Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கல்பனா சோழன் ஹாசிப்கான்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கல்பனா சோழன் ஹாசிப்கான்

Published:Updated:
##~##

இரண்டு கைகளாலும் கண்ணைக் கசக்கியபடி விளையாட்டு மைதானத்தில் புரண்டுகொண்டு இருந்தான் டோனி. அவனைச் சுற்றி ராஜ், சச்சின், மீரா, பிரியா, தேவி எல்லோரும்  இருந்தார்கள்.   எல்லோர் உடலிலும் மண், புழுதி. அந்த வழியாக வந்த மாயா டீச்சர், பதறிவிட்டார்.

'என்ன நடக்குது இங்கே?' என்ற குரலைக் கேட்டதும், சுட்டிகளின் கவனம் டீச்சர் பக்கம் திரும்பியது. எல்லோரையும் ஒரு பக்கம் ஒதுங்கி நிற்கவைத்துவிட்டு, டோனியின் கண்ணில் விழுந்த மண் துகளை மெள்ள அகற்றி, கொஞ்சம் தண்ணீரில் கண்களைக் கழுவச் சொன்னார் டீச்சர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இப்படியா எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் மண் வாரி இறைக்கிறது? என்ன விளையாட்டு? கண் எவ்வளவு சென்சிட்டிவ் தெரியுமா?' என்றவர் குரலில் இது வரை இல்லாத கண்டிப்பு.

'இப்படி ஆகும்னு தெரியாது. ஸாரி டீச்சர்.' - சச்சின் அழாத குறையாக மன்னிப்புக் கேட்டான்.

'எப்பவுமே கண்களை ரொம்பப் பத்திரமாப் பாத்துக்கணும்.' என்ற மாயா டீச்சரிடம் நெருங்கி வந்த டோனி, ''கண்ணைத் திறக்க முடியாமல், எதையும் பார்க்க முடியாமல் கொஞ்ச நேரம் பயந்தே போயிட்டேன்' என்றான் பதற்றமாக.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'நாங்களும் ரொம்பப் பயந்துட்டோம்'' என்றார்கள் அனைவரும்.

'சரி, இனி மேல் பத்திரமா இருங்க கண்ணுங்களா...' என்றார் மாயா டீச்சர்.

'அது என்ன... அம்மா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி, பாட்டி, எல்லாரும் கண்ணுங்களான்னே கூப்பிடுறீங்க?' என்றாள் தேவி.

'இனிமேல் மூக்குங்களா, காலுங்களா, முதுகுங்களான்னு கூப்பிடச் சொல்லலாம்'' என்று வம்படியாகச் சொன்னாள் பிரியா.

இந்தப் பேச்சுக்களை ரசித்தவாறு... 'இன்னும் கொஞ்ச நேரத்தில் அது உங்களுக்கே புரியும்'' என்று டீச்சர் விரித்த மந்திரக் கம்பளம், கண் வடிவத்தில் இருந்தது.

சற்று முன் ஏற்பட்ட டென்ஷன்  இருந்த இடம் தெரியாமல், எல்லாரும் உற்சாகக் கூச்சலுடன்  கம்பளத்தில் ஏறினார்கள்.

ஒரு பிரபலமான கண் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையின் மூலை முடுக்கு எல்லாம் பறந்து பார்த்தார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'இந்தக் கண் எப்படி வேலை செய்யுது?' என்று அடிப்படையில் இருந்து ஆரம்பித்தான் ராஜ்.

'நம்ம கண் ஒரு கேமரா மாதிரி. கண் முன்னால் தெரிகிற எல்லாவற்றையும் அது படம் பிடிக்குது. கேமரா மாதிரியான வெளிச்சம் ஒரு சின்ன ஓட்டை வழியா உள்ளே போகுது. கேமராவோட பாகங்கள் மாதிரியே, எந்த அளவு வெளிச்சம் இருக்கோ... அதுக்கு ஏற்ற மாதிரி, தானாகச் சுருங்கி விரிஞ்சு உருவத்தைப் படம் பிடிக்குது. இப்படி  கண்ணோட பாகங்கள் பலவும் சேர்ந்து பிடிக்கிற படம், கண் நரம்புகள் மூலமா மூளைக்குப் போகுது. அப்போது, மூளை அதன் உருவத்தை அடையாளம் தெரிஞ்சுக்குது.' என்று அறையின் ஒரு பக்கத்துச் சுவர் முழுக்க வரையப்பட்ட கண்ணின் முழு விளக்கப் படத்தைக் காட்டிப் புரியவைத்தார் மாயா டீச்சர்.

'இந்தச் சின்னக் கண் பின்னால் இவ்வளவு நடக்குதா?'' என்று முட்டைக் கண் விரியக் கேட்டான் சச்சின்.

'இல்லையா பின்னே? இந்தக் கண் மூலமாகத்தான் நாம் எல்லாத்தையும் பார்க்கிறோம். கொஞ்ச நேரம் கண்ணை மூடி உட்கார்ந்து பாருங்க. அப்போது தெரியும் வித்தியாசம்.'' என்றார் டீச்சர்.

'கண்ணை மூடினால் எதையும் பார்க்க முடியாதா?' என்று கேட்டவாறு, அந்த இடத்திலேயே கண்களை மூடிப் பார்த்தாள் தேவி.

ஏதோ கண் முன்னால் அசைவது போல் இருந்ததே தவிர, எதுவும் தெரியவில்லை. இருட்டாக இருந்தது. அந்த இருட்டுக்குள் ஏதோ வெளிச்சம் தெரிவது போலவும் இருந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'என்னால முடியாதுப்பா' என்று படக்கென்று கண்களைத் திறந்தாள்.

அவள் கண் முன்னால் நின்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்த மீரா, அவள் படீரென்று கண் திறந்ததும் சற்று நகர்ந்தாள்.

''இயற்கையாகவே, சுவர் மாதிரி நம்ம இமையும், இமை முடியும் இருக்கு. இவையே தூசி, பூச்சி மாதிரி எதுவும் கண்ணுக்குள்ளே விழாமப் பாதுகாக்குது. இந்த இமை, கண்ணை மூடித் திறக்கிறது மூலமாக, கண்ணுக்குள்ளே விழுந்த தூசியை வெளியே தள்ளிடும். அடிக்கடி இமைப்பதன் மூலமாகவும், அழுகை மூலமாகவும் கண்ணின் ஈரத்தையும் காயாமல் வெச்சுக்கும். ஏகப்பட்ட வெளிச்சம் இருந்தால், தானாக கண்ணை மூடிடும்.''

'கண் ரொம்ப மஞ்சளாக இருந்தால், மஞ்சள் காமாலைன்னும் ஒருத்தர் கண்களைப் பார்த்து அவங்களுக்கு என்ன வியாதி இருக்குன்னும் சொல்லலாமா?'

'கண்ணில் சில வியாதிகளோட அறிகுறி தெரியும். ஆனால், அதை மருத்துவர்தான் சோதனை பண்ணிப் பார்த்து உறுதி செய்யணும்.' என்றார் டீச்சர்.

அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த மீரா,  'ஏன் டீச்சர் இந்த ஹாஸ்பிட்டலில் இருக்கிற எல்லாருக்கும் கண் வியாதியா? எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்களே?' என்றாள்.

மாயா டீச்சர் மெள்ளச் சிரித்தபடி, 'அதுவா, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்துக்காகப் போட்டிருக்காங்க. டாக்டர்கள் நோயாளிகளின் கண்களைச் சோதனை பண்றதுக்காகப் போட்டிருக்காங்க. அதோ அந்த  நர்ஸுக்கு, தூரத்தில் இருக்கிற பொருட்கள் தெரியாது. அந்தப் பார்வைக் குறைபாட்டுக்காக கண்ணாடி போட்டிருக்காங்க.' என்றார்.

'அதோ அந்த அங்கிள் உள்ளே நுழையும்போது கூலிங்கிளாஸ் மாதிரி இருந்தது. இப்போது, அந்த ஆன்ட்டி கண்ணாடி மாதிரி வெள்ளையா இருக்கே?'' என்று அங்கும் இங்கும் கைகளை வீசிக் கேட்டான் ராஜ்.

'பரவாயில்லையே... நல்லாத்தான் கவனிக்கிறே. அவர் போட்டு இருக்கிற கண்ணாடியில் 'போட்டோக்ரோமிக்’ படலம் பூசி இருக்கு. அதனால், வெயில் அதிகம் இருக்கிற இடத்தில் கூலிங்கிளாஸ் ஆகவும், உள்ளே நுழைஞ்சதும் சாதாரணக் கண்ணாடியாகவும் இருக்கும்.'

இவர்கள் கேள்விகள் நிற்பதாகத் தெரியவில்லை. சுட்டிகளை மந்திரக் கம்பளத்தில் ஏற்றினார். கேட்கிற மன நிலையில் இருக்கும்போதே கூடிய வரை சொல்லி வைப்போம் என்று, 'இதெல்லாம் நம்ம கண்ணே தன்னைப் பாதுகாத்துக்கிற வழி. நாமளும் கண்ணைப் பத்திரமாப் பாத்துக்கணும். வெயிலில் போகும்போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கலாம். கூரான சாமான்கள் பக்கத்தில் இருந்தால், கண்ணைக் குத்தாமல் பத்திரமா இருக்கணும். ரொம்ப நேரம் டி.வி. பார்க்கிறது, கம்ப்யூட்டர் பயன்படுத்துறது இதெல்லாம் கண்ணை ரொம்ப சீக்கிரமே சோர்வடையச் செய்துவிடும். கண் எல்லாம் வீங்கி, கண்ணுக்குள்ளே நூறு ஊசி வெச்சுக் குத்துகிற மாதிரி வலிக்கும். நிறைய ஓய்வு கொடுக்கணும். சரியான நேரத்துக்குப் படுத்து, அளவாகத் தூங்கணும்'' என்று மாயா டீச்சரும் அடுக்கிக்கொண்டே போனார்.

'என் கண்ணு இல்லே... நான் தர்ற எல்லாம் சாப்பிட்டால்  தான் என் கண்ணு, கண்ணோட கண்ணு எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும்னு எப்போ பார்த்தாலும் என் பாட்டி  சொல்லிட்டே இருக்காங்க.'  என்று அலுத்துக்கொண்டாள் பிரியா.

மந்திரக் கம்பளம் மைதானத்தில் வந்து இறங்கியது. மார்க்கெட்டுக்குப் போய் வருகிற வழியில்... பிரியாவைக் கூப்பிட வந்த பாட்டியின் காய்கறிப் பையில்... காரட், பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, எலுமிச்சை, பலா, மா, கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, முருங்கை, கருவேப்பிலை, சாத்துக்குடி, திராட்சை, நெல்லி, வெள்ளரி, பேரீச்சை, இளநீர்' என்று நிரம்பிக்கிடந்தன.

கண்ணால் காய்கறிக் கூடையை ஜாடை காட்டினாள் பிரியா.

அதைக் கண நேரத்துக்குள் கண்ட பாட்டியோ... 'என்ன... என் பேத்தி என்னைப்பத்தி குறை சொல்லி இருப்பாளே? இதெல்லாம் சாப்பிட்டுத்தான் இந்த வயசுலயும் இப்படி இருக்கேன். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க. அப்பறம் சொல்லுங்க' என்றார்.

மாயா டீச்சர், கூலிங்கிளாஸைக் கண்களில் ஏற்றி, கை அசைத்து சுட்டிகளை வழி அனுப்பி வைத்தார்.