Published:Updated:

ஜில்லுனு ஒரு கதை

கே.ஆர்.ராஜமாணிக்கம் பொன்.காசிராஜன்

ஜில்லுனு ஒரு கதை

கே.ஆர்.ராஜமாணிக்கம் பொன்.காசிராஜன்

Published:Updated:

 நன்றி: ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ், சென்னை.

##~##
ஜில்லுனு ஒரு கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் இது ஜில் குளிர்காலம். இருந்தாலும் ஐஸ்கிரீம் அசைன்மென்ட் என்றால், உற்சாகத்துக்குச் சொல்லணுமா? 'வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, பட்டர் ஸ்காட்ச் என விதவிதமான ஐஸ்கிரீம்கள் எப்படித் தயாராகின்றன என்பதை அறியத்தான் அத்தனை ஆர்வம்!

''டேய்... ஆளுக்கு எத்தனை ஐஸ்கிரீம்டா தருவாங்க?'' என்று தொடங்கினான் தமிழ் திலீபன். ''அவங்க தர்றாங்களோ இல்லையோ... நீ அநியாயத்துக்கு உருகிறியே'' என்று கிண்டல் அடித்தான் அஜித்குமார். ''டேய்... எங்கெங்கேயோ ஐஸ்கிரீம் ஃபேக்டரி இருக்கே... இமயமலையில் எவ்ளோ ஐஸ் இருக்கு? அங்க ஏன்டா ஆரம்பிக்க மாட்டேங்கிறாங்க?'' -இது இம்ரானின் சந்தேகம். ''நீயே ஆரம்பிச்சுடேன். ரஜினி அங்கிள் அங்கே வரும்போது, உன்கிட்டேதான் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவாரு'' என்று ரிஜ்வி கிண்டலடிக்க, வேனுக்குள் வெடிச் சிரிப்பு. சென்னை ரெட் ஹில்ஸ்ஸில் உள்ள ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்கிரீம் ப்ளான்ட்டுக்கு சென்றோம். மேனேஜர் சத்தியநாராயணன் நம்மை வரவேற்றார். ஐஸ்கிரீம் தயாரிப்பு பற்றி, க்வாலிட்டி காப்புறுதி அலுவலர் ஷங்கர் நம்மை ஒரு மினி ஜில் டூருக்கு அழைத்தார்.

அங்கே தயாராய் இருந்தன... சுட்டிகள் அணிந்துகொள்ள சிவப்பு நிறக் கோட்டுகளும், பெரியவர்களுக்கு வெள்ளை நிறக் கோட்டுகளும். கூடவே பச்சை நிறத் தலைக்கவசமும் கொடுக்கப்பட, ''இது எதுக்கு அங்கிள்?'' என்றான் கவின். ''உங்க தலைமுடி எதுவும் பறந்து ஐஸ்கிரீம்ல விழுந்துடக் கூடாதுல்ல, அதான்!'' என்றார் ஷங்கர். ''அப்படின்னா அஜித் வந்தா ரெண்டு கொடுங்க அங்கிள். ஏன்னா, அவர் பேரே 'தல’ ஆச்சே'' என்றாள் ஸ்வாதிகா.

''பாப்பா, தம்பிகளா... உங்க கழுத்துல காதுல இருக்கிற நகைகளை எல்லாம் நல்லா கவர் பண்ணிக்கங்க'' என்று சொல்லியபடியே விரல்களில் இருக்கும் மோதிரங்கள் கீழே விழாமல் இருக்க, விரலோடு பேண்ட் செய்தார்கள். குழந்தைகளுக்கு ஒரே கும்மாளச் சிரிப்பு. அடுத்து, ஓர் அறைக்குள் நுழைய, அங்கே மெட்டல் டிடெக்டர் மூலம் தலை முதல் கால் வரை செக்கிங் நடந்தது. அப்போது... ஒரு சுட்டியின் இடுப்பு அருகே டிடெக்டர் வரும்போது, 'பீப் பீப்’ என்று அலற ஆரம்பிக்கவே, சுட்டிகள் எல்லோரும் பயந்துவிட்டார்கள். ''பயப்படாதீங்க! பெல்ட்டுக்குத்தான் மெட்டல் டிடெக்டர் கத்தியிருக்கு. ஓகே. ஒண்ணும் பிரச்னை இல்லை'' என்று செக் பண்ணியவர் சொல்ல, அடுத்து ஓர் அறைக்குள் கூட்டிப் போனார்கள். அங்கே வரிசையாய் மூன்று டேங்குகள்.

''இந்த டேங்க்ல எல்லாம் என்ன அங்கிள் இருக்கு?'' என்றான் பிரபாகரன்.

ஜில்லுனு ஒரு கதை

''மூணு டேங்க்லேயும் பால்தான் இருக்கு. ஒரு பைப்லைன் மூலமா பாலை நிரப்பிடுவோம். முதல் கேன்ல 40-50 டிகிரி வரைக்கும், 2-வது கேன்ல 50-60 டிகிரி வரைக்கும், 3-வது கேன்ல 70-80 டிகிரி வரையும் பால் சூடாகும். 2-வது கேனில் வெண்ணெயைச் சேர்ப்போம். அதிகக் கொதிநிலையில் இருக்கிறப்போ கிருமிகள் செத்துரும்னு நீங்க படிச்சிருப்பீங்க. அதேதான் இங்கேயும். மூணாவது கேன்ல சூடாகிறப்போ எந்தக் கிருமியும் இல்லாம பால் சூப்பர் சுத்தம் ஆயிடும்!'' என்று விளக்கினார் ஷங்கர்.

அடுத்த அறைக்குள் நுழைந்தபோது பால் வாசனை தூக்கியது. சற்று நேரம் அதில் சிறு துளியாய்க் கரைந்து, கலந்துவிட்டதுபோல் உணர்ந்தோம்.

''இங்கே உள்ள  பதப்படுத்தும் (Homogenizer) மெஷினில் பால் மிக்ஸர் செலுத்தப்படும். ஏற்கெனவே பாலில் இருக்கிற கொழுப்புகள் வெவ்வேறு அளவுகளில், வடிவத்தில் இருக்கும். ஆனா, இங்கே மைக்ரான் அளவுள்ள துவாரங்கள் வழியா, 2,500 பி.எஸ்.ஐ. அழுத்தத்தில் பால்  மிக்ஸர் போகும்போது, எல்லாக் கொழுப்புகளும் ஒரே அளவுடையதா மாறிடும். அப்போதான் ஐஸ்கிரீமுக்கான வடிவம் கிடைக்கும். அதுக்கப்புறமா 'ஜில்லரு’க்குள் செலுத்தப்படும். முதலில் பாலைச் சூடுபடுத்தினோம் இல்லையா... இப்போ அப்படியே தலைகீழ் பிராசஸ். மைனஸ் 5 டிகிரிக்கு குளிரூட்டணும். அப்புறம் என்ன, பயங்கர ஜில் ஆயிடும். அடுத்த நிலை... ஸ்டோரேஜ். அப்புறம் அதில் என்ன ஃபிளேவர் வேணுமோ அந்த ஃபிளேவரைச் சேர்க்கணும்'' என்று விரிவாக விளக்கினார் ஷங்கர்.

ஜில்லுனு ஒரு கதை

இடையே வேறு ஓர் அறைக்குச் சென்றால்... அங்கேதான் நமக்குத் தேவையான எல்லா ஐட்டமும் இருக்கு. முந்திரி, பாதாமைச் சுத்தம் செய்து, வறுத்து, தயாரிப்பு அறைக்கு அனுப்ப, இயந்திரம் மூலம் அவை ஐஸ்கிரீம் கப்களுக்குள் தானாகவே சேர்ந்துவிடுகின்றன. அடுத்து, ஃப்ளேவர் சேர்க்கப்பட்ட மிக்ஸர், ஐஸ்கிரீம் மெஷினுக்குள் அனுப்பி நன்றாகக் கடையப்படுகிறது (Churning). வெளியே பால் ஐஸாக குச்சியுடன் மேலே வந்து, அடுத்த சில நொடிகளில்...சாக்லேட் ஃப்ளேவரில் நனைத்து எடுக்கும்போது, எல்லாச் சுட்டிகளின் கண்களிலுமே பல்பு எரிந்தது, ஐஸ்கிரீம் பல்பு!

ஜில்லுனு ஒரு கதை

அடுத்து, அந்த ஐஸ் அழகிய கவருக்குள் சென்று சீல் வைக்கப்பட்டு வெளியே வர... பேக் செய்து பெட்டிகளில் அடைத்தார்கள். பிறகு அந்தப் பெட்டிகள், கடினப் (Harding) படுத்தும் அறைக்குள் அனுப்பப்படுகின்றன. கப் மற்றும் டப்களில் சேகரித்த ஐஸ்கிரீம் பெட்டிகளும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஹார்டிங் செய்யப்பட்டு, ஸ்டோரேஜ் அறையில் மைனஸ் 25 டிகிரியில் வைக்கப்படுகின்றன. அவ்வளவுதான். அடுத்து 'ஐஸ் வாங்கலையோ ஐஸ்’தான்.  

ஜில்லுனு ஒரு கதை

ஐஸ்கிரீம் தயாரிப்பு முடிந்துவிட்டது என்றாலும், நாங்கள் அந்த மைனஸ் 25 டிகிரி அறைக்குள் போய்ப் பார்க்க ஆசைப்பட்டோம். இரண்டு பேர் சேர்ந்து கதவை இழுக்க, புகை மூட்டமாய் உடம்பை விறைக்கவைக்கும் குளிர் சாரலாய் நனைக்க, சில வினாடிகள் ஜில்லிட்டுவிட்டு குளிர் தாங்கமுடியாமல் வெளியே ஓடிவந்தோம்.

ஜில்லுனு ஒரு கதை

எல்லோருக்கும் 'கை நிறைய’ ஐஸ்கிரீம் வழங்கப்பட்டன.  ''ஐஸ்கிரீமைப் பார்லர்ல பார்த்திருப்பே, வண்டியில பார்த்திருப்பே, அடுத்தவங்க சாப்பிட்டுப் பார்த்திருப்பே. ஃபேக்டரியில போய்ப் பார்த்திருக்கியா? என்றால், நான் பார்த்திருக்கேனேன்னு ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சொல்வேனே'' என்று ஹசீனா சொல்லவும், அதிரடியாய்ப் பரவியது ஐஸ்கிரீம் சிரிப்பு.