Published:Updated:

மிஸ்டர் 'டபுள் டக்கர்' !

பூ.கொ.சரவணன் ஹாசிப்கான்

மிஸ்டர் 'டபுள் டக்கர்' !

பூ.கொ.சரவணன் ஹாசிப்கான்

Published:Updated:
##~##

ஒருநாள் போட்டி, ஆரம்பக் காலத்தில் 60 ஓவர்களாக இருந்தது. அப்போது, துவக்க வீரராக இறங்கி, 60 ஓவர்கள் விளையாடி, கடைசி வரை களத்தில் நின்று, 36 ரன்கள் அடித்தவர் சுனில் கவாஸ்கர். அவர், டிசம்பர் 8- ஆம் தேதி, இந்தூரில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் ஆட்டத்தை வர்ணனை செய்துகொண்டு இருந்தார். அப்போதுதான் அந்த உலக சாதனை நடந்தது!

துவக்க வீரராக இறங்கி, 44 ஓவர்கள் வரை நின்று,  இரட்டைச் சதத்தை எடுத்தார் வீரேந்திர சேவாக். 149 பந்துகளில் 219 ரன்களைக் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சச்சினின் நூறாவது சதத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்துபோன ரசிகர்களுக்கு, இதன் மூலம் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டார் சேவாக்.

கடந்த ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டைச் சதத்தை சச்சின் எடுத்த பிறகு, ''சாதனைகள் முறியடிக்கப்படக் கூடியதே. இந்த சாதனையும் என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படும். அதை ஒரு இந்தியர் செய்தால் மகிழ்வேன்'' என்றார். குருவின்  ஆசையை சிஷ்யனே நிறைவேற்றிவிட்டார்.

மிஸ்டர் 'டபுள் டக்கர்' !

ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதத்தை நெருங்குவது என்பது நிஜமாகவே குறிஞ்சி பூப்பதைப் போன்றது. விவியன் ரிச்சர்ட் 1984-ல் எடுத்த 189 ரன்கள் சாதனையை, 13 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்கள் எடுத்து முறியடித்தார். அதை 200 ரன்கள் மூலம் 13 ஆண்டுகள் கழித்து சச்சின் முறியடித்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்குள் சச்சினின் சாதனையை முறியடித்த சேவாக்கோ ''ஷேன் வாட்ஸன் அல்லது கிறிஸ் கெய்ல் எனது இந்தச் சாதனையை முறியடிக்கலாம்'' என்று அடக்கத்துடன் சொல்கிறார்.

காரணம், தனிப்பட்ட சாதனைகளைப்பற்றி கவலைப்படாதவர் சேவாக். மற்ற வீரர்கள் எல்லாம் சதத்தை நெருங்கும் சமயத்தில், வேகத்தைக் குறைத்துக்கொள்வார்கள். ஆனால், சேவாக் அப்படி இல்லை. அது ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, சரியான பந்து வந்தால் துணிச்சலுடன் பவுண்டரிக்கோ, சிக்ஸருக்கோ தூக்குவார். ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 196 ரன்களுக்கு தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார். இதனால், இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது. வெளியே வந்தவரிடம் ''இந்தப் பந்தை மெதுவாக அடித்து இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு புன்னகையுடன் அவர் சொன்ன பதில், ''இல்லை. 299 ரன்களில் இருந்து இருந்தாலும் அப்படித்தான் அடித்து இருப்பேன்.''

டெஸ்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையுடன் இருப்பவரும் நம் சேவாக் மட்டுமே!