக இன்னும் சில தனித் தேர்வுகளையும் சந்திக்க வேண்டும். வயது 16.5-ல் இருந்து 19-க்குள் இருக்க வேண்டும். இதில் பெண்கள் சேர முடியாது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும்தான் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். பெண்கள் ராணுவ அதிகாரியாக வர முடியாதா என்ற கவலை வேண்டாம். பட்டப் படிப்பு முடித்ததும் பெண்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, ராணுவ அதிகாரியாகச் சேர்த்துக் கொள்வார்கள். அதற்கெனத் தனி நுழைவுத் தேர்வு உண்டு.

ராணுவ அதிகாரி ஆகலாம் !

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் சேர்வதற்கான தேர்வுகளை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில் நுழைவுத் தேர்வு. இதை யுபிஎஸ்சி நடத்தும். இரண்டாவது, மாணவர்களின் புத்திக்கூர்மை மற்றும் தனித் திறமைகளைக் கண்டறியும் நேர்முகத் தேர்வு. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சர்வீஸ் மெடிக்கல் போர்டின் மருத்துவப் பரிசோதனை நடக்கும். இந்த மூன்றிலும் வெற்றி பெற்றால்தான், சேர முடியும்.

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் சேரும் மாணவர்களுக்கு, பி.ஏ., பி.எஸ்.சி., டிகிரி வகுப்புகள் நடத்தப்படும். மேலும், ராணுவ வரலாறு, பயிற்சிகள் என இன்னும் சில விஷயங்கள் கற்றுக்கொடுப்பார்கள். மூன்று வருடப் படிப்புக்குப் பிறகு, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்  வழங்கப்படும். அதன் பிறகு, ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகள் ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். ராணுவப் பயிற்சியின்போதே...  மாதம் 8,000 ரூபாய் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.

தரைப் படைப் பிரிவினருக்கு, டேராடூனில் இருக்கிற ஐஎம்ஏ-விலும், கப்பல் படைப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கோவாவில் இருக்கிற நேவல் அகாடமியிலும், விமானப் படைப் பிரிவினருக்கு, ஹைதராபாத்தில் இருக்கிற ஏர்ஃபோர்ஸ் அகாடமியிலும் பயிற்சி அளிக்கப்பட்டு, பாதுகாப்புப் படையில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள்.

மற்றப் பணிகளில் இல்லாத ஒரு கம்பீரம், மரியாதை ராணுவப் பணியில் இருக்கும். நாட்டின், நாட்டு மக்களின் பாதுகாப்பே நம் கையில்தான் என்ற பெருமையும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு...
http://www.upsc.gov.in/ என்ற இணைய தளத்தைப் பாருங்கள்...